ஐயமும் தெளிவும்
ஐயமும், தெளிவும்!
ஐயம் :
கடமையான குளிப்பை நிறைவேற்றுமுன் மீசை, நகம், தலைமுடி ஆகியவற்றை நீக்கக்கூடாது என்கிறார்களே இதற்கு ஆதாரம் உண்டா? என்ற கேள்விக்கு அந்நஜாத் ஜுன் 1987 இதழில், ஹதீஸில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்வதற்கு தடை ஏதும் செய்யவில்லை. குளிப்பு கடமையான ஒருவன் நகம் வெட்டுவதும், தலைமுடியைக் களைவதும் அனுமதிக்கப்பட்டதுதான் என பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதில் சரிதானா?
தெளிவு :
அவர்கள் அளிக்கும் எந்தப் பதில்தான் சரியானது? இதை மட்டும் சரிதானா என்று கேட்பதற்கு! சுருக்கமாகச் சொல்வதானால் பதில் சரியல்ல!
ஒவ்வொரு முடிக்குக் கீழும் பெருந்தொடக்கு ஜனாபத் உண்டு. எனவே (எவ்வொரு) முடியையும் (நீர் செல்லும்படி) கழுகுங்கள், மேலும் மேனியை (அழுக்கு போன்றவற்றை விட்டுத்) தூய்மைப்படுத்துங்கள்! என்பது ஒரு நபி மொழி
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூற்கள் : அபூதாவூத் திர்மிதி, இப்னு மாஜா
ஜனாபத்தின் (பெருந்தொடக்கின்) காரணத்தால் ஒரு முடியின் இடமாவது கழுவப்படாது விடுபடுமாயின் அவனை, அந்த முடியின் காரணத்தால் இன்னின்ன மாதிரியெல்லாம் நரக நெருப்பில் வேதனை செய்யப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அருளியுள்ளனர். இதனாலேயே எனது (தலை) முடியைச் சிரைப்பதை வழமையாக்கிக் கொண்டேன்
அறிவிப்பவர் : அலீ ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அபூதாவூத் அஹ்மத், தாரமீ
(அஹ்மத், தாரமீ இரு நூற்களிலும் இதனாலேயே எனது முடியைச் சிரைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்பது இருமுறை சொல்லப்படவில்லை)
நபிமொழி நடப்பதாகச் சொல்வோரின் லட்சணம் புரிகிறதா? நபிமொழியில் தெளிவாக வந்தும் தடை இல்லை என்கிறார்களே! இவர்களை என்ன சொல்வது?
நன்றி வஸீலா 15. 08. 1987
ஐயம் :
கப்றில் பிடிமண் போடவேண்டுமா? மண் போடுவது சுன்னத்தான செயலா?
தெளிவு :
கப்றில் மூன்று கைப்பிடி மண் போடுவது சுன்னத். முதற் பிடிமண் போடும்போது அதிலிருந்தே (மண்ணிலிருந்தே) உங்களைப் படைத்தோம் என்ற கருத்துள்ள மின்னா கலக்னாகும் என்றும், இரண்டாவது பிடிமண் போடும்போது அதிலேயே உங்களை மீட்டுவோம் என்ற கருத்துள்ள வபீஹா நுஈதுகும் என்றும், மூன்றாவது பிடிமண் போடும்போது மீண்டும் ஒருமுறை உங்களை அதிலிருந்து மீட்டுவோம் என்ற கருத்துக் கொண்ட வ மின்ஹா நுக்ரிஜுகும் தாரதன் உக்ரா என்றுமுள்ள திருவசனங்களை ஓதுவதும் சுன்னத்தாகும்.
ஆதாரம் : அத்காருன் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி, பக்கம் - 137
நன்றி வஸீலா 15. 08. 1987
ஐயம் :
தங்கத்தால் ஒரு உறுப்பைச் செய்து அணிந்துள்ளவர் கடமையான குளியினை நிறைவேற்றும்போது அந்த தங்க உறுப்பையும் கழுக வேண்டுமா?
தெளிவு :
அது வெளி உறுப்பாக இருந்தால் அதனைக் கழுவ வேண்டும். லவ் இத்தகலஹு உன் மூலதன் அவ் அன்பன் மின் தஹபின் அவ்பிள்ளத்தின் வஜப அலைஹி q{ஸ்லுஹுமின் ஹததின் அஸ்ஙர அவ் அக்பர்
ஆதாரம் : ஷர்வானி பாகம் - 01, பக்கம் - 276
நன்றி வஸீலா 15. 08. 1987
ஐயம் :
குளிப்பு கடமையாக இருக்கும்போது குளிக்கு முன்னர் மீசை, நகம், முடி போன்றவற்றைக் களையக்கூடாது என சிலர் கூறுகின்றனர். சரிதானா?
தெளிவு :
சரிதான், பெருந்தொடக்குள்ளவன் உடல் முழுவதும் நனையும்படி குளிக்கவேண்டியது கடமையாகும்.
ஆதாரம் : ஷர்வானி, பாகம் - 01, பக்கம் - 275
பெருந்தொடக்குள்ளவன் நகம், மீசை, முடி போன்றவற்றை கழுகுதல் வாஜிபு. கழுகுவதற்கு முன்னர் முடி நகம் போன்றவற்றைக் களைந்தால் அவைகளைக் கழுகுவதும் வாஜிபு.
ஆதாரம் : ஷரஹுல் மின் ஹாஜ், பாகம் - 01, பக்கம் - 160
நன்றி வஸீலா 15. 08. 1987
ஐயம் :
லூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தினரின் அனாச்சாரத்தினால் அவர்களை அல்லாஹ் அக்கினியினால் அழித்தான். அப்போது நபி அவர்களுக்கு இரு புதல்விகள் இருந்தனரென வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம். அவ்விருவரையும் லூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கு மணம் செய்து கொடுத்தனர்?
இச்சம்பவத்தை பழைய ஏற்பாடு அத்தியாயம் 19, 31, 38 முடிய தவறான வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ளதே!
தெளிவு :
பைபிலில் நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளது தவறான இடைச் செருகல் என்பதை சாதாரண அறிவுள்ளவர்களும் புரிந்து கொள்வர்.
நபியவர்கள் தமது காலத்தில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையை மிக வன்மையாகக் கண்டித்தனர். நபியவர்களின் வீட்டுக்கு மலக்குகள் சுந்தர வடிவு கொண்ட ஆண்களாக வருகை தந்த செய்தியறிந்த அம்மக்கள் அவர்களை அடைய நபியவர்களின் வீடு நோக்கி வந்தனர். அப்போது அம்மக்களை நோக்கி நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
அப்போது லோத்து வாசலுக்கு வெளியே வந்து. தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி அவர்களிடத்தில் போய் சகோதரரே! இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம்.
ஆதியாகம் : 19 : 67
திருமறை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது,
லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்.
அல்குர்ஆன் 07 : 80
அருவருப்பான ஓரினச் சேர்க்கையைக் கைக்கொண்டிருந்த அம்மக்களை இறைவன் அடியோடு அழித்தொழித்தான்.
அந்தப் பட்டணங்களையும் அந்த சம பூமியனைத்தையும் அந்தப் பட்டணங்களின் எல்லா குடிசைகளையும் பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
ஆதியாகம் 19 : 25
நபியவர்களின் மனைவி மனதுள் குப்ரை மறைத்து வைத்திருந்து இவ்ஈனச் செயலுக்குத் துணை போனாள். அதனால் அவளும் ஹலாக்கானாள்.
(உம்முடைய சொல் கேளாத) உம்முடைய மனைவியைத் தவிர. உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களைத் தொடும் வேதனை நிச்சயமாக அவளையும் பிடிக்கும்
அல்குர்ஆன் 11 : 81
உம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாகக் கவிழ்த்து விட்டோம். அன்றி (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்.
அல்குர்ஆன் 11 : 82
ஆகவே அவருடைய மனைவியைத் தவிர அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் இரட்சித்துக் கொண்டோம்.
அல்குர்ஆன் 07 : 83
மேற்கண்ட வசனங்களில் அடிப்படையில் பார்க்கும்போது தீயோர் அனைவரும் அழிந்தனர். மிஞ்சியவர்கள் நபியவர்களும் அன்னாரது குடும்பத்தினருமே! இதில் அன்னாரது மனைவி தீயவளாக இருந்ததால் அவளும் தண்டனைக்குட்பட்டாள். எஞ்சியோர் நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது இரு புதல்விகளுமே!
நாம் அவரை (லூத் நபியை) நமது அருளில் (ரஹ்மத்தில்) புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராக இருந்தார்.
அல்குர்ஆன் 21 : 74, 75
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறித்து திருமறை வழங்கும் நற்சாட்சியம் இது!
மதுபானத்தைக் குறித்து விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்ரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அதனால்) நீங்கள் சித்தி பெறுவீர்கள் (05 : 90) என அல்குர்ஆன் கூறுகிறது.
இனி நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களது புதல்வியரைக் குறித்து பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்.
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது இருபுதல்வியரையும் தவிர அனைவரும் அழிந்து விடுகின்றனர். பின்னர் தந்தையோடு மக்கள் ஒரு மலையடிவாரத்தில் ஒதுங்குகின்றனர். அப்போது மூத்த மகள் இளையவளை நோக்கி,
நம்முடைய தகப்பனார் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கின்ற முறையின் படியே நம் மோடே சேர பூமியில் ஒரு புருஷனும் இல்லை.
நம்முடைய தகப்பனார் சந்ததி உண்டாகும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்றிரவே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோடு சயனித்தாள். அவள் சயனித்ததையும், எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
ஆதியாகம் 19 : 31, 34
மறுநாள் இளையவள் தந்தையோடு உறவு கொள்கிறாள். நபியவர்களின் சமூகத்தினர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் அழிக்கப்பட்டனர் என்பதை பைபிலும் குர்ஆனும் தெளிவு படுத்துகிறது.
ஆனால் அதைவிடக் கேவலமான செயலை நபியவர்களின் புதல்வியர் செய்தும் அவர்கள் இறைதண்டனையிலிருந்து எப்படி தப்பினர்?
இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்தும் செயலை செய்ததால் தனது சமூகத்தினரும், தாயும் கூட மாண்டொழிந்ததைக் கண் கூடாகக் கண்ட அப்பெண்கள் மாபாதகச் செயலை செய்திட எப்படித் துணிந்தனர்?
தன் தகப்பனுக்காவது, தாய்க்காவது குமாரத்தியாக தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக! ஜனங்கள் எல்லோரும் ஆமென் சொல்லக்கடவார்கள்
உபாகமம் 27 : 22
மதுகொடுத்து மயங்கி உறவு கொண்டதாக ஆதியாகமம் கூறுகிறது.
போதை அளவுக்கு மீறி தன்னிலையற்றிருக்கும்போது உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது. போதை மிதமாக இருந்தால் உறவில் ஈடுபடும்போது, யாருடன் என்பதை அறியமுடியும் என்பது மருத்துவர்களின் அபிப்பிராயம். எனவே மேற்கூறப்பட்ட நிகழ்ச்சி புத்தியும் வைத்தியமும் ஒத்துக் கொள்ளாத ஒன்று!
எனவே இச்சம்பவம் இடைச் செருகல் என்பதில் ஐயமில்லை.
தங்கள் கேள்வியின் இன்னொருபகுதியான லூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வியர் யாரை திருமணம் புரிந்தனர் என்பதற்கு சரியான தகவல் இல்லை. தெரிந்தவர்கள் ஆதாரத்தோடு எழுதினால் பிரசுரிக்கலாம்.
நன்றி வஸீலா 15. 08. 1987
ஐயம் :
வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் இமாம் குத்பா ஓதி முடித்ததும் சற்று தாமதித்து தொழுகையை ஆரம்பிக்கிறார். இப்படிச் செய்வது கூடுமா?
தெளிவு :
கூடாது. குத்பாவுக்கும் தொழுகைக்குமிடையில் முவாலாத்-தொடர்பு இருத்தல் அவசியம். (ஆனால் சில பேஷ் இமாம்கள் இதனைக் கவனிக்காது பின்னால் தொழுபவர்களது தொழுகை வீணாகிவிடுவதற்கு காரணமாக அமைகின்றனர்.)
குத்பாவுக்கும், தொழுகைக்குமிடையில், தொடர்பு முவாலாத் ஷர்த், ஊர் வழக்கில் அதிக இடைவெளி ஏற்படலாகாது.
பத்ஹுல் முயீன் : பாகம் - 02, பக்கம் - 70
தொடர்பு மூன்று இடங்களில் கவனிக்கப்படும்
01. இரு குத்பாவுக்குமிடையில் இடைவெளி நீளமாகலாகாது.
02. இரண்டு பர்ளுகளுக்கிடையில்
03. இரண்டு குத்பாவுக்கும், தொழுகைக்குமிடையில் பிரிவு நீளமாகக் கூடாது.
இஆனா : பாகம் - 02 - பக்கம் - 70
ஊர்வழக்கில் அதிக இடைவெளி என்பது இரண்டு ரகஅத் தொழும் நேரமாகும் (பர்ளு மட்டும்)
இஆனா : பாகம் - 02, பக்கம் - 71
நீளமான இடைவெளி என்பதை ஊர்வழக்கத்தை வைத்தே இலேசான இடைவெளி நிர்ணயிக்க வேண்டும. இலேசான இடைவெளி என்பது இகாமத் சொல்லும் நேரமாகும்.
மஹல்லி : பாகம் - 01, பக்கம் - 26
இமாம் குத்பாவை முடித்ததும் முஅத்தின் இகாமத் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். இமாம் மிஹ்ராபைச் சென்றடைந்ததும் உடனே தொழுகையை ஆரம்பித்துவிட வேண்டும்.
மஹல்லி : பாகம் - 01 - பக்கம் - 277
எனவே இமாம் மிம்பரை விட்டு இறங்கியதும் வரிசைகளை சரி செய்யவும், மைக்கை ஒழுங்குபடுத்தவும் இமாம்கள் எடுக்கும் நேரத்தால் தொழுகையை வீணாக்கிடும் அபாயம் உண்டு. எனவே இமாம்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி வஸீலா 15. 08. 1987
Comments
Post a Comment