தௌபாவின் தலைவாசல் தாஹாநபி!
தௌபாவின் தலைவாசல் தாஹாநபி!
கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்,
அவர்கள் அவர்களின் ஆத்மாக்களுக்கு அநியாயம் செய்து கொண்டால், (நபியே!) உங்களிடம் (முதலில்) வர வேண்டும். (உங்கள் முன்னிலையில்) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.பின் ரஸுலும் அவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டு்ம். (இதன்பின்) தௌபாவை ஏற்று அருள் செய்தவனாக அல்லாஹ்வைக் காண்பான்.
நோயாளி நோயிலிருந்து சுகம்பெற வேண்டுமாயின் வைத்தியனிடம் செல்ல வேண்டும். அவன் கொடுக்கும் அவுடதத்தை அருந்த வேண்டும். இதுதான் நடைமுறை. மேற்படி திருவசனத்தில் பாவக்கறையால் பாதிக்கப்பட்ட நோயாளி இருபதிற்கும் வைத்தியராக விளங்கும் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருச்சமூகம் சென்று சுகம் பெறுமாறு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
பெருமானாரின் மருந்தகத்தில் சுகம் பெற்றவர்கள் சித்தீக்காக, பாறூக்காக தின்நூறைனாக, அசதுல்லாஹ், ஸைபுல்லாஹ், சாஹிபுஸ்ஸிர்ரு என்று பட்டம் பெற்று வெளிவருகின்றனர். இத்திருவசனத்தில் சில முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளன.
01. அவர்கள் - என்ற சொல் பொதுமையாக இருப்பதனால் அனைவரும் அங்கே செல்வது கடமையாகும். அநியாயம் செய்து கொண்டவர்கள் என்பதிலிருந்து அனைத்து வகையான பாவங்களும் உள்ளடக்கப்படுகின்றன. பெரும்பாவங்கள், சிறிய பாவங்கள் செய்தவர்கள் அங்கே செல்ல வேண்டும்.
பெருமானாரின் மருந்தகத்தில் உடல், உள, ஆன்மீக நோய்களுக்கெல்லாம் பரிகாரம் காணப்படுகி்ன்றன. எந்த நோய் என்றில்லாமல் எல்லா நோய்க்கும் அங்கு தீர்வு கிடைக்கின்றன. இச்சிகிச்சை முறை பெருமானாரின் ஜீவித காலத்தில் மட்டுமன்றி யுக முடிவு நாள் வரையிலும் அதன் வாசல் திறந்தே உள்ளது.
02. மேற்படி திருவசனத்தின் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் தங்களின் வபாத்தின் பின்பும் தங்கள் உம்மத்தின் நிலைகளை நன்குணர்ந்தவர்களாகவே உள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. பெருமானாரிடம் இருந்து பேரருளை அவர்களின் மறைவி்ன் பின்பும் ஆன்மாக்கள் பெற்று வருகின்றன என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்கின்றோம்.
03.உம்மிடம் வர வேண்டும் - என்பதிலிருந்து குற்றம் மன்னிக்கப்பட வேண்டுமாயின், பெருமானாரின் திருச்சபைக்குச் செல்ல வேண்டியது அவசியம் என்பது புரிகின்றது. மதீனத்துல் முனவ்வறாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு வசதிகள் எல்லோருக்கும் சாத்தியமாக மாட்டாது. அதனால், பெருமானாரின் பேரருள் பாக்கியம் இவர்களுக்கு அற்றுப்போய் விடுகின்றது. இது பெருமானாரின் பரந்த அருள் தன்மைக்கு எதிராகும்.
பெருமானாரின் திருச்சமூகம் இடத்தால் அன்றி இதயத்தால் நிகழ்கின்றது. அபூஜஹ்ல் மக்காவில் பெருமானாருக்கு அருகிலிருந்தும் இதயத்தால் வெகுதூரத்திலிருந்தான். ஹளரத் உவைஸுல் கர்னி ரழியல்லாஹு அன்ஹு யமனிலிருந்தாலும், உள்ளத்தால் பெருமானாருக்கு அருகிலேயே இருந்தார்கள். தனது அன்பர்கள், பிள்ளைகள் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவர்கள் எப்போதும் இதயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எதிரி அருகிலிருந்தாலும், உறவால் வெகு தூரத்திலேயே வாழ்கின்றான்.
மதீனா ஓர் உலையாகும். கொல்லனின் உலை இரும்பின் கழிவுகளை அகற்றுவது போன்று மதீனாவின் உலை அசிங்கங்களை அகற்றி விடுகி்ன்றது என்ற நபிமொழியி்ன் பொழிப்பும் இதையே சுட்டி நிற்கின்றது.
04.ஷபாஅத் அனைவருக்கும் அவசியம் என்பது இதன் மூலம் தெரிகின்றது. குற்றம் செய்தது அல்லாஹ்வுக்கு! குற்றப் பரிகாரத்திற்கான பிரசன்னம் நபிகள் நாதரின் அவையில் உள்ளது. பெருமானாரின் திருச்சபையிலிருந்து கொண்டே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்பதில் பெருமானாரின் ஷபாஅத் இன்றி அல்லாஹ் குற்றத்தை மன்னிக்க மாட்டான் என்பது தெரிய வருகின்றது.
அல்லாஹ்வின் மன்னிப்பையும் அருளையும் பெறுவதற்கு அமல் செய்தல் மட்டும் போதுமையாகாது. பாவ மன்னிப்பும் தேட வேண்டும். ஏனெனில், பாவமன்னிப்பும் ஓர் அமலாகும். இருப்பினும் பெருமானாரின் அவையின் பிரசன்னமும் அவசியம்.
தான் செய்யும் அமல் (இஸ்திஃபார் உட்பட) அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்குரிய வஸீலாவாக இருப்பினும் அமல்கள் கபூலாவதற்கான வஸீலாவாக பெருமானாரின் அவைக்கான பிரசன்னமும், அன்னாரின் ஷபாஅத்தும் இன்றியமையாததாக உள்ளது.
05.உலகில் தேவையுள்ளவன் செல்வந்தனிடமிருந்தும், நோயாளி வைத்தியனிடமிருந்தும், பொதுமக்கள் அரசாங்கத்திடமிருந்தும் உதவி பெறுவதுபோன்று அகிலத்தின் அருள் வடிவானவரான ஈருலக இரட்சகர் கோமான் நபிகள் நாயகத்திடமிருந்து உதவியை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
ஹளரத் மாஹிஸ் என்ற நபி மணித்தோழர் விபச்சாரம் செய்த குற்றத்திற்கு தௌபா வேண்டி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன்வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே என்னைப் பரிசுத்தப்படுத்தி வையுங்கள்! என்று வினயமாக வேண்டினார். ஹளரத் றபீ ஆபின் கஃபு ஸல்மா என்ற நாயகத் தோழர் நபியவர்களுக்குப் பணியாளராக இருந்தார். ஒரு தினம் அவரைப் பார்த்து நபியவர்கள் கேளும்! என்றார்கள். சொர்க்கத்தில் உங்களுடன் இருப்பதையே கேட்கின்றேன் என்றார்.
கேள்! என்பது பொதுமையாக இருப்பதனால் எதையும் வழங்கும் தகுதி நபியவர்களுக்குண்டு என்று நாயகத் தோழர் விளங்கியதனால்தான் உயர் பாக்கியமான - சொர்க்கத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் இருக்கும் அதி உயர் இடத்தை உரிமையாக்கிக் கேட்டார்.
நபியவர்கள் வாசல் அல்லாஹ்வின் வாசல். அதனால் நபியவர்களின் கதவைத் தட்டும்போது மன்னிப்புக் கிட்டுகின்றது. குற்றம் செய்தவர் அல்லாஹ்வின் பரிகாரத்தி்ற்கு செல்ல வேண்டியது பாராளும் பயகம்பர் வாசலுக்கு.
ஜாஊக உங்களிடம் வரவேண்டும் என்பதில் மதீனாவுக்கு வரவேண்டும் என்று நிபந்தனை போடவில்லை. அதனால், பாவி, மனம் கசிந்து இதயத்தைத் துடைத்து அதை அகல விரித்து பெருமானார் முன் கவனத்தை முழுமையாகத் திருப்பினால் அங்கே ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் தரிசனம் வழங்குவார்கள். அன்னைவர் இதயத்திலும் அஹ்மது நபியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனால்தான், உங்களிடம் இருந்து உங்கள் தூதர் வந்துள்ளார். லகத்ஜாஅகும் ரஸுலுன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
பள்ளிவாசலுக்குச் செல்லும்போதும் யாருமில்லாத வீட்டிற்குள் சென்றாலும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பெயரில் ஸலாம் கூறுவது சுன்னத் ஆகும். எனவே, எங்கும் நிறைந்து நீக்கமற பேரருள் புரியும் பெருமானாரின் ஷபாஅத்தைப் பெற்று புனிதர்களாக மாற வல்ல நாயன் அருள் புரிவானாக.

Comments
Post a Comment