ஐயமும் தெளிவும்
ஐயமும், தெளிவும்!
ஐயம் :
கப்றுகளில் சஜ்தா செய்யலாமா? கப்றுகளைத் தவாப் செய்யலாமா?
தெளிவு :
சுஜூது இரண்டு வகை.
01. வணக்கத்திற்காகச் செய்வது.
02. மரியாதைக்காகச் செய்வது.
வணக்கத்திற்காகச் செய்வது இறைவனுக்கு மட்டுமே உரியது. வணக்கம் என்ற எண்ணத்தோடு மற்றவர்களுக்கு சஜதாச் செய்வது குப்று. இது எந்தக் காலத்திலும், எந்தச் சமுதாயத்திற்கும் அனுமதிக்கப்படவில்லை.
மரியாதைக்காகச் செய்யப்படும் சுஜூது முந்தைய சமுதாயத்திற்கு ஆகுமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்வகை சுஜூதும் உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு தடுக்கப்பட்டுள்ளது, ஹறாமாக்கப்பட்டுள்ளது. செய்பவன் பாவியாவான். எனவே, கப்றுகளில் சஜ்தா செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் தடுக்க வேண்டும்.
கப்றுகளை தவாப் செய்வது குறித்து புகஹாக்கள் மத்தியில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது. ஹறாம் எனச் சிலரும், மக்ரூஹ் எனச் சிலரும் கூறுகின்றனர். தவாப் செய்வது ஆகுமென யாரும் கூறவில்லை. வஹ்ஹாபிகள் கூறுவது போன்று ஷிர்க் எனவும் எவரும் சொல்லவில்லை.
ஆதாரம் : அஸ்ஸவாயிகுல் இலாஹிய்யா
ஐயம் :
எங்களுரில் தப்லீகில் ஈடுபாடு கொண்ட ஆலிமொருவர் அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம் என்கிறார். அவருக்கு வேறுசில ஆலிம்கள் துணை போகின்றனர். பலர் எதிர்கின்றனர். உண்மை நிலையை ஆதாரத்துடன் விளக்குவீர்களா?
தெளிவு :
உங்களுர் ஆலிமவர்களின் புதுக்கண்டுபிடிப்பல்ல இவ்வாதம்! முன்னரே பல்வேறு நபர்களால் கூறப்பட்டு, அவர்களது ஆதாரங்கள் தூளாக்கப்பட்டிருக்கின்றன.
சுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதாப்படி அல்லாஹ் பொய் கூறுவான் என்று கூறுவதே தவறு.
அல்லாஹ்வின் பேச்சில் பொய் வருவது (ழுஹால்) அசாத்தியம் (ஷரஹ் அகாயிதுன் நஸபீ)
பொய் என்பது வடு, வடுக்கள் அல்லாஹ் மீது இருக்கத்தகாதவை. (தவாலுல் அன்வார்)
சுன்னத் வல்ஜமாஅத், முஃதஸிலா ஆகிய இருவரிடத்தும் கருத்து வேறுபாடின்றி பொய் அல்லாஹ் மீது விலக்காகும். பொய் கூறுவது இழி செயல். இழி செயல்களை செய்வதை விட்டு இறைவன் தூய்மையாளன் என்கின்றனர் முஃதஸிலாக்கள்.
பொய் ஒரு குறை. குறைகள் அல்லாஹ்வுக்குத் தகாதவை
(மவாகிப்)
குறையான பண்புகள் எத்தனை உண்டோ, அவையனைத்தும் இறைவனிடத்தில் இருக்கத் தகாதவைகளாகும். உதாரணமாக அறியாமை, மடமை, பொய்
(முஸாயிறா)
அஷ்அரிய்யாக்களிடத்தும், மற்றவர்களிடத்தும் குறையான பண்புகள் அல்லாஹ்வுக்கு அருகதையற்றவை என்பதில் கருத்து வேறுபாடில்லை. பொய்யும் ஒரு குறையான பண்பே!
(ஷரஹ் முஸாயிரா)
பொய் என்பது ஒரு குறையான பண்பு. குறையான பண்புகள் அல்லாஹ்வுக்கு அசாத்தியமானவை என எங்கள் அஸ்ஹாபுகள் கூறுகின்றனர்.
(தப்ஸீர் கபீர்)
இவைதவிர அனேக நூற்கள் பொய்யுரைத்தல் அல்லாஹ்விற்கு இருக்க முடியாத பண்பு என்றும், இதுவே நமது கொள்கை என்றும், இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றும் தெளிவாக குறிப்பிடுகின்றன.
அல்லாஹ்விற்கு பொய் சொல்ல முடியும் என்பவன்மீது ஷரீஅத் சட்டம் என்ன கூறுகிறது?
அல்லாஹ் பொய் சொல்வான் என்று யாராவது கொள்கை கொண்டிருந்தாலோ, நாவால் கூறினாலோ நிச்சயமாக அவன் காபிரானவனும், சபிக்கப்பட்டவனும், குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ ஆகியவற்றுக்கு மாறு செய்தவனும் ஆவான். நிச்சயமாக அவன் முஃமினல்ல! அல்லாஹ் அநியாயக்காரர்களின் கூற்றுக்களை விட்டு மிக உயர்ந்தவன். (தப்லீக் ஜமாஅத் மீது தவறான குற்றச்சாட்டுக்களும் தக்க பதில்களும் பக்கம் 160) தப்லீக்கில் ஈடுபாடுகொண்ட அவருக்கு தப்லீக் நூல் கூறும் பதில் இது!
அல்லாஹ் எல்லா வஸ்துக்களின் மீதும் சக்திபெற்றவன் என்பது வேதவசனம். இறைவனது நாட்டம் எதில் தொடர்புபடுகிறதோ அதில்தான் சக்தி கொழுகும். எனவே திருமறை விரிவுரைகள் இன்னல்லாஹ அலாகுல்லி ஷெய்இன் கதீர் என்ற திருவசனத்திற்கு அய் ஷா அஹுகதீர் அல்லாஹ் நாடிய வஸ்துக்களின் மீது சக்தியுள்ளவன் என தெளிவுபடுத்துகின்றன.
பொய்யர்கள் மீது இறைவனது சாபம் உண்டு என்கிறது திருமறை. பொய்யர்களுக்கு வைல் எனும் கொடிய நரக வேதனை உண்டு எனவும் அல்குர்ஆன் இயம்புகிறது.
கொடிய வேதனைகளை ஈட்டித்தரும் பொய் அல்லாஹ்விடம் இருக்குமா? இருக்கத்தகாதது என்றே அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.
பஞ்சமாபாதங்கள் அத்தனையையும் செய்ய மனிதன் சக்தி பெற்றிருக்கிறான். எனவே இவ்விழி குணங்கள் இறைவனுக்கும் இருந்துதான் ஆகவேண்டுமா? இவற்றையெல்லாம் செய்யாவிட்டால் இறைவன் சக்தி குறைந்தவன் என்று கருத்தா?
அல்லாஹ் மீது பொய்கூறும் இப்பொய்யர்களை விட்டு இறைவன் நம்மைக் காப்பானாக!
ஐயம் :
மழைவேண்டி ஸலவாத்துக்கள் ஓதலாமா? ஓதலாமென்றால் எந்த ஸலவாத் ஓதலாம்?
தெளிவு :
தாராளமாக ஓதலாம். ஸலவாத்துன் நாரிய்யாவை ஓதுங்கள். அதில் யுஸ்தஸ்ஙல் ஙமாமு பிவஜ்ஹிஹில் கரீம் அண்ணலாரின் சங்கையான முகத்தின் பொருட்டால் மேகம் மழைபொழியும் என்று வருகிறது.
மொரோக்கோ பகுதிகளில் மழைவேண்டி ஸலவாத்துன் நாரிய்யா ஓதும் வழக்கம் இருந்தது. ஒரே மஜ்லிஸில் 4444தடவைகள் ஸலவாத்துன் நாரிய்யா ஓதி அவற்றின் பொருட்டால் வஸீலா தேடுவர். மழை பொழிந்தது.
நூல் : கஸீனத்துல் அஸ்ரார், பக்கம் - 70
ஐயம் :
அண்ணலாரின் ரவ்லா ஷரீபில் இரு கலீபாக்களை மட்டுமே அடக்கம் செய்யப்பட்டதன் காரணமென்ன?
தெளிவு :
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மை, மறுமை இரண்டுக்கும் இடைப்பட்ட ஆலமுல் பர்ஜக் ஆகியவற்றின் ஆட்சி அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அன்னார் ஈருலக அரசர். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் அமைச்சர்கள். மந்திரிகள் அரசவையில் இருப்பதுதானே முறை!
ஒவ்வொரு நபிக்கும் வானத்தில் இரு அமைச்சர்களும், பூமியில் இரு அமைச்சர்களும் இருப்பர். வானத்து அமைச்சர்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்.
பூமியிலுள்ள எனது அமைச்சர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோராகும் என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : அபூசயீதுல் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு
நூல் : திர்மிதி, பாகம் - 02, பக்கம் - 210
Comments
Post a Comment