*மாமறை விளக்கும் மாநபி*!

 *மாமறை விளக்கும் மாநபி*!


கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்.

இறைத் தூதுவர்கள் தமது சத்திய முழக்கத்தை மக்களுக்கு முன்னே, வைத்தபோது அம்மக்கள் அதனை ஏற்கமறுத்து அவர்களை எள்ளி நகையாடினர். அவதூறுகளை அள்ளி வீசினர். அப்பொழுதெல்லாம் பொல்லாங்கு உரைத்த புல்லர்களுக்கு அந்தந்த நபிமார்களே பதிலடிகள் கொடுத்தனர்.

ஆனால் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கெதிராக அவதூறுகள் கிளப்பிய மக்களுக்கு இறைவனே தன் புறத்திலிருந்து சாட்டையடி கொடுத்தான்.

அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை கீழே தருகின்றோம்.

நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூதாயத்தினர் நூஹ் நபியவர்களை நோக்கி நீர் பகிரங்கமான வழிக்கேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்.          (அல்குர்ஆன் - 07 : 60) என்று கூறியபோது நபியவர்கள் என்னுடைய மக்களே! நான் எத்தகையே வழிகேட்டிலும் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த ஒரு தூதன்                     (அல்குர்ஆன் - 07 : 61) என்று பதி்ல் கூறினார்கள்.

ஆது கூட்டத்தினருக்கு நபியாக வந்த ஹுது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது பிரச்சாரத்தைத் தொடங்கியபோது நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவேகாண்கின்றோம்

(அல்குர்ஆன் - 07 : 66)  என்று ஆதுவர்க்கத்தினர் ஹுது நபியவர்கள் மீது புழுதி வாரித் தூற்றினர்.

தம்மை மடமையில் இருப்பதாகக் கூறிய அம்மக்களுக்கு ஹுது நபியவர்களே என்னுடைய மக்களே! மடமை என்னிடம் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலத்தைப் படைத்துக் காக்கும் இறைவனின் ஒரு தூதன் (அல்குதுஆன் - 07 : 67) என்று கூறினார்கள்.

மூஸாநபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை கட்டளைகளை பனீ இஸ்ரவேலர்களுக்கு கொண்டு வந்தபோது பிர்அவ்ன் மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவரென நான் உம்மை மதிக்கின்றேன்! (அல்குர்ஆன் - 107 : 101) என்று கூறவும் மூஸா நபியவர்கள் பிர்அவ்னை நோக்கி பிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவுகாலம் பிடித்துக்கொண்டதென நான் எண்ணுகின்றேன்! (அல்குர்ஆன் - 17 : 102) என்று சொன்னார்கள்.

மத்யன் நகரத்து மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட ஷுஐபு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்நகர மக்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துவைத்து நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.

நபியவர்களின் அழைப்பினை ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கள் ஷுஐபே! நீர் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக் கொள்ள (முடிய)வில்லை. உம்மை நாங்கள் எங்களில் மிக பலகீனமானவராகவே காண்கின்றோம். உம்முடைய இனத்தவர்கள் இல்லாவிடில் உம்மைக் கல்லெறிந்தே கொன்றிருப்போம். நீர் நம்முடைய மதிப்பிற்குரியவருமல்ல! (அல்குர்ஆன் - 11 : 91) என்று இழ்ந்துரைத்தனர்.

மக்களின் இகழ்ச்சியைச் செவியேற்ற ஷுஐபு நபியவர்கள் என்னுடைய மக்களே! அல்லாஹ்வை விட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் அல்லாஹ்வை புறக்கணித்து விட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் உங்கள் செயலைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் (அல்ர்ஆன் - 11 : 92) என்று மறுமொழி கொடுத்தனர்.

முந்நைய நபிமார்களை அவர்களது சமுதாயத்தினர் அவமாரியாதை செய்து கண்ணியமற்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்ததுபோன்றே அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் மக்கத்து மக்கள் தம்மடமையின் காரணமாக ஏளனம் செய்தனர். ஏச்சுக்களால் அர்ச்சனை செய்தனர்.

ஆனால் அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது அவதூறுகளை அள்ளி வீசியபோது அவற்றுக்கெல்லாம் இறைவனே மறுமொழி கொடுக்கின்றான்.

வேதம் அருளப்பட்ட(தாகநினைப்ப)வரே! நீர் நிச்சயமாக பைத்தியக்காரர்தான் (அல்குர்ஆன் - 15 : 06) என்று கூறியதற்கு பதிலாக உங்களுடைய தோழர் பைத்தியக்காரர் அல்லர் (அல்குர்ஆன் - 81 : 22) என்று இறைவனே பதிலுரைத்தான்.

என்னே! நாங்கள் பைத்தியம் கொண்ட ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா (அல்குர்ஆன் - 37 : 36) என்று காபிர்கள் அண்ணலாரை நோக்கி கேட்டபோது அல்லாஹ் அவர்களுக்கு பதிலாகக் கூறுகின்றான்.

(அவர் பைத்தியக்காரர் அல்ல!) அவர் உண்மையைக் கொண்டு வந்தார். (முன்வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றைப் பொய்யாக்கிய காரணத்தால்) நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான் (அல்குர்ஆன் - 37 : 37 - 38)

முஃமின்களைச் சந்திக்கின்ற போது காபிர்கள் சூனியத்தால் சித்த சுவாதீனமற்ற மனிதனை அன்றி நீங்கள் பின்பற்றவில்லை (அல்குர்ஆன் - 17 : 47) என்று கூறுவர். அவர்களுக்கு பதிலாக இறைவன் (நபியே) உங்களுக்கு எத்தகைய பட்டம் சூட்டுகின்றனர் என்பதைக் கவனியுங்கள். இவர்கள் வழி கெட்டுவிட்டார்கள். (நேரான) வழியே அடைய இவர்களால் முடியாது (அல்குர்ஆன் - 17 : 48) என நவின்றான்.

அவர் (நம்மைப் போல) உணவருந்துகிறார். கடைகளுக்குச் செல்கிறார் (அல்குர்ஆன் - 25 : 07) என்று காபிர்கள் சொன்னபோது (நபியே!) உமக்கு முன்னால் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்கலெல்லாம் (நிச்சயமாக உம்மைப் போன்றே) உணவு உண்ணுபவர்களாகவும் கடைத் தெருவில் நடமாடுகிறவர்களாகவும் இருந்தார்கள் (அல்குர்ஆன் - 25 : 20) என இறைவன் மறுமொழி பகர்ந்தான்.

இதுபோன்று பல சமயத்திலும் அண்ணலவர்களை கௌரவக் குறைவாக மதித்துப் பேசிய இறைமறுப்பாளர்களுக்கு இறைவனே பதில் கொடுத்து தன்னரும் தூதரின் உயர்வை தரணி மக்களுக்குத் தெளிவுபடுத்தினான். அக்கால மக்கள் போன்றே இக்காலத்திலும் ஒரு சிலர் உருவாகி உள்ளனர்.

குழம்பிப் போய்விட்ட அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் ஹிதாயத் நேர்வழியின் பேரொளியைப் பாய்ச்சுவானாக!

எங்கள் இறைவனே (என் சந்ததிகளாகிய) அவர்களுக்கு உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே, அவர்களிடையே எழுந்தருளச் செய்வாயாக! நிச்சயமாக நீயே மிக்க வல்லோனும் நண்ணறிவுடையோனுமாக இருக்கிறாய்.

 (அல்குர்ஆன் 02 : 129)

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த பிரார்த்தனையில் குறிப்பிடப்படுகின்ற தூதர் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாவர் என்பதற்கு காரணங்கள் பல உள்ளன.

திருமறைக்கு விளக்கவுரை எழுதிய விரிவுரையாளர்களின் ஒத்த கருத்து இப்றாஹீம் நபியின் பிரார்த்தனை அண்ணலாரையே குறிப்பிடுகின்றது என்பதாகும்.

பெருமானார் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள், நான் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையாகவும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நன் மாராயமாகவும் இருக்கின்றேன்.

நான் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையாக இருக்கின்றேன் என்ற நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்று திருமறை வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நன்மாராயம் கூறுகின்றேன் (அல்குர்ஆன் 61 : 06) என நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத்தினருக்கு நபிகளாரின் வருகையை முன்னறிவிப்புச் செய்ததை நான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நன்மாராயமாகவும் இருக்கின்றேன் என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருளுரை தெளிவுபடுத்துகிறது.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேற்கண்ட பிரார்த்தனை, மக்கமா நகரத்தில் நிரந்தரமாக வாழக்கூடிய தனது சந்ததியினருக்காக கேட்கப்பட்ட பிரார்த்தனையாகும். மக்காவில் வாழக்கூடிய மக்களில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியிலிருந்து அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் அல்லாஹ் நபியாக அனுப்பி வைக்க வில்லை.

ஐவேளைத் தொழுகைகளிலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப்பெயரைக் கூறும்போது நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திருநாமமும் சேர்த்து உச்சரிக்கப்படுவதின் நோக்கமென்ன? என்றதொரு ஐயமெழுமானால், அதற்குப் பல்வேறு பதில்களைக் கூற முடியும்.

01. அகிலத்தாருக்கு இறைவனது அருள் வேதத்தை அருளச் செய்ய அண்ணல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அனுப்பிட நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள்.

பெருமானாருக்காக இப்ராஹீம் நபி பிரார்த்தனை புரிந்ததால், இப்றாஹீம் நபிக்காக பிரார்த்தனை புரிவது பெருமானாருக்கும் கடமையாகி விட்டது. தனது அருட் தோழரின் மீதுள்ள கடனை அல்லாஹ், பெருமானாரின் சமுதாயத்தின் நாவால் தொழுகையிலேயே உச்சரிக்கச் செய்து நிறைவேற்றுகிறான்.

02. பிற்காலத்தில் (யுக முடிவுவரை யாவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக் கூடிய) நற்பெயரையும் (கீர்த்தியையும்) தந்தருள்வாயாக! 

(அல்குர்ஆன் 20 : 84)

என்று நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். (அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கருணைமிக்க இறைவன், யுகமுடிவு வரை உம்மத்தே முஹம்மதிய்யாவின் நா மூலமாக அண்ணல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புகழைக் கூறுகிற ஏற்பாட்டினைச் செய்து வைத்துள்ளான். அதிலும் குறிப்பாக தன் இனிய ஹபீபின் நாமத்தோடு இணைத்து ஸலவாத்து கூறுகின்ற பெருமையினை தன் கலீலுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளான்.

03. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாத்தின் தந்தையாக அமைந்துள்ளனர். (இது) உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்.

 (அல்குர்ஆன் - 22 : 78)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அபூரஹ்மத் (ரஹ்மத்தின் தந்தை) ஆக இருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கிராஅத்தின் படி, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஃமீன்களுக்கு, அவர்களது உயிரைவிட மேலானவர்களாக இருக்கின்றார்கள். மேலும், அவர்களுக்கு தந்தையாகவும் அமைந்துள்ளனர். 

நூல் : தப்ஸீர் கபீர்

பெருமானார் நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்பினை இறைவன் இயம்பும்போது விசுவாசி(களான உங்)கள் மீது மிக்க அன்பும், கிருபையும் உடையோராக இருக்கின்றார் (அல்குர்ஆன் 10 : 29) என்று திருமறையில் அருளச் செய்துள்ளான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் அன்பு, பாசம், இரக்கம் ஆகியவற்றில் நான் உங்களுக்கு தந்தையைப் போன்றுள்ளேன் (தப்ஸீர் கபீர்) என்று தம்மை பற்றி வர்ணிக்கின்றனர்.

இப்போது இரு பெரும் இறைத்தூதுவர்களும் தந்தை என்ற அடிப்படையில் இருவரது திருநாமங்களையும் ஒன்றாக இணைத்து ஸலவாத் கூறுகின்றோம்.

05. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷரீஅத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜுச் செய்திட வருமாறு மனித சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். இவ்வழைப்பினைக் குறித்து அல்லாஹ் ஹஜ்ஜுக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அழைப்புவிடும் (அல்குர்ஆன் 22 : 27) என்று கூறுகின்றான்.

பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சன்மார்க்க அழைப்பாளராக விளங்கினார்கள். (நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் இறைவன் பால் அழைப்பீர்களாக! 

(அல்குர்ஆன் 16 : 120)

எனவே, சன்மார்க்கத்தின் சத்திய அழைப்பினை விடுக்கின்ற பணியில் ஒரே நோக்கில் சென்ற தனது ஹபீப், கலீல் இருவருடைய திருநாமங்களையும் இணைத்து ஸலவாத் கூறுகின்ற பேற்றினை அல்லாஹ் வழங்கினான். 

அடுத்து, நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தார் மீது, சாந்தி, சமாதானம் அருளியதுபோல பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தார் மீது சாந்தி சமாதானத்தை அருளிட தொழுகையில் வேண்டுகின்றோம்.

அண்ணலாரின் குடும்பத்தினர் மற்றவர்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள். மதிப்பில் சிறந்தவர்களாக மதிப்பில் தாழ்ந்தவர்களுடன் ஒப்பிட்டு வேண்டுதல் செய்வதின் காரணமென்ன? என்ற வினா எழலாம்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வரான நபி இஸ்மாயீல் அலைஹிஸஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் தோன்றினார்கள் ஏந்தல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். மற்றொரு புதல்வரான நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் பனூ இஸ்ரவேலர்களில் தோன்றிய அனைத்து தூதுவர்களும் பிறந்தனர். மற்றவர்களைவிட நபிமார்கள் மதிப்பில் உயர்ந்தவர்கள்.

இந்த அடிப்படையில்தான் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குடும்பத்தினர் மீது சாந்தி, சமாதானத்தை அருள்பாலித்தது போன்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது குடும்பத்தினர் மீது சாந்தி, சமாதானத்தை அருள் புரிவாயாக இறைவா! என வேண்டுதல் புரிகின்றோம்.


நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களுக்கு உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே, அவர்களிடையே எழுந்தருளச் செய்வாயாக! (அல்குர்ஆன் - 02 : 129) என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறித்து துஆச் செய்தனர்.

இப்பிரார்த்தனையில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருங்குணங்களாக 01. வசனங்களை ஓதிக் காட்டுவார் 02. வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் 03. ஞானத்தைப் படிப்பிப்பார் 04. பரிசுத்தமாக்கி வைப்பார் என்று குறிப்பிடுகிறாகள் அண்ணல் இப்றாஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

வசனங்ளை ஓதிக் காட்டுவார் என்பதிலிருந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட வேதமான திருமறை அல்குர்ஆனை அன்னார் மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள்; போதனை புரிந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லது அத்திருமறையை அவர்கள் ஓதுவதினால் அதைச் செவியேற்கின்ற மக்கள் நல்வழி பெற்றார்கள். மேலும், திருமறையின் அருள்நிறை வசனங்களை ஓதி மக்களை அம்மறை கூறும் வழியில், அழைத்து ஈமான் கொள்ளச் செய்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பவர் என நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புரிந்த பிரார்த்தனையிலிருந்து,

பின்னால் வர இருக்கும் இறைத்தூதர், திருமறையாம் அல்குர்ஆனை மக்கள் ஓதுவதற்கு அனுமதி அளிப்பார்கள். ஓதுமாறு கட்டளையிடுவார்கள்; திருமறையின் விளக்கங்களைப் புரியவைப்பார்கள் எனும் கருத்துக்களைப் கொள்ளலாம். ஏனெனில், திருமறையை ஓதுதல் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

எண்ணற்ற முஸ்லிம்கள் தம் இதயச் சுவற்றில் பதியவைத்தும், கோடிக் கணக்கானோர் தம் நாவில் தவழும் தன்மையையும் அல்குஆன் பெற்றுள்ள காரணத்தினால் அதனை மாற்றவோ, திருத்தியமைக்கவோ, அழித்தொழிக்கவோ இயலாதபடி வல்ல நாயன் பாதுகாத்து வருகி்றான்.

நிச்சயமாக குர்ஆனை நாமே இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம் 

(அல்குர்ஆன் 15 : 09)

ஆழமான வார்த்தைகள், அழகுறும் அமைப்பு, தேன்சொட்டும் இலக்கிய நயம் அனைத்தும் திருமறையின் அற்புதங்களாகும். திருமறையை ஓதுவதுகூட ஒரு வணக்கமாகும். அதனை ஓதும்படி இறைவனும் கட்டளை இடுகின்றான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறங்கிய முதல் வசனங்கூட ஓதுவீராக! படைத்த உமது இரட்சகனின் பெயரால் (ஓதுவீராக!) என்றுதான் தொடங்குகிறது.

திருமறையைக் குறித்து இறைவன், அது நேர்வழி காட்டக் கூடியது என்றும் பிரகாசமிக்கது என்றும் கூறி அதன் தூயவடிவை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் அதில் தத்துவம் மெய்ஞானம், இரகசியம், வரலாறு, ஏவல் - விலக்கல்கள் அனைத்தும் உள்ளன.

ஞானத்தைக் கற்றுக் கொடுப்பவர் என்றால் நபியே! தாங்கள் மக்களுக்கு ஹிக்மத்தை - ஞானத்தைக் கற்றுக் கொடுங்கள் என்ற பொருள் கிடைக்கிறது.

சொல், செயல் ஆகியவற்றைச் சீர்திருத்துவதற்கு ஹிக்மத் என்று கூறலாம். யார் இவ்விரு பண்புகளையும் ஒன்றுசேர அமையப் பெற்றிருக்கின்றாரோ அவரை, ஹகீம் என்று சொல்லலாம்.

ஹிக்மத் என்ற வார்த்தையைக் குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர். இப்னு வஹ்பு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஹிக்மத் என்றால் என்ன? என்று மாலிக் இமாம் அவர்களிடம் கேட்டபோது சன்மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதும், அதன் சட்ட நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதும், அதன் அனைத்து வகைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருப்பதும் அதன்படி அமல் செய்வதுமாகும் என பதில் தந்ததாகச் சொல்கிறார்கள்.

ஹிக்மத் என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழி முறைகள் என சட்டமேதை இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது அபிப்பிராயமும் இதுவே.

யுஸக்கீஹிம் அவர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பார் என்பதற்கு திருமறை விரிவுரையாளர்கள் பலவித கருத்துக்களைக் கூறுகின்றனர்.

தூய்மைப்படுத்துதல் என்பது குர்ஆனை தூய்மையாக - பிழையின்றி ஓதவும், கற்கவும் ஆணையிடுதல், அவற்றுக்கு காரணமாக அமைகின்ற அனைத்து செயல்களையும் செய்திட கட்டளையிடுதல் என்பதோடு, குர்ஆன் ஓதுதல், கற்றுக் கொள்ளுதல் போன்றவை அல்லாத செயல்களையும் தூய்மைப்படுத்துதல் எனும் சொல் குறிக்கும்.

ஷிர்க் - இறைவனுக்கு இணைவைத்தல் எனும் பெரும்பாவத்திலிருந்து மக்களை தூய்மைப்படுத்தலையும் இது குறிக்கும்.

அழியும் இவ்வுலகின் மாயைகளில் சிக்கி சீரழிந்து போய்விடாமல், உறுதியான இறைநம்பிக்கையோடு நற்செயல்கள் புரிந்து மறுஉலகில் பாக்கியம்பெற்ற மனிதப் புனிதர்களாக மக்களை மாற்றிட வழி வகைகளைக் கையாளுதல் என்ற பொருளையும் தூய்மைப்படுத்துதல் என்ற பதத்திற்குக் கொள்ளலாம்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கைப்பாதை இவ்வகையிலேயே அமைந்திருந்தது. ஏகத்துவத்தின்பால் மக்களுக்கு அழைப்பு விடுத்தலும், நற்செயல்களை நாளும் செய்திட மக்களை ஊக்கப்படுத்தலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்றாடப் பணியாக அமைந்திருந்தது.

மொத்தத்தில் கலீலுல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையின்படியே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் வாழ்வை செம்மைப்படுத்தி - தனது பணியினை செவ்வனே செய்து முடித்தார்கள்.

இந்த ரஸுல்மார்களில் சிலரை சிலரைவிட சிறப்பாக்கி வைத்தோம் 

(அல்குர்ஆன் 02 : 253)

இறைத் தூதுவர்களில் சிலர் சிலரைவிட மேம்பட்டிருக்கிறார்கள். எல்லோரிலும் ஏந்தல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயர் அந்தஸ்த்தினைப் பெற்றுள்ளார்கள். இம்மேம்பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

01. நபியே! தங்களை அகிலத்தாருக்கு அருளாகவே அனுப்பி உள்ளோம் (அல்குர்ஆன் 21 : 107). அகில உலகத்துக்கும் அருள் நிறைத்தூதுவராக விளங்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லோரையும்விட சிறப்பானவர்களாக இருப்பது அவசியமல்லவா?

02. (நபியே!) நாம் உமது புகழை உயர்த்தியுள்ளோம் (அல்குர்ஆன் 94 : 04) இறைவன் தனது ஹபீபின் இனிய நாமத்தை திருக்கலிமாவிலும், பாங்கிலும் தனது பெயரோடு இணைத்துக் கூறியுள்ளான். ஏனைய நபிமார்களின் பெயர்கள் இவ்வாறு கூறப்படவில்லை. எனவே, எல்லா நபிமார்களை விடவும் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேன்மையுற்றிருக்கிறார்கள்.

03. ரஸுலுக்கு வழிப்படுதல் இறைவனுக்கு வழிப்படுவதாகும். யார் ரஸுலுக்கு வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவராவார். 

(அல்குர்ஆன் 4 : 80)

மேலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் - சத்தியப் பிரமாணம் செய்தலை அல்லாஹ்வுடன் செய்யும் பைஅத் என்று திருமறை கூறுகிறது. (நபியே!) உம்மிடம் பைஅத் செய்தவர் அல்லாஹ்விடமே பைஅத் செய்கிறார். அல்லாஹ்வின் கை அவர்களின் கரங்களுக்கு மேலே இருக்கிறது.

 (அல்குர்ஆன் 48 : 10)

கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது திருத்தூதருக்குமாகும் (அல்குர்ஆன் 63 : 8) என தனது இஸ்ஸத் - கண்ணியத்தோடு தனது ஹபீபின் கண்ணியத்தையும் இணைத்துக் கூறுவதோடு தனது பொருத்தத்தோடு தனது ரஸுலின் பொருத்தத்தையும் சேர்த்துரைக்கின்றான் அல்லாஹ்!

அல்லாஹ்வும், அவனது ரஸுலும் அவர்கள் பொருந்திக் கொள்வதற்கு மிகவும் தகுதி பெற்றவர்களாகும்.

 (அல்குர்ஆன் 9 : 62)

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளைக்கும், தனது ஆணைக்கும் கட்டுப்படுவதையும் இறைவன் சேர்த்தே சொல்லியுள்ளான். விசுவாசிகளே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை அழைத்தால் பதில் கூறுங்கள்.

 (அல்குர்ஆன் 8 : 24)

04. இறைவன் தனது ஹபீபிடம் குர்ஆனைப் போன்ற ஒன்றை அல்லது அதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்ற ஒன்றை கொண்டுவரும்படி இறை மறுப்பாளர்களுக்கு சவால் விடும்படி கட்டளையிடுகிறான்.

நாம், நமது அடியார் மீது இறக்கிய இத்திருவேதத்தில் உங்களுக்கு சந்தேகமிருப்பின் அது போன்றதொரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் பார்க்கலாம். 

(அல்குர்ஆன் 02 : 63)

தித்திக்கும் தேன்மறையாம் திருமறையின் மிகச்சிறு அத்தியாயம் மூன்று வசனங்களைக் கொண்ட அல்கௌதர் எனும் ஸூரா ஆகும்.

திருமறையிலுள்ள அத்தியாயங்களில் எந்தவொரு மூன்று திருவசனங்களாயினும் அவைபோன்று கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என இறைவன் சவால் விடுப்பது போன்றுள்ளது. அருள்மறையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்க்குமிடத்து திருமறை ஒரு தனி அற்புதமல்ல! இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஃஜிஸாத் அற்புதங்களை உள்ளடக்கிய ஒரு அதிசயப் பெட்டகமாக காட்சியளிக்கிறது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒன்பது கட்டளைகள் மூலம் சிறப்புப் பெற்றார்கள். ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட திருமறை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அற்புதங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒன்பது கட்டளைகளால் சிறப்பினைப் பெற்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இத்துனை மதிப்பும், சிறப்பும் இருக்குமாயின் 2000க்கு மேற்பட்ட முஃஜிஸாக்களைப் பெற்ற அருள் நிறைத்தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மதிப்பிற்கும் சிறப்பிற்கும் ஏது எல்லை?

05. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட அருள்மறையாம் திருமறை ஒரு அதியற்புதமாகும். மற்ற நபிமார்களின் அற்புதங்களை விட அல்குர்ஆன் அதியற்புதமானது என்று நிரூபணமாகும்போது எல்லா நபிமார்களை விடவும் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேலானவர்கள், சிறப்பானவர்கள் என்பதும் உறுதியாகின்றது.

06. இதர நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அழிந்து விட்டன. அவற்றுக்கு முழுமையான எந்தத் தடயங்ளும் இன்று இல்லை. ஆனால், அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முஃஜிஸாக்களில் முக்கியமான திருமறை இன்றும் ஒரு எழுத்தோ, புள்ளியோ மாறாமல் இலட்சக் கணக்கான முஃமீன்களது நெஞ்சமெனும் மஞ்சத்தில் கொலுவீற்றிருக்கிறது. அவர்களது நாவிலும் எழுத்திலும் மங்காப் பொலிவுடன் நிலைத்து நிற்கின்றது.

07. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஷரீஅத் - மார்க்கம் மற்ற நபிமார்களின் ஷரீஅத்தைவிட மிக்க மேலானது. எனவே, அனைத்து நபிமார்களைவிட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேன்மை மிக்கவராக இருப்பதும் அவசியம். நபிபிரான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்திய ஷரீஅத் முன்னுள்ள மார்க்கங்ளை மாற்றி அமைத்துவிட்டது. மாற்றப்பட்டதை (மன்ஸூக்) விட மாற்றி அமைத்தது (நாஸிக்) உயர்ந்ததல்லவா?

யாராவது ஒரு நல்வழியை புதிதாக ஏற்படுத்தினால் இறுதிநாள்வரை அதனைப் பின்பற்றுவோருக்கு குறைவற்ற சமமான கூலி கிடைப்பதுபோல், அதனை ஏற்படுத்தியவருக்கும் கிட்டும் என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருள் போந்தனர்.

எனவே, முந்தைய நபிமார்களின் மார்க்கத்தினரைவிட சத்திய சன்மார்க்கமாம் தீனுல் இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு கிடைக்கின்ற கூலி மகத்தானது அளவிடற்கரியது.

அல்லாஹ் நேர்வழி காட்டிய கூட்டம் இக்கூட்டம்தான். எனவே தாங்களும் அவர்களின் வழியைப் பி்ன்பற்றிச் செல்வீராக (அல்குர்ஆன் 06 : 90) என ஈருலக இரட்சகர் எம்பிரான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை, முந்தைய நபிமார்களைப் பின்பற்றிச் செல்ல இறைவன் கூறுகின்றான்.

இத்திருவசனத்திற்கு, சன்மார்க்கத்தின் அடிப்படைகளில் பின்பற்றுவீராக! அல்லது உட்பிரிவுகளில் முந்தைய நபிமார்களைப் பின்பற்றுவீராக! என்று எப்படிக் கருத்துக் கொண்டாலும் சரியாகாது. ஏனெனில், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஷரீஅத் முன்னுள்ள அனைத்து ஷரீஅத்தையும் மாற்றியமைத்து விட்டது.

அப்படியானால் இத்திருவசனத்தின் கருத்து என்ன? முந்தைய நபிமார்களின் நற்குணங்களைப் பின்பற்றிச் செல்வீராக! என்பதுவே சரியாகும்.

இறைவன் இதர நபிமார்கள் தம் வரலாறுகள் தூய்மையான அவர்களது இறையழைப்புகள் மேலான நற்பண்புகள் ஆகியவற்றைக் கூறிவிட்டு அன்பரே இப்பண்புகளை தாங்களும் கடைப்பிடிப்பீர்களாக! மற்ற நபிமார்களிடம் சிதறிக்கிடந்த தனிப்பெரும் பண்புகளை ஒன்றுதிரட்டி ஈடு இணையற்ற குணக்குன்றாகத் திகழ்வீர்களாக! என்பதுதான் இவ்விறை வசனத்தின் கருத்து.

அண்ணல் பெருமான் நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து இறைத் தூதுவர்களுடையவும் நற்குணங்கள் அனைத்தையும் பின்பற்றி சம்பூரணமானவர்களாகத் திகழ்ந்ததால் சகல நபிமார்களை விடவும் மிக்க மேலானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இதுபோன்றே, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சிருஷ்டிகள் அனைத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள். முந்தைய நபிமார்களுடன் அண்ணலாரை ஒப்பி்ட்டால், ஏகத்துவ அழைப்பில் எல்லோரை விடவும், அதிகமான துன்பங்களை சுமந்தவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே!

(நபியே) தங்களை நாம் சகல மனிதர்களுக்கும் நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 34 : 28) எனும் திருவசனம் சகல மனிதருக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஏனைய இறைத்தூதுவர்கள் பட்ட கஷ்டங்கள், அனுபவித்த தொல்லைகளைவிட நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் எல்லையற்றது. கைகொடுத்து உதவுவார் யாருமில்லை, துன்பம் களைந்து ஆறுதல் கூறுவாருமில்லை என்ற நிலையிலும் கூட யா அய்யுஹல் காபிறூன் நிராகரிப்போரே! என்றுதான் இறை மறுப்பாளர்களை அழைத்தார்கள்.

இதனாலும் பகை பெருகியது. ஆபத்து அவர்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பார்க்குமிடமெல்லாம் பகைவர்கள், செல்லுமிடமெல்லாம் வேதனை கண்டு மகிழ்வுறும் துஷ்டர்கள்.


நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அன்னாருக்கு பிர்அவ்னும் அவனது இனத்தவரும் தான் எதிரிகளாக இருந்தனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கோ சொந்த குறைஷி இனமே தொல்லைதரும் இனமாக இருந்தது.

இறுதித் தூதர், இணையில்லாப் பெருவேந்தர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இப்படியான இன்னல்களுக்கு மத்தியில் சத்தியப்பாதைக்கு மக்களை அழைக்கப் பணிக்கப்பட்டார்கள். முன்பின் அறிமுகமில்லாத - தொடர்பில்லாத மக்களிடம் சென்று ஏகத்துவத்தின் பெருஞ்சுடரை ஏற்றிவைக்கக் கட்டளை இடப்படவில்லை.

அம்மக்கள் ஏற்காதவற்றை கூறினால், தம்மை இம்சிப்பார்கள், இழிவுபடுத்துவார்கள், தரங்கெட்ட வார்த்தைகளால் விமர்சிப்பார்கள் என்பனவற்றை நன்கு புரிந்திருந்தும், இறையாணையினை ஏற்று சத்தியத்தை உளம் தளராது உறுதியோடு உரைப்போம் என்று செயல்படத் துணிந்தார்கள் செம்மல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். சத்தியப் போதனைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தார்கள். எதிரிகளின் ஏச்சுகளுக்கு அஞ்சி அன்னார் தாம் முன்வைத்த காலை பின் வைக்கவுமில்லை. கோழையாய் ஓடி ஒளியவுமில்லை.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும், தம் அன்புத் தோழர்களும் பெருமான் நபியுல்லாஹ்வைப் பின்பற்றி எதிர்வந்த இன்னல்களை ஏற்றுக் கொண்டார்கள். உறுதி குலையாது குன்றென நிமிர்ந்து நின்றார்கள். அதனால், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்றார்கள்.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் (தன் பொருளைச்) செலவு செய்து யுத்தமும் புரிந்து மகத்தான பதவியும் உடைய இத்தகையவனுக்கு அதற்குப் பின்னர் செலவு செய்து யுத்தம் புரிந்தவன் சமமாக மாட்டான். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கிறான்.

 (அல்குர்ஆன் - 57 : 10)

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பி்ன்பற்றி மார்க்கக் கடமையினை ஆற்றுவோருக்கு இத்துணை சிறப்பென்றால் அதற்குக் காரணமான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எத்துணை சிறப்பிற்குரியவர்களாய் அமைந்திருப்பர் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எல்லோரையும்வி்ட ஏந்தல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது பணியினை முடிக்கின்ற விஷயத்தில் அதிகமான கஷ்டங்களை ஏற்றுக் கொண்டார்கள் என்பதுவே, அவர்கள் சகலரையும் விட அதிகமான அந்தஸ்தும், உயர் தனிச் சிறப்புகளும் உடையவர்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. எனவேதான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

வணக்கங்களில் மிகச் சிறந்தது எதில் அதிக கஷ்டம் உண்டோ அதுவே!

நன்றி : வஸீலா, 01.01.1987, 01.02.1987, 15.02.1987, 01.03.1987, 15.04.1987










Comments

Popular posts from this blog

அகிலத்தின் அருட்கொடை