ஐயமும் தெளிவும்
ஐயம் : கடமையான ஐங்காலத் தொழுகைகளில் இறுதி ஸலாம் இடது பக்கமாக கொடுத்துவிட்டால் தொழுகை முடிந்து விட்டது எனச் சில இஸ்லாமிய இயக்கங்கள் கருதுவதோடு இறுதி ஸலாத்திற்குப் பிறகு எதுவிதமான சப்தமிட்டுச் செய்யும் அமலும் கிடையாது என்று கூறி மௌனவிரதமாக இருக்கின்றனர். ஸஹாபாக்கள் காலத்தில் சப்தமிட்டு பர்ளான தொழுகையின் பின் திக்று செய்ததற்கு ஆதாரம் தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தெளிவு : இதற்கு நேரடியான ஹதீதுகள் இருக்கின்றன. சிந்தனைக்காக ஒரு ஹதீதை மட்டும் தருகின்றேன்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாகத் திக்று செய்யும் நடைமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்றின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.
ஸஹீஹுல் புகாரி, ஹதீது எண் - 841
இதனைப்போன்ற ஹதீதுகள் ஸஹீஹ் முஸ்லிமிலும், ஏனையவற்றிலும் பதிவாகியுள்ளது. தற்காலத்தில் பர்ளான தொழுகைகளுக்குப் பின்னால் செய்யப்படுவது போன்ற அமல் நபியவர்கள் காலத்தில் நடைபெறவில்லை என்றால் இந்த ஹதீது அர்த்தமற்றதாகிவிடும். இந்த ஹதீதை அர்த்தமுள்ளதாக இந்த இயக்கங்கள் எப்போது ஆக்குவார்களோ! இருந்து பார்ப்போம். சிலவேளை இந்த ஹதீத் இவர்களுக்கு 20 வருடங்களுக்குப் பின்னர் விளங்கக்கூடும் அல்லவா? அப்போது அவர்கள் இப்போதுதான் எங்களுக்கு ஹதீது கிடைத்துள்ளது என்பார்கள்.
ஐயம் : மதீனாவில் மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்கலாமா?
தெளிவு : ஆம். உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
இறைவா! உன் பாதையில் வீர மரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் (மதீனா) ஏற்படுத்து!
நூல் : ஸஹீஹுல் புகாரி, ஹதீது எண் - 1890
ஐயம் : நபியல்லாதவர்களின் உடல் பொதுவாக ஒருவர் மரணித்து 07 நாட்களுக்குள் வெடித்து நாற்றமெடுக்கும் என்பது உலகறிந்த உண்மை. ஆனாலும், நபிமார்களின் உடல்கள் அப்படியே அழியாது இருக்கிறது என்பது உண்மைதான். அதுபோல வலிமார்களின் உடல்களும் அவர்கள் மரணித்த பின்னர் கப்றில் உடலழியாது உள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
தெளிவு : இதற்கு நேரடியான ஹதீதுகள் பல இருக்கின்றன. இருப்பினும் தங்களது ஆய்வுக்காக கீழ்வரும் ஹதீதைப் படியுங்கள்.
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்,
உஹதுப்போர் நடக்கவிருந்தபோது எனது தந்தை அன்றிரவு என்னை அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சகாக்களில் (நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும், எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தவிர மற்றவர்களில் உங்களைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவி்ல்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீங்கள் அடைப்பதுடன் உங்களது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள் என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரைக் கப்றில் விட்டுவைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்டு) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்றிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர்போல அவரது காதைத்தவிர, உடம்பு அப்படியே இருந்தது.
நூல் : ஸஹீஹுல் புகாரி, ஹதீது எண் - 1351
இன்று ஸிரியாவில் ஒரு ஸஹாபியின் உடல் தீவிரவாதிகளால் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டும், அப்படியே உடல் இருப்பதின் உண்மைத் தன்மையை மேற்கண்ட ஹதீத் தெளிவுபடுத்துகின்றது.
Comments
Post a Comment