ஐயமும், தெளிவும் ,(சினிமா பாடல் மெட்டுகளில் மௌலிதுகள் ஓதலாமா)





ஐயம் - 


சினிமா பாடல் மெட்டுகளில் மௌலிதுகள் ஓதலாமா?




தெளிவு - 


மெட்டு - இராகம் என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. ஆனால் பொருள் சிதையாமலும், ஒழுங்கீனம், வேடிக்கை விளையாட்டு ஏற்படாமலும், அதன் கண்ணியமும், பக்தியும் பாதுகாக்கப்பட வேண்டிய முறையில் எந்த மெட்டிலும் ஒதலாம் தவறில்லை.


ஆதாரம் : இஹ்யா, பாடம் கிதாபுஸ் ஸமாஃ, பாகம் - 02




ஐயம் - 


நபி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சுலைஹா அவர்களும் திருமணம் செய்துகொண்டதை குழப்பவாதிகள் மறுக்கின்றனரே! விவரம் தாருங்கள்.




தெளிவு - 


இவர்களிருவரின் திருமணம் குறித்து குர்ஆனிலோ, ஹதீஸிலோ காணப்படவில்லை. எனவே இதனை ஏற்க முடியாது என்பது ஒரு சிலரது வாதம்.




சுலைஹா துர்நடத்தையுள்ளவர். எனவே நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுலைஹா தகுதியானவரல்ல. விபச்சாரி, விபச்சாரம் செய்பவனுக்குத்தான் தகுதி என திருமறை கூறுகிறது. எனவே யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுலைஹாவை மணக்கவே இல்லை என்பது அடுத்த சிலரது வாதம்.




குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை என்பது ஒரு காரணமாக அமையுமானால், முந்தைய நபிமார்கள் யாருடையவும் நிகாஹ் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே அனைத்தையும் மறுக்கவேண்டும்.




சுலைஹா துர்நடத்தையுள்ளவர் என்று கூறுவது பெரும் அபாண்டம், குர்ஆனுக்கும் எதிரானது. சுலைஹாவின் வீட்டில் அடிமையாக இருந்தவர்கள் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எஜமானி அடிமையை நிர்ப்பந்தித்து தனது தேவையை முடித்துக் கொள்வது மிகச் சுலபம். இந்த வகையில் சுலைஹா அம்மையார் தனது காம இச்சையை பன்முறை நிறைவேற்றி இருக்கமுடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மனக்கட்டுப்பாட்டுடனும் நாணத்துடனும் நடந்துகொண்டார்கள். 




நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேரழகை ஒரு வினாடி பார்த்த மிஸர் நாட்டுப் பெண்கள் மதிமயங்கி தமது கரங்களிலிருந்த கனிகளுக்குப் பதிலாக கரங்களையே அறுத்துக் கொண்டனர். இவர் மனிதரே அல்ல, மலக்குதான் என நபியவர்களை மனிதப் பிறவி என ஏற்க மறுத்தனர் என்றால் சற்று நிதானத்தோடு சிந்திக்க வேண்டும்.




ஒரு நொடிநேரம் பார்த்தவர்கள் தடுமாறி தமது உறுப்பை சிதைத்துக் கொண்டார்கள். மனதைப் பறிகொடுத்தார்கள். ஆனால் சுலைஹா அம்மையார் வருடங்கள் பலவாக தனக்கு முன்னால் உலா வந்த நபியவர்களைக் கண்டு தன்னிலை இழக்க வில்லையே! இது அவர்களது பத்தினித் தனத்திற்கு எடுத்துக்காட்டு.




திருமறையில் ஷஙப என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஷஙப என்றால் மையல் கொள்தல் எனப் பொருள். உணர்வின்றி மனக் கட்டுப்பாடுடின்றி நிகழுவதற்குத்தான் ஷஙப எனக் கூறப்படும். 




எனவே சுலைஹா அம்மையார் உணர்வோடிருந்தபோது நபியவர்களை நெருங்கவில்லை. உணர்விழந்தபோது நெருங்கினார்கள். உணர்வு பெற்றபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவமன்னிப்புத் தேடினார்கள். மீண்டும் தன்னிலை குலையாதிருக்க நபியவர்களை சிறைவைக்கக் கூறினார்கள்.




உண்மையில் சலைஹா அம்மையார் தீய எண்ணங் கொண்டவராக இருந்தால் நபியவர்களை தனிமைப்படுத்தி சிறைவைக்கச் சொல்லமாட்டார்கள். எப்படியாவது தன் காம இச்சையைப் பூர்த்தி செய்யத்தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பார்கள்.




வேண்டுமென்றறே உறுப்பைச் சிதைப்பது ஹறாம்.




உணர்வின்றி அவ்வாறு செய்தால் குற்றமல்ல!




மிஸ்ர் நாட்டு பெண்டிர் உணர்வின்றி கரங்களை வெட்டிக் கொண்டதுபோல் உணர்வின்றி உள்ளத்தைப் பறிகொடுத்தார்கள் சுலைஹா அம்மையார் அவர்கள்!




நாயகமே! மிஸ்ர் நாட்டுப் பெண்கள் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பேரெழிலைக் கண்டு தமது கரங்களை வெட்டிக் கொண்டனர். ஆனால் தங்களது பேரழகைப் பார்த்திருப்பார்களாயின் தங்களது இதயத்தையல்லவோ பலியிட்டிருப்பர்? என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.


நூல் : புகாரி




வாதத்திற்காக சுலைஹா அம்மையார் செய்தது தவறு என்றாலும் கூட, செய்த தவறுக்காக மனந்திருந்தி இஸ்திஃபார் செய்தபின் அதே குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது நியாயமற்றது. 




நபிமார்கள் சிறிய பெரிய பாவங்கள் குறித்து நினைக்கவோ, செய்யவோ மாட்டார்கள். ஒலிமார்கள் நினைத்தாலும், செயல்படாமல் அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பான்.




எனவே நபிமார்கள் மஃஸூமீன்கள். வலிமார்கள் மஹ்பூளீன்கள்.




நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தீய எண்ணம் வராது அல்லாஹ் பாதுகாத்தான். சுலைஹா நாயகியாரை தீய செயலை விட்டு இறைவன் பாதுகாத்தான்.




ஆகவே திருத்தூதர்களின் வாழ்க்கைத் துணைவியரைக் குறித்து தவறான அபிப்பிராயங்களைக் கூறும் நிராகரிப்போரை விட்டு அல்லாஹ் நம்மைக் காப்பானாக! ஆமீன்.




அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ். அவனே நேர்வழி காட்டப் போதுமானவன்!




ஐயம் - 


ஹனபீ மத்ஹப்படி பிரயாணத்தின்போது ஜம்உ (தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்) உண்டா?




தெளிவு - 


ஜம்உ இரண்டு வகை. 


01. ஜம்உ ஹகீகி. உதாரணமாக லுஹர் தொழுகையைப் பிற்படுத்தி அஸருடைய வக்தில் தொழுதல் அல்லது லுஹருடைய வக்தில் அஸரை முற்படுத்தி இருநேரத் தொழுகைளையும் சேர்த்துக் தொழுதல் இதற்கு ஜம்உ ஹக்கி என்பர். இவ்வகையான ஜம்உத் தொழுகைகள் ஷாபிஈ மத்ஹபின்படி கூடும்.




02. ஜம்உ ஸுவரி. லுஹர் தொழுகையை அதன் கடைசி நேரம்வரை பிற்படுத்தி, கடைசி நேரத்தில் லுஹரையும், அஸர் தொழுகையை அதன் ஆரம்ப வக்தில் முற்படுத்தியும் தொழுவது ஜம்உ ஸுவரி. இது ஹனபி மத்ஹபின்படி கூடும். 




பிரயாணங்களின்போது இரு தொழுகைகளை ஜம்உத் செய்ய நாடினால் லுஹர் தொழுகையை அதன் கடைசி நேரம் வரை பிற்படுத்தி தொழுது அஸரின் முதல் வக்திலேயே அஸரைத் தொழுதுகொள்ள வேண்டும். ஆனால் இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே வக்தில் ஜம்உத் செய்து தொழுவது கூடாது என்பது ஹனபீ மத்ஹபின் சட்டமாகும்.




ஆதாரம் : ஸுனன் அபீதாவூதின் விரிவுரையான மஆலி முஸ்ஸுனன், பாகம் - 01, பக்கம் - 263


ஜாமி உத் திர்மிதி : ஓரக் குறிப்பு, பாகம் - 01, பக்கம் - 72


ஷரஹ் முஸ்லிம் : பாகம் - 01, பக்கம் - 245






ஐயம் - 


முஸ்லிம் அல்லாதவருக்குத் தர்மம் கொடுக்கலாமா?




தெளிவு - 


கொடுக்கலாம். மட்டுமல்ல! அதற்கு கூலியும் கிடைக்கும்


துஹ்பா, ஷர்வானி 07 - 179




ஐயம் - 


ஜும்ஆ குத்பா ஓதும்போது கதீப் வாள் வைத்துக்கொண்டு ஓதுகிறாரே! ஆதாரம் உண்டா இச்செயலுக்கு?




தெளிவு - 


உண்டு! குத்பா ஓதும்போது இடதுகையில் வாளோ, கைத்தடியோ வைத்து அதன்மீது ஊன்றி நின்று குத்பா ஓதுவது சுன்னத். நபி வழியும் இதுவே.


துஹ்பா - 02 - 462


 


ஐயம் - 


தபீஹுல்லாஹ் என சிறப்பிக்கப்படுபவர் யார்? நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் என சிலரும், நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் என பலரும் கூறுகின்றனர் இவற்றில் எதுசரி?




தெளிவு - 


ஸஹாபாக்கள், தாபிஈன்களிலுள்ள அறிஞர்களிடத்தும் அனேக நபிமொழிக்கலை மேதைகளிடத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்தாரான சொல்லின்படியும் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் தபீஹுல்லாஹ் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.


ஆதாரம் : ரத்துல் முக்தார், பாகம் - 01, பக்கம் - 785




நன்றி : வஸீலா, 01.08.1987

Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை