ஐயமும் தெளிவும்
கேள்வி பதில்
ஐயம் : சிறுவர்கள் பாங்கு சொன்னால் நிறைவேறுமா? நிறைவேறாது என்றால் அதனை திரும்பச் சொல்ல வேண்டுமா?
தெளிவு : புத்தியில்லாத சிறுவர்கள் பாங்கு சொன்னால் நிறைவேறாது. அதனை மீட்டிச் சொல்ல வேண்டும்.
பதாவா ஆலம் கீரி, பாகம் - 01, பக்கம் 54
ஐயம் : ரமழானில் இஷாத் தொழுகையினை ஜமாஅத்துடன் தொழாதவர், தராவீஹ் தொழுகையில் ஜமாஅத்துடன் கலந்துகொண்டு வித்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்றலாமா? ஹனபி மத்ஹபி்ன் படி பதில் தருக!
தெளிவு : பர்ளுத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றாவிட்டால் வித்ருத் தொழுகையைத் தனித்தே தொழவேண்டும்.
நூல் : ரத்துல் முக்தார், பாகம் - 01, பக்கம் - 497
ஐயம் : ஷாபிஈ இமாமைத் தொடர்ந்து ஹனபிகள் வித்ருத் தொழலாமா?
தெளிவு : ஷாபிஈ இமாம் ஒரே ஸலாமாக மூன்று றக்அத்துக்களையும் தொழுதால், அவரை ஹனபிகள் தொடரலாம். இரண்டு ரக்அத்துகளை தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு, பின் ஒரு ரக்அத்தைத் தொழுதால் அவரை ஹனபிகள் பின் தொடர்தல் கூடாது.
நூல் : பதாவா நிஜாமிய்யா, பாகம் - 01, பக்கம் - 22
ஐயம் : நோன்பு வைத்துக்கொண்டு இன்ஜக்ஸன் போடலாமா? குளுக்கோஸ் குத்தி வைக்கலாமா?
தெளிவு : இன்ஜக்ஸன் போடலாம். குளுக்கோஸ் நரம்பு வழியாக வயிற்றை சென்றடைவதால் குளுக்கோஸ் குத்தி வைத்தல் கூடாது. நோன்பு முறிந்துவிடும்.
ஐயம் : நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கலாமா?
தெளிவு : நி்ன்றுகொண்டு சிறுநீர் கழித்தல் மக்றூஹ். இது நஸாராக்களின் வழக்கமும் கூட. நின்று கொண்டு சிறுநீர் கழித்தல் ஒழுக்கமற்ற பண்பற்ற செயல் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அறிவிப்பவர் : புறைதா ரழியல்லாஹு அன்ஹு
இந்நபிமொழியினை அல்பஸ்ஸாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஸஹீஹில் பதிவு செய்துள்ளனர்.
நூல் : பதாவா ஆப்ரிக்கா, பக்கம் - 10
ஐயம் : இன்ன வலியின் பொருட்டால் எனக்குக் குழந்தை பிறந்தால், அக்குழந்தையை அந்த தர்காவிற்கு எடுத்துச் சென்று முடி இறக்கி அதன் எடைக்குத் தங்கம் ஸதகாச் செய்வேன். 40 தினங்கள் அங்கே தங்கி இருப்பேன் என்று நேர்ச்சை செய்வது கூடுமா?
தெளிவு : இறை நேசர்களின் பொருட்டை முன் வைத்து அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பது ஆகுமானது. குழந்தையின் முடியின் எடைக்கு தங்கம் போன்றவற்றை ஸதகா செய்வது கூடும். அதற்காக தர்காக்களுக்குச் சென்று முடி இறக்குவதும், அதற்காக வீண் நிபந்தனைகள் இடுவதும் தேவையற்றதும், அகற்றப்பட வேண்டியவைகளுமாகும்.
நூல் : பதாவா ஆப்ரிக்கா, பக்கம் - 159
Comments
Post a Comment