உலகம் தோன்றக் காரணமான உத்தம நபியின் உயர்வான சிறப்புக்கள்
உலகம் தோன்றக் காரணமான உத்தம நபியின் உயர்வான சிறப்புக்கள்
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்
றபிஉல் அவ்வல் மாதம் கண்ணியம் பொருந்திய ஒளிமயமான மாதமாகும். வையகக் காரணி நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பிறந்த கண்ணியம் பொருந்திய மகத்தான மாதமாகும். நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் இம்மாதத்தில் பிறந்த காரணத்தால் இம்மாதமும், முஃமின்களின் இதயங்களும் ஜொலித்தன. ஏன் பிரபஞ்சமே பெருமானாரின் வருகையினால் ஒளிமயமானது. றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஒளிமயமாக உள்ளதால் வையகம் ஜோதி மயமாகிவிட்டது.
நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைப்பற்றி தித்திக்கும் தேன் மறையாம் அல்குர்ஆன் பின்வருமாறு அறிமுகம் செய்கின்றது.
1. அவன் (அல்லாஹ்) அவன் திருத்தூதரை நேர்வழியைக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
2. முஃமீன்களிலிருந்து ஒரு றஸூலை அனுப்பி அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பேருபகாரம் புரிந்தான்.
3. நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் வந்துள்ளது.
4. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சி கூறுபவராக நாம் அனுப்பியுள்ளோம்.
மேற்கண்ட திருவசனங்களைச் சற்று உற்றுநோக்கிப் பாருங்கள்! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களின் வருகை, வருகையின் நோக்கம், வருகையின் பலன், உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருமானாரின் வருகையில் பொதிந்து நிற்கும் மகத்துவங்களை பல்வேறு தலைப்பில் அல்லாஹுத்தஆலா அறிமுகம் செய்து வைக்கும் பாங்கை ஒரு தரம் மீட்டிப் பாருங்கள்! இவை வருகையின் முக்கியத்துவத்தை பறை சாற்றுகின்றன.
உம்மை உலகிற்கு அருளாக அன்றி நாம் அனுப்பவில்லை என்று கூறுகின்றது. அல்குர்ஆன் மேலும், நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஹிதாயத்தைச் சுமந்தவர்களாக வையகம் வந்தார்கள் என்று மிகத்தெளிவாக பறை சாற்றுகின்றது. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களின் புனித பிறப்பு நினைவுக்கு வரும்போது பின்வரும் மூன்று விடயங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.
1. நபி நாதரின் படைப்பின் விதம்!
2. நபிகள் நாதரின் புனித பிறப்பு!
3. நபிகள் நாதரின் நபித்துவம்!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் படைப்பு பிரபஞ்சம் தோன்றமுன் நிகழ்ந்துள்ளது. நபிகளார் நவின்றார்கள் முதன் முதலில் அல்லாஹுத்தஆலா எனது ஒளியையே படைத்தான் ஹள்ரத் முஜத்தித் அல்பதானி செய்யித் அஹ்மத் ஸர்ஹிந்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மக்தூபாத்தில் பின்வரும் ஹதீதைக் கூறியுள்ளார்கள்.
படைப்பால் நான் முதல்வன். நபியாக அனுப்பப்பட்டதில் இறுதியானவர் மேலும் கூறினார்கள்.
ஆதம் மண்ணுக்கும், நீருக்குமிடையில் இருக்கும்போது நான் நபியாக உள்ளேன். இதே கருத்தைக் கொண்ட மற்றுமொரு அறிவிப்பில்
ஆதம் றூஹுக்கும், திரேகத்திற்குமிடையி்லிருக்கும்போது (அதாவது உடலில் உயிர் சேரமுன்) நான் நபியாக உள்ளேன்.
மேற்கண்ட ஹதீதுக்கு நபிஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலில் உயிர் ஊதமுன் அல்லாஹ்வின் அறிவில் நபியாக இருந்தார்கள் என்று சிலர் விளக்கம் பகர்கின்றனர். இந்த விளக்கம் குறைமதியில் உதித்ததாகும். அல்லாஹ்வின் அறிவில் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மாத்திரமல்ல எல்லா நபிமார்களும்தான் இருந்தார்கள், அப்படியாயின் ஹதீதின் பொருள் என்ன?
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் மண்ணுக்கும், நீருக்குமிடையிலிருக்கும்போது நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபியாகவே இருந்தார்கள் என்று சான்றோர்களான பேரறிஞர்கள் கூறியுள்ளனர். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பிரபஞ்சத்தின் முதல்வராகவும் கருவூலமாகவும், காரணியாகவும் இருப்பதினால்தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்படுவதற்கு முன்பே நபிமார்கள் மற்றும் ஏனையவர்களின் ஆன்மாக்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள்.
ஹதீதுக் குத்ஸியில் நபிகளார் நவின்றார்கள். உம்மை நாம் படைக்கவில்லையாயின் உலகை நாம் படைத்திருக்க மாட்டோம்.
மற்றுமொரு ஹதீதில் உம்மைப் படைத்திருக்காவிட்டால் கோளங்களைப் படைத்திருக்க மாட்டோம். தப்ஸீர் ஹுஸைனியில் மேலும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
உம்மைப் படைக்கவில்லையாயின் பூபியத்தை வெளிப்படுத்தியிருக்க மாட்டேன்.
சிலர் மேற்கண்ட ஹதீதுகள் ழயீபானவைகள் என்று ஓலம் போடுகின்றனர்.
அவர்கள் பலவீனமானவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்கள் முதற் படைப்பு என்பதற்கு திருக்குர்ஆனே சாட்சியாக உள்ளது.
நபியே! உம்மை அனைத்து உலகத்திற்கும் நாம் றஹ்மத்தாகவே அனுப்பியுள்ளோம். என்ற திருவசனமே நமது வாதத்திற்கான பிரதான ஆதாரமாகும்.
அர்ஷ் - குர்ஷி பின், மண், மலக்குகள், ஜின்கள், கோளங்கள், கனிமம், தாவரம் உள்ளிட்ட அனைத்துப் படைப்பினங்களும் அகிலங்களுக்குள் அடங்கும். அகிலங்கள் என்னும்போது அல்லாஹுத்தஆலா தவிர்ந்த யாவும் அடங்கும்.
றஹ்மத் என்ற சொல் மஸ்தர் பெயர்ச் சொல்லாகும். இச்சொல் வினைப்பெயர் சொல்லின் பொருளில் வரும் இதன்படி
உம்மை அகிலங்கள் அனைத்துக்கும் அருள் பாலிக்கின்றவராகவே நாம் அனுப்பியுள்ளோம் என்று பொருள்வரும். அப்படியாயின் அகிலங்கள் யாவும் அண்ணலார் பால் அருளில் தேவையாக உள்ளன என்பது புலனாகின்றது.
அகிலங்களுக்கு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அருள் பாலிப்பவராக ஆனதற்கு பிரதான காரணம் அன்னார் அகிலங்களுக்கெல்லாம் மூலமாக இருப்பதினாலாகும். இதன்படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலங்களுக்கு வேராகவும், அகிலங்கள் கிளையாகவுமிருக்கின்றன.
வேர் இல்லாமல் கிளைகளால் நிலைக்க முடியாது. வேர் காய்ந்தால் கிளையி்ல் பசுமை இருக்காது. கிளைக்கு வேரிலிருந்தே ஆகாரம் செல்கின்றது. வேர் மரத்தின் அடிக்கும், மரத்தின் அடி, மரத்தின் பெரும் கிளைகளுக்கும், கிளைகள் சிறுசிறு கொப்புகளுக்கும், இக்கொப்புகள் இலை, பூ, காய், உள்ளிட்டவைகளுக்கும் ஆகாரத்தைச் செலுத்துகின்றன. இந்த வகையில் மரத்தின் அனைத்து அங்கங்களும் வேரில் தங்கியிருக்கின்றன. வேர் கிளைகள்பால் இயல்பாகவே இரக்கம் கொண்டிருப்பது போன்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பிரபஞ்சத்தில் இரக்கம் மிக்கவர்களாக அருள் வடிவாக உள்ளார்கள்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிற்கும் அருளாக இருக்கின்றார்கள். அது புலச்சார்புள்ளதாகவோ, புலச்சார்பற்றதாகவோ இருக்கலாம். ஆகாயத்திற்கு மேலிலிருக்கலாம். பூமியின் பாதாளத்திலிருக்கலாம். நீரிலிருக்கலாம். வெட்ட வெளியில் இருக்கலாம். எங்கு எதில் இருந்தாலும் அனைத்திற்கும் அஹ்மது முஜ்தபா முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அருளாக உள்ளார்கள்.
இப்போது கூறுங்கள்! முதலில் தோன்றுவது கிளையா? வேரா? எது? மரவேர்தான். அகிலங்கள் கிளை நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வேராகும். அப்படியாயின் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மூலமாகவும் முதலாவதாகவும் உள்ளார்கள். அகிலங்கள் அதைத் தொடர்ந்துள்ளது. இந்த வகையில் கிளையாக அகிலங்கள் வேராகிய றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பால்தான் இருப்புக்காக ஒவ்வொரு வினாடியும் தேவையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா.
யார் எதில் தங்கியுள்ளாரோ அவர் முதலாவதாகவும் தேவையுள்ளவர் பின்னவராகவும் இருப்பதுதான் நியதி. அகிலங்கள் நபியவர்கள்பால் தேவையாக உள்ளன. அகிலங்களில் எதிலும் நபியவர்களுக்கு எதுவித தேவையும் கிடையாது. இந்த வகையில் நபியவர்கள்தான் முதற் படைப்பாகும். அவர்களுக்குப் பின்புதான் அகிலங்கள் படைக்கப்பட்டன.
இதன்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் அருள் இல்லையாயின் பிரபஞ்சம் ஜீவிக்க முடியாது. வஹாபிகளில் ஒருவரான இஸ்மாயில் திஹ்லவி என்பவர் தனது வழிகேட்டின் கருவூலமான தக்வியத்துல் ஈமானில் நபியவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் (நஊதுபில்லாஹ்) என்று எழுதி வைத்துள்ளார். இந்த நூல் ஒவ்வொருவரின் இல்லத்திலும் அவசியம் இருக்க வேண்டும் என்று மற்றுமொரு இந்திய வஹாபிசத் தலைவர் அப்துர் றஷீத் கங்கோஹி தனது பதாவா றஷீதிய்யாவில் எழுதியுள்ளார். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைப் பற்றி இவர்களின் விசுவாசத்தின் இலட்சணம் இதுதான். இவர்களின் ஆபாச வாதங்களை ஒவ்வொரு முஸ்லிம்களின் இதயத்திலும் கபடத்தனமாக நுழைப்பதற்குத்தான் முஸ்லிம்களில் ஒரு கூட்டம் திருட்டுத் தனமாக செயல்படுகின்றது. இவர்கள் விடத்தில் முஸ்லிம்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் நீர் அருந்தினார்கள், சாப்பிட்டார்கள், நிலத்தில் நடந்தார்கள், சுவாசித்தார்கள், அன்றாட உலகியல் தேவைகள் யாவும் நம்மைப்போன்று அவர்களுக்கும் அவசியமாகவே இருந்தன. இந்நிலையில் உலகத்தின் வேராக அவர்கள் எப்படி இருக்க முடியும்? உலகின் எத்தேவையும் அவர்களுக்கு அவசிம் இல்லை என்று எவ்வாறு இயம்ப இயலும்? என்று கேட்போர் மிஃறாஜ் நிகழ்வை மீட்டிப் பார்க்க வேண்டும். நடப்பதற்குத் தரை வேண்டும், சுவாசிக்க காற்று வேண்டும், பருக நீர் வேண்டு்ம், உண்ண உணவு வேண்டும், இவைகள் இன்றி நாம் உயிர்வாழ முடியாது. இதில் எவருக்கும் துளியும் ஐயமும் கிடையாது. ஆனால், நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மிஃறாஜ் அன்று அந்தரத்தில் சஞ்சரித்தார்கள். அங்கு காற்றோ, நீரோ எதுவும் கிடையாது. தவிர சூரிய மண்டலத்தையும் தாண்டினார்கள். அது அவர்களைச் சுட்டெரிக்கவில்லை.
உலகியல் தேவையுள்ள ஒருவரால் இப்படியான ஒரு பயணத்தை நிச்சயமாக மேற்கொள்ள முடியாது என்பது உறுதி! புவியில் வாழ்வோரின் தேவைகளில் தங்கியிராதது போன்றே விண்ணிலுள்ளவர்களின் தேவைகளிலும் அன்னார் கட்டுப்படவில்லை என்பதும் தெளிவாகும். மிஃறாஜ் இரவில் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஒவ்வொரு வானமாகக் கடந்து சென்றார்கள். இறுதியாக குர்ஷி, சித்ரதுல் முன்தஹா, அர்ஷு உட்பட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பகுதிகளையும் கடந்து முன்னேறிச் சென்றார்கள்.
பர்ஷு என்ற பாதாளத்திலிருந்து, அர்ஷு என்ற மகத்தான இடம் வரையுள்ள பகுதி பிரபஞ்சமாகும். மிஃறாஜ் இரவில் நபியவர்கள் பிரபஞ்சத்தின் தொடக்ம் முதல் முடிவு வரையும் பயணித்து தாண்டியும் சென்றார்கள்.
தரையில் நாம் பாதம் பதிக்காமல் நிற்க முடியாது. காற்றில்லாமல் எம்மால் சுவாசிக்க முடியாது. நீரின்றி எம்மால் வாழ முடியாது, தரை கீழ் நோக்க நபியவர்கள் மேலோங்கிச் சென்றார்கள். காற்று மண்டலம், நெருப்பு மண்டலம், நீர், ஆகாரப் பகுதிகள் யாவும் பின்நோக்கி் நி்ற்க முத்தொளி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மேலோங்கினார்கள். பிரபஞ்சத்தின் எப்பகுதியிலும் எந்தத் தேவையும் ஏந்தல் நபிக்கில்லை என்பதைத்தானே இது சுட்டிக் காட்டுகி்ன்றது.
அர்ஷு வரையிலுமான பகுதிகளில்தான் காலம், வெளி உண்டு. நபியவர்கள் அர்ஷையும் தாண்டிச் செல்லும்போது, காலம், வெளியில்லாத பகுதிக்குள் நுழைந்தார்கள், பின் ஒளிஉலகத்தையும் தாண்டினார்கள். இப்பயணத்தில் பிரபஞ்சத்தின் அனைத்துப் பகுதிகளையும் தாண்டிச்சென்று, எனக்கு பிரபஞ்சத்தில் எத்தேவையும் இல்லை என்பதையும், பிரபஞ்சம் தனது அருளில் தங்கியுள்ளது என்பதையும், பின் ஏகமான எல்லாம் வல்ல அல்லாஹ்வில் மட்டுமே தான் தங்கியிருப்பதாகவும் இப்பயணத்தில் நிரூபித்தார்கள்.
காற்றின்றி பறவையால் வெளியில் பறக்க முடியாது. நீரின்றி மீன்களால் வாழ முடியாது. பறவைக்கு காற்றும், மீனுக்கு நீரும் அவசியம். இவற்றிலிருந்து பறவையையும், மீனையும் வேறுபடுத்தினால் அவை வாழ முடியாது. இறந்துவிடும். ஒரு பொருள் வாழ்வதற்கு எது இன்றியமையாததாக உள்ளதோ அதை அவர் அதிலிருந்து பிரித்தால் அவை தனித்து வாழ முடியாது என்பது வெளிப்படை.
பிரபஞ்சதில் நபியவர்கள் தங்கியில்லை. ஆனால்,பிரபஞ்சம் நபியவர்களில் தங்கியுள்ளது என்றால் மிஃறாஜில் பிரபஞ்சம் எப்படி நிலைத்து நின்றது? நீரின்றி மீன் வாழ முடியாது. அதுபோன்று நபியவர்களைப் பிரிந்து பிரபஞ்சம் எப்படி இருக்க முடியும் என்று கேட்போர் நபியவர்களி்ன் யதார்த்தத்தைப் புரியவில்லை என்பதே பொருளாகும். நபிகள் கோமானின் அந்தரங்கம் என்ன?
நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அல்லாஹ் அல்ல! அல்லாஹ்வின் பங்காளியும் இல்லை! அல்லாஹ்வின் மகனும் இல்லை! அல்லாஹுத்தஆலாவுக்கு மகன் உண்டு என்ற கூற்றில் பரிசுத்தமானவன், அவனுக்கு யாரும் இணை இல்லை, அவனுக்கு இணை உண்டு என்பதில் அவன் பரிசுத்தமானவன், நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அல்லாஹ்வும் இல்லை, அன்னார் அல்லாஹ்வின் ஹபீப் நேசராகும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடிமையாகும்.
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பரிசுத்தமான அடிமையாக இருந்துகொண்டு படைப்பினங் களிலிருந்து வேறுபட்டு எப்படி இருக்க முடியும்? என்று சிலர் கேட்கலாம். பின்வரும் விளக்கத்தை ஊன்றிக் கவனியுங்கள். உண்மை எளிதாகிவிடும்.
கலீலுல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது,
அவ்வாறே நாம் இப்றாஹீமுக்கு வானம் புவியின் சூக்குமங்களைக் காண்பித்தோம் (காரணம்) அவர் உறுதியுள்ள வர்களுள் ஆகுவதற்காக.
ஹபீபுல்லாஹ் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது,
நாம் உம்மை சாட்சி பகர்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் உதவியுடன் (மக்களை மார்க்கத்தின்பால்) அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் அனுப்பி உள்ளோம்.
நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை அகிலமனைத்துக்குமே பிரகாசிக்கும் விளக்காக அனுப்பி உள்ளான் என்பதை பின்வரும் திருவசனம் தெளிபடுத்துகின்றது.
உலகத்தாருக்கு எச்சரிப்பவராக இருக்க வேண்டும் என்பதற்காக தனது அடியார் மீது புர்கான் வேதத்தை இறக்கிய நாயன் பரிசுத்தமானவன்.
சூழலுக்குத் தக்க விதத்தில்தான் விளக்கும் அமையும்! சிறிய அறைக்கு சிறிய விளக்கும், மண்டபத்திற்கு வெளிச்சம் கூடிய விளக்கும், மைதானத்திற்கு அதிகூடிய வெளிச்சமிக்க விளக்கும் தேவை, நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலம் அனைத்திற்கும் அகல் விளக்காக விளங்குகிறார்கள்.
விளக்கு ஓரிடத்திலிருந்து அதன் சுடர் அதுசார்ந்த பகுதியை வியாபித்துமிருக்கும். விளக்கின் சுடர், தரையிலும் படும், சுவரிலும் விழும், முகட்டிலும் பிரகாசிக்கும், ஆனால் விளக்கு ஒரு இடத்தில் இருக்கும் அதன் சுடர் எல்லாப் பக்கமும் வீசிக் கொண்டிருக்கும்.
நபியவர்கள் மதீனத்துல் முனவ்வறாவிலிருக்கையில், அவர்களின் சுடர் அர்ஷில் படும், அர்ஷிலிருக்கையில், தலமற்ற பகுதி தகதகக்கும். அர்ஷு தாண்டி தலமற்ற பகுதியிலிருக்கையில் தரை முழுவதும் ஜொலிக்கும். ஏந்தல் நபியவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சுடர் அகிலமெங்கும் இருக்கும். அதனால், பிரபஞ்சத்திற்கு அப்பால் பெருமானார் இருந்தாலும் அன்னாரின் அகல் விளக்கு அகிலமெங்கும் அணையாது தீபமிட்டுக் கொண்டே இருக்கும்.
இதுதான் முஸ்தபா நபியவர்கள் பூரணம் (கமால்) அன்னாரி்ன் பேரழகு! நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அல்லாஹ்வின் தாத்து, சிபத்துக்களின் பேரொளியின் கண்ணாடியாக விளங்குகின்றார்கள், நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள், என்னைக் கண்டவர் ஹக்கை கண்டார்
ஆதாரம் : புகாரி முஸ்லிம்
நபியவர்களை நாம் அல்லாஹ்வுக்கு நிகராகப் பார்ப்பதில்லை. அல்லாஹ் இணை, துணை நிகர் யாவற்றிலும் பரிசுத்தமானவன். ஆயினும், அன்னார் அல்லாஹ்வின் தாத், பண்புகளின் கண்ணாடியாக விளங்குகின்றார்கள். அல்லாஹுத்தஆலா தனது ஜமாலியத்தை பெருமானாரில் வெளிப்படுத்தினான். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அல்லாஹ்வின் ஒளியின் மூலம் படைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ்வின் ஒளியால் நபியவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றால் அல்லாஹ்வின் ஒளியில் நபியவர்கள் ஒரு பகுதியா? என்று சிலர் கேட்கலாம்.
இது பிழையான ஒரு கேள்வியாகும், தொகுதி, பகுதி எல்லாம் படைக்கப்பட்டவையாகும், படைக்கப்பட்ட பகுதி, விகுதி, தொகுதி எல்லாவற்றையும் விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவனாகும்.
வானத்திலிருக்கும் சூரியனுக்கு நேராக பூமியிலிருந்து கண்ணாடியை நேர்படுத்தினால் அதன் விம்பம் கண்ணாடியில் படும். சூரியனின் ஒளி கண்ணாடியில் பிரதிபலிப்பதால் சூரியனின் ஒளியில் ஏதும் குறைவு ஏற்படுமா? நிச்சயமாக இல்லை!
நான் ஹக்கின் ஜமாலின்கண்ணாடி ஆவேன் என்று நபியவர்கள் நவின்றார்கள். கண்ணாடியில் பிரதிபலிக்கும் வெளிச்சம் சூரியனுடையது. நபியவர்களில் வீசும் பிரகாசம் நபியவர்களுடையது அன்று! நிச்சயமாக அது அல்லாஹ்வின் ஞானமே. நபியவர்கள் மூலம் வெளிப்படுகின்றது. நபியவர்கள் மூலம் வெளிவரும் சக்தி நபியவர்களுடையது அன்று நிச்சயமாக அது அல்லாஹ்வுடையதாகும். அபூகுபைஸ் மலையில் நபியவர்களின் ஆற்றலால் சந்திரனைப் பிளக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் சக்தியினால்தான் சந்திரனைப் பிளந்தார்கள்.
மார்க்கம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் மூலமாக நமக்கு கிடைத்தது. இறை ஞானமும் திர்குர்ஆனும் அவர்கள் மூலமாகத்தான் நமக்குக் கிடைத்தன. திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்று நாம் கூறுகின்றோம்.
அவ்வாறே நாம் நம்புகின்றோம். இதில் எதுவித மாற்றமுமில்லை. ஆயினும், திருக்குர்ஆன் தூதரின் கூற்று என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. குர்ஆன் எனது சங்கையான தூதரின் கூற்றாகும்.
திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்பதில் இரண்டாம் கருத்துக் கிடையாது. ஆயினும், மேற்கண்ட திருவசனத்தின்படி திருகுர்ஆன் அல்லாஹ்வின் கூற்றின் வெளிப்பாடாகும்.
நபியவர்களின் பேச்சு, கேள்வி, பார்வை, ஞானம், சக்தி யாவும் அல்லாஹ்வி்ன் பண்புகளின் பிரதிபலிப்புக்களாகும். ஹஸரத் ஸஃதுப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹுவை அடக்கம் செய்யும்போது ஸஃதின் மரணத்தால் அர்ஷு ஆடியது என்று கூறினார்கள். விண்ணில் கிரகங்களின் அசைவின் ஓசையை நான் கேட்கி்ன்றேன். விதி எழுதும் கோலின் ஓசையையும் கேட்கின்றேன் என்றார்கள். மிஃறாஜ் அன்று பிலாலின் காலடி ஓசையை சொர்க்கத்தில் கேட்டதாகக் கூறினார்கள்.
ஹஸரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு பூமியில் இருக்கின்றார்கள். அவர்களின் காலடி ஓசையை சொர்க்கத்தில் கேட்கின்றார்கள். பின்னால் நடக்க இருக்கும் ஓசையை நபியவர்கள் முன்கூட்டிக் கேட்கும் திறனைப் பெற்றுள்ளார்கள் எனின் அவர்களி்ன் செவிப் புலனின் கூர்மையின் வேகத்தை என்னவென்று உரைப்பது?
.jpeg)
Comments
Post a Comment