வஹியின் வழிகள்
வஹியின் வழிகள்
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி)
வஹி என்பதற்குரிய பொருளை தப்ஸீர் அல்மனார் ஆசிரியர் அஷ்ஷெய்கு றஷீத் றிழா என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.
அறபு மொழியில் வஹி என்ற சொல்லுக்கு பல பொருட்கள் கூறப்படுகின்றது.
01. சாடை செய்தல்
நபி ஸகரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சமூகத்தை நோக்கி காலையிலும், மாலையிலும் தஸ்பீஹ் செய்யுங்கள் என்று சாடை காட்டினார்கள்.
02. இல்ஹாம்
இதயத்தில் உதிப்பாக்குதல் போடுதல். இது கையால் சாடை செய்தலைவி்ட சற்று அதிக இரகசியத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ (மூலம்) அறிவித்தோம். (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) அவருக்கு பால் கொடுத்துவா (உன்னிடம்) (இருப்பதில்) அவரைப் பற்றி நீ கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டுவந்து சேர்த்து அவரை (நம்முடைய) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்
அல்குர்ஆன் - 28 : 07
03.
இயல்பூக்கம் - உள்ளுணர்ச்சி
சிலரின் இயல்பிலேயே இயற்கையாகவே பதிந்திருக்கும் இயல்பூக்கத்திற்கும் வஹி என்று கூறப்படும்.
உமது இறைவன் தேனிக்கு உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். மலைகளிலும், மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்
அல்குர்ஆன் - 16 : 68
04.
இரகசியமாக செய்தி கூறல்
அடுத்தவருக்கு தெரியாத விதத்தில் ஒருவருக்கு இரகசியமான விதத்தில் செய்தி கூறல் திருக்குர்ஆன் கூறுகின்றது.
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை (காதில்) இரகசியமாக கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள்.
அல்குர்ஆன் - 6 : 12
05.
எழுத்தும் ஏடும்
இரு மனிதர்களுக்கு மத்தியில் ஓர் இரகசியம், அல்லது செய்திப் பரிமாற்றல், கடிதங்கள் மூலம் ஏட்டின் மூலம் நடைபெறுகின்றது. இவை சாதாரண பொதுமகனுக்குத் தெரிவதில்லை. ஆதலால் இவ்வகையானவற்றிற்க்கும் வஹி என்ற சொல் பாவிக்கப்படுகின்றது.
மேற்கண்ட யாவும் வஹி என்ற சொல்லுக்கான அகராதிப் பொருளாகும். மொழியாளர்கள் இச்சொல்லுக்கான விளக்கத்தை மேற்கண்ட வகைகளிளெல்லாம் பாவித்துள்ளனர். அதையொட்டிய அதே சொல்லைத் திருக்குர்ஆனும் பல்வேறு உதாரணங்கள் மூலம் கூறியுள்ளது. அதனை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நோக்கினோம்.
அல்லாஹுத்தஆலாவின் தரப்பிலிருந்து நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வஹி என்பதை தப்ஸீர் மனார் ஆசிரியர் பின்வருமாறு விளக்குகின்றார்.
அல்லாஹுத்தஆலா நபிமார்களுக்கு வழங்கிய வஹி என்பது நபிமார்களின் இதயத்தில் அல்லாஹுத்தஆலாவால் போடப்படும் இரகசிய அறிவை குறிக்கும். இந்த இரகசிய அறிவு வழங்கப்பட முன் அவர்களின் ஆத்மாவிற்கு அதனைத் தாங்கும் வல்லமையை வழங்குவான். அதனை ஏற்கும் வல்லபத்தை அவர்கள் பெற்றதும் மலக்குகளின் வழியாகவும் வேறு வழியாகவும் அவர்களுக்கு வஹி அறிவிப்பான்.
தப்ஸீர் மனார், பாகம் - 06, பக்கம் - 68.
ஒரு நபிக்கு வஹி அறிவிக்க அல்லாஹுத்தஆலா நாடினால், மலக்கிற்கு உள்ளுணர்வை ஏற்படுத்துவான். அந்த மலக்கானவர் அதனை லௌஹுல் மஹ்பூல் பலகையில் படித்து மனனமிட்டவராக குறித்த நபியிடம் ஒப்புவிப்பார்.
ஆதாரம் : அல்இத்கான், பாகம் - 1, பக்கம் - 58
வஹி பின்வரும் ஐந்து வழிகளில் ஒரு வழியாகவே இறங்கும் அவை வருமாறு,
01.. மணி ஓசையுடன்
02. ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் மனித உருவில் வந்து நேரில் கொடுத்தல்.
03. ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தனது சுய உருவில் வெளியாகி வஹி வழங்கல்
04. எதுவித இடைத் துணைகளுமின்றி அல்லாஹுத்தஆலா நேரில் உரையாடுதல்
05.ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எந்த ஓர் உருவத்திலும் தோன்றாமல் புனித இதயத்தில் வஹியைப் போடுதல்.
ஆதாரம் : அல்இத்கான், பாகம் 1, பக்கம் - 60
புகழ் பூத்த ஹதீஸ் கலை மேதையான ஹளரத் ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். வஹி பல தரங்களைக் கொண்டுள்ளது என்று உலமாக்கள் கூறுகின்றார்கள்.
01. நல்ல கனவுகள்
நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முதன் முதலில் நல்ல கனவின் மூலமாகவே நற்செய்திகள் வந்தன.
02. வானவர் திருத்தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் காட்சி கொடுக்காமல் புனித இதயத்தில் போடுவார்கள்.
03. ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விரும்பிய ஒரு மனிதனின் கோலத்தில் தோன்றி நேரில் வஹியை ஒப்புவித்தல்
04. மணி ஓசை மூலமாக வஹி அருளப்படல். இதன் பொருளை நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தவிர்த்து வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. வஹியின் வகைகளில் நபியவர்களுக்கு மிகக் கடினமானது இதுவாகும்.
05. ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தங்களது சுய உருவம் தோன்றி, வஹியை ஒப்புவித்தல். நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இரு முறை இவ்வாறு வஹி வழங்கப்பட்டுள்ளது.
06. நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிஃறாஜின்போது அர்ஷைத் தாண்டிச் செல்லும்போது வஹி வழங்கப்படல். தொழுகை போன்றவைகள் இந்த வஹியைச் சேர்ந்ததாகும்.
07. மூஸா நபி அவர்களுடன் அல்லாஹுத்தஆலா உரையாடியது போன்று நேரடியாக நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உரையாடல்.
08. அல்லாஹுத்தஆலா நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் திரையின்றி உரையாடல் சிலவேளை கனவி்ல் அல்லாஹுத்தஆலா தரிசனம் வழங்கி உரையாடுவது. எனது றப்பை அழகிய உருவில் கண்டேன் என்று நபியவர்கள் கூறியது இவ்வகையான வஹி பற்றியதாகும்.
நாற்பத்தாறு வகையான வஹி தனக்கு அருளப்பட்டதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக மவாஹிபுல்லதுன்னியா என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : மதாரிஜுன் நுபுவ்வத், பாகம் - 2, பக்கம் - 572, 573
வஹி எப்போதும் அறபு மொழியிலேயே அருளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபிமார்களும் அதனை தங்களது மொழிக்கு மாற்றி உம்மத்தினருக்கு கூறுவார்கள்.
ஆதாரம் : இத்கான், பாகம் - 1 , பக்கம் - 60
திருக்குர்ஆனில் முதல் வஹி றமழான் 17இல் அல்லது றமழான் 24இல், திங்கள் சஹர் வேளை இறங்கியது.
ஆதாரம் : தப்ஸீர் நயீமி, பாகம் - 2, பக்கம் - 213
அல்பிதாயா, பாகம் - 2, பக்கம் - 78
முதல் வஹிக்கும் இரண்டாவது வஹிக்குமிடையிலான கால இடைவெளி எவ்வளவு என்பதில் இமாம்களில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன.
01. தப்ஸீர் அஸீஸியில் பத்து நாட்கள்
02. 12 நாட்கள் என்று ஹளரத் இப்னு ஸரிஹ்
கூறுகின்றார்கள்.
03. 15 நாட்கள் என்று ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்.
04. நாற்பது நாட்கள் என்று ஹளரத் மகாதிர் கூறுகின்றார்கள்.
05. வேறு சிலர் 3 வருடங்கள் என்கி்ன்றனர்.
ஆதாரம் : தப்ஸீர் அலம் நஷ்றஹ், பக்கம் 63,64
இறுதியாக வஹி எப்போது இறங்கியது என்பதிலும் தப்ஸீர்களுக்குரிய இமாம்களிடத்தில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன.
1. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வபாத்தாகுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்
ஆதாரம் : தப்ஸீர் ஜலாலைன் ஓரக்குறிப்பு
2. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வபாத்தாகுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்
ஆதாரம் : தப்ஸீர் நயீமி பாகம் - 03, பக்கம் - 199
03. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வபாத்தாகுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்
ஆதாரம் : தப்ஸீர் ஜலாலைன் ஓரக்குறிப்பு
04. துல்ஹிஜ்ஜா பிறை பத்தில் மினாவில் இறுதிப் பிரசங்கம் நிகழ்த்தியபோது இறுதியாக வஹி வந்தது என்று தப்ஸீர் குர்துபி கூறுகின்றது.

Comments
Post a Comment