அகிலத்தின் அருட்கொடை




அகிலத்தின் அருட்கொடை


கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்



நாமே! உம்மை அகிலங்களின் அருட்கொடையாகவே நாம் அனுப்பியுள்ளோம் (அல்குர்ஆன்)

முத்திரை நபியான முத்து முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலங்களின் அருட்பிளம்பாக உள்ளார்கள் என்பதையும், இது பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்குரிய தனித்துவமான பண்பு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவர்.

ஆலமீன் என்பது மனிதன், ஜின், மலக்குகள் உள்ளிட்ட அல்லாஹ் தவிர உள்ள பிரபஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகும்.  

றிஸாலத் என்ற தூதுத்துவத்தின் மூலமே நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருளாக அருளப்பட்டுள்ளார்கள். அன்னாரின் தூதுத்துவம் - றிஸாலத் - அகிலங்களுக்கு பொதுமையாகவே உள்ளது. அதனை நபியவர்களே படைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளேன் (முஸ்லிம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

றிஸாலத்துவம் எப்படி அனைத்து படைப்புக்களுக்கும் பொதுவானதோ அப்படியே அவர்களின் றஹ்மத்தும் பொதுவானதாகும்.

றஹ்மத் என்பதற்கு றாஹிம் என்ற பொருள் கொடுத்து நபியே உம்மை அகிலத்தாருக்கு அருள் செய்யும் நிலையில் உம்மை அனுப்பியுள்ளோம் என்று மேற்படி திருவசனத்திற்கு முபஸ்ஸிரீன்கள் பொருள் கொடுத்துள்ளனர். இதன்படி, 

நபிகள் நாதர்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் உலகில் உள்ள ஒவ்வொரு அணுவுக்கும், துளிக்கும் அருளாக இருக்கின்றார்கள். ஒருவர் மற்றவர் மீது அருள்பாலிப்பதாயின் நான்கு விடயங்களில் பூரணமாக இருக்க வேண்டும்.

01. முதலில் றஹ்மத் செய்பவர் உயிருள்ளவராக இருக்க வேண்டும். மரணித்தவராக இருக்கக் கூடாது. மரணித்த உயிரற்றவரால் றஹ்மத் செய்வது அசாத்தியமாகும். உயிரில்லாதவர் அடுத்தவரின் உதவியின் அருளில் தங்கியிருப்பவராகும். எனவே, மரணித்த வெற்றுச்சடம் றஹ்மத் செய்யும் தகுதியை இழந்து விடுகின்றது. 

இதனால், நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் உயிருடன் (மஆதல்லாஹ்) இல்லாவிட்டால், அன்னார் அகிலத்தின் அருள் வடிவானவராக இருக்க முடியாது. திருக்குர்ஆனில் அண்ணலம் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருட் கொடையாளி என்று திருக்குர்ஆன் திட்டமாகக் கூறுவதிலிருந்து உத்தமத் திருத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

2. ஒருவர் உயிருடன் இருப்பதால் மாத்திரம் றஹ்மத் செய்பவராக ஆக முடியாது. றஹ்மத் செய்பவர் றஹ்மத்தைப் பெறுவோரின் நிலைகளைப் பற்றிய அறிவுள்ளவராக இல்லாதிருப்பின், அவர்களின் நிலையறிந்து எப்படி அருள் புரிய முடியும்?

ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தேவைகள் இருக்கும். தேவைகளின் வகைகளும், அளவுகளும் சமனாக இருக்கப் போவதில்லை. எல்லாத் தரப்பினருக்கும் எல்லா நிலையிலும் அன்னார் அருள் புரிபவர்களாக இருப்பதனால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணு உட்பட அனைத்தைப் பற்றியுமான  அறிவும், அவற்றின் தேவைகளின் வகையும், அளவும் பற்றிய அறிவும் அன்னாருக்குண்டு என்பது நிரூபணமாகின்றது.

3. அகிலம் பற்றிய அறிவும் இருப்பதால் மாத்திரம் மற்றவர்களுக்கு அருள் செய்பவராக ஆக முடியாது. அருள் புரிபவர் தனது றஹ்மத்தை றஹ்மத் செய்யப்படுபவருக்கு சேர்த்து வைக்கும் ஆற்றலும், சுதந்திரமும் பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக நம்மிடம் தங்கியிருக்கும் ஒருவர் இரவு பகலாக வணக்கத்திலேயே ஈடுபட்டு களைத்து பலவீனப்பட்டிருக்கும்போது, ஒரு கூட்டம் அநியாயமாக அவர் மீது அபாண்டமாக கொலை, கொள்ளை தொடர்பாக குற்றம் சுமத்தி தாக்க முனைகிறது.

இந்த நிலையில், ஒருவரை உதவிக்கு அழைக்கின்றார். அவர் மீது இவர் இரக்கப்படுகிறார். அவர் எக்குற்றமும் புரியாத அப்பாவி என்பதையும் நன்கு அறிகிறார். ஆயினும், இந்த அநியாயத்திலிருந்து இவரைக் காப்பாற்ற வேண்டுமாயின், அவர் ஓர் அப்பாவி! எக்குற்றமும் புரியாதவர்! என்பதை அறிந்திருப்பதுடன், அவரில் இரக்கப்படுவதால் மாத்திரம் காரியமாகிவிடாது.

அவர் மீதுள்ள இரக்கத்தை செயல்படுத்தும் ஆற்றலும், சுதந்திரமும் இவரிடம் இருக்க வேண்டும். றஸுலே அக்றம்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலம் அனைத்திற்கும் அருள் பாலிப்பவர். ஆதலால், தங்களது றஹ்மத்தை உலகின் எக்கோடியிலும் உள்ள அனைத்திலும் சேர்த்து வைக்கும் ஆற்றலும், சுதந்திரமும் அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

4. ஆற்றலும், சுதந்திரமும் இருப்பதுடன் காரியம் முடிந்து விடாது. றஹ்மத்தை பெறுபவர் றஹ்மத் செய்பவருக்கு அருகில் இருக்க வேண்டும் அல்லது, றஹ்மத் செய்பவர் றஹ்மத்தைப் பெறுபவருக்கு அருகில் இருக்க வேண்டும்.

ஆற்றலும், அறிவும், சுதந்திரமும் இருந்தும், றஹ்மத்தை வேண்டுபவர் தூரத்திலிருந்தால் றஹ்மத் புரிபவரால் எதுவும் செய்ய முடியாது. அதனால், கோமான் நபியவர்கள் தங்களது றூஹானிய்யத்தாலும், நூறானிய்யத்தாலும் அகிலத்தில் உள்ள அனைத்திற்கும் அருகில் இருக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. இதனை நபியவர்களே உலகத்தை உள்ளங்கையில் வைத்துப் பார்ப்பது போன்று பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார்கள். 

தனி நபர் ஒரே நேரத்தில் உலகில் அனைத்து இடங்களிலும் எப்படி தரிசனம் வழங்க முடியும்? என்று சிலர் ஐயம் எழுப்பலாம். ஒரு இடத்தில் நெருங்கும்போது மறு இடத்தில் தூரமாக வேண்டியதுதானே! என்று நியாயம் கூறலாம். ஒரே நேரத்தில் எல்லோரின் முன் நெருங்குவது எங்கனம் நியாயமாகும்?என்றும் கேட்கலாம்.

சடத்துவ நிலையில் இது சாத்தியமன்றுதான். இடம் காலத்திற்கு கட்டுப்பட்டுத்தான் சடம் சார்ந்த பொருள் செயற்பட முடியும். ஆனால், சூக்குமமான, அதீதமான ஒரு பொருளுக்கு இந்த வரையறை கிடையாது. காலம், வெளி இவரைக் கட்டுப்படுத்தாது. இது அறிவியலுக்கோ, ஷரீஅத்திற்கோ ஒருபோதும் எதிரானது  அல்ல.

ஒரு நபரின் சப்தம், படம், அலைவரிசையின் மூலம் எல்லோரிடமும் நெருங்கியிருக்கின்றது. றஸுலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருமேனி சூக்குமம் சார்ந்ததாகும். அவர்களின் உடலின் அதீதம் போன்று உலகில் எப்படைப்பும் கிடையாது. இதனால்தான் நபியவர்கள் உடலுடன் விண்ணகம் சென்றார்கள். வானவர் தலைவர் ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாமவர்கள் செல்லத் தயங்கிய இடத்தையும் கடந்து வந்தார்கள்.

நபியவர்கள் அதீதமான உடல் உள்ளவர்களாக இருப்பதனால் நாம் பருமன் மிக்க சடமானவர்களாக இருப்பினும் நபியவர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக உள்ளார்கள். ஒலி சூக்குமமானது. அதனால், காற்றின் அலையில் கலந்து உலகின் எக்கோடிக்கும் அது வியாபித்திருக்கிறது.

அதீதத்திற்கு காலம், இடம், தோற்றம், தூரம், கிட்ட எதுவும் கிடையாது. ஹளரத் முஜத்தித் அல்பதானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மக்தூபாத் பாகம் - 3 பக்கம் 187இல் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.

றஸுலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கு நிழல் கிடையாது. காரணம், அவர்களின் திருமேனி யாவற்றிலும் மிருதுவான சூக்குமமானதாகும். திருநபியவர்களின் திருமேனியின் சூக்குமத்தை விட மென்மையான மற்றுமொரு பொருள் இருப்பின் நிழல் விழும். அப்படியொரு பொருள் இல்லையென்பதனால்தான் நிழல் இல்லாதுள்ளது.

நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருவுடல் அதி உன்னத றூஹானிய்யத், நூறாணிய்யத்தின் நிலையில் உள்ளது. அதனால், அகிலத்தின் அருட்கொடையாக அண்ணலெம் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் இருப்பதனால், அகிலத்தின் அனைத்திலும் அண்மித்து இருப்பது அவசியமாகின்றது. அதனால்தான் அன்னாரின் றூஹானிய்யத்தும், நூறானியத்தும் மிக மிக நுட்பமான அதீதமாக உள்ளது. 

நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருட்கொடையாக இருக்கின்றார்கள் என்ற ஒரு திருவசனத்திலிருந்து  ஐந்து முக்கிய விடயங்கள் தெளிவாகி விட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!