ஐயமும் தெளிவும்
கேள்வி - பதில்
பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுவது பித்அத்தா?
பெருநாள் தொழுகையும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்தால்...
ஐயம் :
பெருநாள் தொழுகை பள்ளியில் தொழுவது பித்அத் மைதானத்தில் தொழுவதுதான் நபி வழி என்றும் ஜம்ஆவும், பெருநாள் தொழுகையும் ஒரே நாளில் வந்தால் ஜும்ஆக் கடமை இல்லை என்று தௌஹீத் ஜமாஅத்தினர் கூறுகின்றனர். உங்கள் பதில் என்ன?
தெளிவு :
தொழுவதற்குப் பொருத்தமானதும் ஏற்றமானதுமான இடம் பள்ளிவாசலாகும். அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளிதான், நீ நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகத் தகுதியுடையது.
(அல்குர்ஆன் - 09 : 108)
பெருநாள் தொழுகை பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் நபியவர்கள் காலத்தில் நடந்தது உண்மையே! அதே நேரத்தில் மக்கத்துல் முகர்ரமாவில் பெருநாள் தொழுகை மஸ்ஜிதுல் ஹறாமிலும், ஜரூஸலத்தில், மஸ்ஜிதுல் அக்ஸாவிலும் நடந்தது கவனிக்கத்தக்கது.
மதினத்திலும் அதிகமான நகரங்களிலும் பெருநாள் தொழுகை பள்ளிவாசலுக்கு வெளியில் திறந்த வெளியில் நடந்ததற்குப் பிரதான காரணம் இட நெருக்கடியே தவிர வேறு காரணம் கிடையாது. மக்கத்தில் உள்ளவர்களை ஒரே நேரத்தில் உள்ளடக்கும் வசதி மஸ்ஜிதுல் ஹறாமிலும், ஜரூஸலத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவிலும் இருந்ததனால் அங்குள்ளவர்கள் திறந்த வெளியை நாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
மேற்கண்ட விளக்கத்தினை இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது ஷரஹு முஸ்லிம் பாகம் - 03, பக்கம் - 445இல் குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தையே இமாம் கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் தங்களது புகாரி ஷரீபின் விரிவுரை நூலான கஸ்தலானி பாகம் - 02, பக்கம் 209லும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு தினம் பெருநாளன்று மழை பெய்தது. அதே தினம் பெருநாள் தொழுகையை நபியவர்கள் பள்ளி வாசலிலேயே தொழுதார்கள்.
ஆதாரம் : அபூதாவுத், இப்னு மாஜா
பெருநாள் தொழுகை பள்ளியில் தொழுவது ஏற்றமா? திறந்த வெளியில் தொழுவது ஏற்றமா? என்ற கேள்விக்கு இதற்கான முடிவை பள்ளிவாசலின் இடவிசாலம், இட நெருக்கடி என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
பெருநாள் தொழுகை திறந்த வெளியில்தான் தொழ வேண்டும் என்று பிடிவாதம் பேசுவது முட்டாள்தனமாகும். மார்க்கத்தை சரிவர புரியாத காரணத்தினால்தான் இப்படியான வாதம் நமது நாட்டில் முன்வைக்கப்படுகின்றது.
வஹ்ஹாபிகளின் மதிப்பிற்குரிய இமாம் அல்லாமா ஷவ்கானியும் கூட நாம் மேற்கூறிய விளக்கத்தையே சரி காண்கின்றார்கள்.
ஆதாரம் : நைலுல் அவ்தார் பாகம் - 03, பக்கம் - 359
ஒருவர் வீட்டில் வுழுச் செய்துகொண்டு தொழும் நோக்குடன் பள்ளிவாசலை அடையும்வரை வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் ஒவ்வொரு படித்தரம் உயர்கிறது ஒவ்வொரு குற்றம் அழிகிறது என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புகாரி, முஸ்லிம் - மிஷ்காத் பக்கம் - 68
மற்றுமொரு அறிவிப்பில் மேலதிகமாக பின்வருமாறு பதியப்பட்டுள்ளது.
அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால் தொழுபவரின் கூலி அவருக்குக் கிடைப்பதுடன் யா அல்லாஹ் அவர் குற்றத்தையும் மன்னிப்பாயாக! அவருக்கு அருள் புரிவாயாக! என்று மலக்குகள் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆதாரம் : புகாரி ஷரீப்
பள்ளிவாசலில் தொழுதால் கிட்டும் நன்மைகள் பள்ளிவாசலை நோக்கிச் செல்வதால் கிடைக்கும் பயன்கள் எதுவும் திறந்த வெளியில் தொழுவதால் கிட்டப்போவதில்லை. நமது நாட்டில் அதிகமான பள்ளிவாசல்கள் மிக விசாலமாக இருப்பதனால் திறந்த வெளிக்கோ, கடற்கரைக்கோ பெருநாள் தொழுகைக்காகச் செல்ல வேண்டியதில்லை.
கடற்கரையில் அல்லது மைதானத்தில்தான் பெருநாள் தொழுகை தொழ வேண்டும் என்று வஹாபிகள் பிடிவாதம் செய்வது மக்கள் கவனத்தை தன்பால் ஈர்த்துக் கொள்வதற்கும் தாங்கள் ஹதீதின்படி செயல்படுபவர்கள் என்று சுய விளம்பரம் செய்து கொள்வதற்குமான ஒரு நாடகமே தவிர வேறு எதுவும் கிடையாது.
பெருநாள் தொழுகையும் ஜும்ஆவும்
பெருநாள் தொழுகையும் ஜும்ஆவும் ஒரே நேரத்தில் வந்தால் இரண்டையும் தொழ வேண்டும். ஜும்ஆ பர்ழு ஐன் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தொழ வேண்டிய தொழுகை. பெருநாள் தொழுகை முக்கியமான சுன்னத். ஒரு சுன்னத்திற்காக ஒரு பர்ளை விட முடியாது.
இது விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு. இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இரண்டையும் தொழ வேண்டும் என்கிறார்கள். இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பெருநாள் தொழுகை மட்டுமே தொழ வேண்டும் என்கின்றார்கள்.
வஹ்ஹாபிகள் பிக்ஹ் சட்டத்தில் இமாம் அஹமது இப்னு ஹன்பல், இமாம் தாவூத்ழாஹிரி அவர்களையும் அகீதாவில் முஃதஸிலாக்களையும் அதிகமாகப் பின்பற்றுவர் என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அமீறுல் முஃமினீன் ஹளரத் உதுமான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் பெருநாளும், ஜும்ஆவும் ஒரே தினத்தில் வந்தது. அப்போது மதினாவைச் சுற்றியுள்ள தூரத்து கிராமத்து மக்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து நீங்கள் விரும்பினால் செல்வதற்கு அனுமதி அளிக்கின்றேன் என்று கலீபா அவர்கள் கூறினார்கள். இதனையே வஹாபிகள் தங்களுக்குச் சாதகமான ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இதற்கு தெளிவான பதிலை அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது புகாரி ஷரீபின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரி பாகம்- 10, பக்கம் - 207இல் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
நீங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கின்றேன் என்பது (ஜும்ஆத் தொழத் தேவையில்லை என்பதற்கோ) மீண்டு வந்து (ஜும்ஆவில்) சேரவில்லை என்பதற்கோ ஆதாரமாகாது. தவிர மதீனாவைச் சுற்றியிருக்கும் கிராமத்து மக்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் மதீனாவை விட்டும் தூர இடத்தில் இருப்பதால் இவர்களுக்கு ஜும்ஆ கடமை ஆகாது. அதனால், அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கி்ன்றது.
இது பொது அனுமதி அல்ல. இந்த அனுமதி மதீனத்து மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை இங்கு நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பெருநாளன்று ஜும்ஆ இல்லை என்றால் அது தூரத்தில் உள்ளவர் கிட்ட உள்ளவர்கள் என்று வேறுபடுத்த வேண்டியதில்லை.
அதனால் இரண்டும் தொழ வேண்டும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது வழி தவறிய வஹாபிகள் செய்யும் விதண்டாவாதத்தால் அப்பாவி முஸ்லிம்களின் தொழுகை, ஒழுக்கம், பக்தி, மரியாதை உள்ளிட்டவைகளெல்லாம் பாழாகி விடுகின்றன. அதனால் துஷ்டரைக் கண்டால் தூர நில்லுங்கள் என்ற முதியோர் உரையை பேணி நடந்தால் இரு பதியிலும் ஈடேற்றம் பெறலாம்.
உம்றா ஒரு விடுத்தமா?
ஐயம் :
உம்றா ஒரு விடுத்தம்தான் செய்ய வேண்டுமா?
ஹஜ்ஜுக்கு செல்வோர் ஒரு உம்றாவுக்கு மேல் செய்வது கூடாது என்று தௌஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு மௌலவி கூறுகிறார். அவர் கூறுவது சரியா?
தெளிவு :
வசதி உள்ளவர் வாழ்நாளில் ஒரு விடுத்தமாவது உம்றாச் செய்வது கடமை ஆகும். தவிர சுன்னத்தான உம்றாக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வதும் சுன்னத்தாகும். குறிப்பாக றமழான் காலத்தில் உம்றாச் செய்வது ஏற்றமாகும்.
ஹரத்தில் தவாபு செய்வதைவிட உம்றா செய்வது ஏற்றம் என்று இமாம் தகியுத்தீன் ஸுப்கி இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் ஆகியோர் தக்க ஆதாரத்துடன் தனி நூற்கள் வரைந்துள்ளனர்.
ஆதாரம் : ஷறஹு அல் ஈழாஹ் பக்கம் 385
ஒரு உம்றாவுக்கும் மற்ற உம்றாவுக்கும் இடையில் உள்ள குற்றங்களுக்கு இவை குற்றப்பரிகாரமாக அமையும்.
இதன்படி அதிகமதிகம் உம்றாக்கள் செய்தால் இடையில் உள்ள நமது பாவங்கள் அழிகின்றன. தவிர மரணித்தவர்களுக்காக உம்றாச் செய்து அதன் தவாபை அவர்களுக்குச் சேர்த்து வைக்க முடியும். அதனால் ஹஜ்ஜுக்குச் செல்வோர் காலத்தை வீணாக்காது அதிகமதிகம் முடியுமானவரை உம்றாக்களை செய்து தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள முயல வேண்டும். இபாதத் செய்வதை தடுப்பது, குறைப்பது தவிர வஹாபிகளின் பிரசாரத்தில் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.
Comments
Post a Comment