திருமறை கூறும் திங்கள் நபியின் மங்காப் புகழ்!



திருமறை கூறும் திங்கள் நபியின் மங்காப் புகழ்!

கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில் ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி. 

இரட்சகா! அவர்களிலிருந்து அவர்கள் மத்தியில் ஒரு திருத்தூதரை அனுப்புவாயாக! அவர் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பார். இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீ மிக்க வல்லோனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாக இருக்கின்றாய். 

(அல்குர்ஆன் 2 : 129) 

கலீலுல்லாஹ் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனித கஃபாவை கட்டி முடித்த பின் தனது இரட்சகனிடம் மனமுருகி தனக்கும், தங்களைச் சார்ந்தோருக்கும் பிரார்த்தித்தார்கள். இறுதியில் இதயம் நெகிழ்ந்து ஒரு வேண்டுதலையும் முன்வைத்தார்கள். அந்த வேண்டுதல்தான் மேற்கண்ட திருவசனமாகும்.

ஹஸரத் கலிலுல்லாஹ் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உருக்கமான பிரார்த்தனையில் மூன்று விடயங்களில் பரிபூரணத்துவமிக்க ஒரு திருத்தூதரை அனுப்புவாயாக! என்று காணப்படுகின்றது. அவை வருமாறு.

1. தனது சுய கருத்துக்களை போதிப்பவராக இல்லாமல் இறைவசனங்களை ஓதிக் காண்பிப்பவராக  இருக்க வேண்டும்.

2. வெறுமனே ஓதிக் காண்பிப்வராக மாத்திரம் இல்லாமல் இறைவசனங்களின் ஆழிய அர்த்தங்க ளையும், நுட்பமான   விளக்கங்களையும் கற்றுக் கொடுப்பவராகவும் அவர் விளங்க வேண்டும்.

3. தனது அருட் கருணையால் அழுக்குடைய உள்ளங்களை பரிசுத்தப்படுத்தவும் வேண்டும். அவர்களில் எவரது உள்ளமும் மறுவிலாது இறையோனின் அருள் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடி போல் பிரகாசிக்கவும் வேண்டும். உள்ளத்தின் உள்ளொளியைத் தரும் அனைத்து வகையான தடைகள், திரைகள் அனைத்தையும் நீக்குபவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட பூரணத்துவமும் கீர்த்தியும்மிக்க பண்புகள் ஒருங்கே அமைந்த ஒரு திருத்தூதரையே அனுப்புமாறு அல்லாஹ்வின் திருத்தூதரான நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உருக்கமான இவ்வேண்டுகோள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான சுப செய்தி திருமறையில் இவ்வாறு வெளிப்படுகின்றது.

திட்டமாக முஃமின்களுக்கு அவர்களிலிருந்து அவர்கள் மத்தியில் ஒரு திருத்தூதரை அனுப்பி மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அவர் அவனது திருவசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பார். இன்னும் அவர்களை பரிசுத்தப் படுத்துவார். வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்க வழிகேட்டில் இருந்தபோதிலும் சரியே!

(அல்குர்ஆன் - 3 : 164)

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் வேண்டி பிரார்த்தித்ததினை அல்லாஹுத் தஆலா ஏற்றுக்கொண்டது பற்றி சுப செய்தியில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளும் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனைகளில் உள்ள வசனங்களும் ஒரே விதமாக உள்ளது. 

இதன் மூலம், நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்கள் வேண்டிய பண்புகள் பொதிந்த திருத்தூதரையே அனுப்பியுள்ளேன் என்பதையே மேற்படி திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது. இதனை உறுதி செய்யும் ஒரு குறிப்பும் நபியவர்களின் பொனமொழிகளில் காணமுடிகிறது.

ஒரு தினம் நபியவர்கள் ஸஹாபாக்களை நோக்கி நான் யார் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நன்கு அறிவார்கள் என்று மறுமொழி பகர்ந்தனர் நபிமணித் தோழர்கள்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நான் எனது தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையின் பலனாகும்.

மேற்கண்ட இரு திருவசனங்களின் மூலம் மூன்று விதமான பூரணத்துவமிக்க பண்புகள் விபரிக்கப் பட்டுள்ளன.

1. சுய விருப்பப்படி போதிப்பவராக இல்லாமல் அல்லாஹுத்தஆலாவின் திருவசனங்களை மாத்திரம் ஓதிக்காண்பிப்பார் என்பது முதலாவது சிறப்பம்சமாகும்.

அல்லாஹ்வின் திருவசனங்கள் மாத்திரம் எவர் நாவிலிருந்து தவழுமோ அவரின் மகத்துவத்தை சிந்தித்துப் பாருங்கள்! அப்படிப்பட்டவரும் நாமும் சமம் என்று கூறுவது எந்தளவு அற்பத்தனமானது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

2. வெறுமனே திருவசனங்களை பாராயணம் செய்பவராக மட்டுமில்லாமல் திருவசனங்களுள் புதைந்துகிடக்கும் அரிய ஆழிய அர்த்தங்களையும், நுட்பமான ஞானங்களையும் புலப்படுத்துப வராகவும் இருப்பது இரண்டாவது சிறப்பம்சமாகும்.

3. தனது அருட்பார்வையில் அழுக்கடைந்த உள்ளங்களில் உள்ள ஷிர்க், குப்று, நயவஞ்சகத்தனம் மற்றும் பாவங்கள், குற்றங்கள், குழப்பங்கள், மன அழுக்காறுகள் சார்ந்த அனைத்து வகையான மாச்சரியங்களிலிருந்தும் மனங்களையும் பரிசுத்தப்படுத்துதல்.

உள்ளத்தின் மாச்சரியங்களை துடைத்தெறிந்து இறையொளி பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று மனங்களை மாற்றுவது என்பது நிகரற்ற மூன்றாவது முழுமையான பண்பாகும்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தங்களது பிரார்த்தனையில் எப்பண்புள்ள நபியை அனுப்புமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்களோ அதில் ஒரு மாற்றமுமில்லாமல் அதே பண்புள்ள ஒரு நபியை அனுப்பியுள்ளதாக அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். இது மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அருளிய மாபெரும் பேரருளாகும்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையில் குறிக்கப்பட்டுள்ள வசனத்திற்கு அல்லாஹுத் தஆலா நபியவர்களைப்பற்றி சுபசெய்தி கூறிய திருவசனத்தில் உள்ள வசனங்களுக்கு மிடையில் ஒழுங்கு முறையில் சிறு மாற்றம் உள்ளது.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையில் முதலில் திருவசனங்களை ஓதிக் காண்பித்தல் பின் வேதத்தையும், ஞானத்தையும் கற்பித்தல் இறுதியாக பாழ்பட்ட மனங்களை பரிசுத்தப்படுத்தல் என்று அமைந்துள்ளது. ஆனால், இப்பிரார்த்தனை ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்ட திருவசனத்தில் இந்த ஒழுங்குமாறியுள்ளது. 

இப்றாஹீம் நபி அவர்களின் உருக்கமான பிரார்த்தனையின் உண்மையான கருப்பொருள் மனப் பரிசுத்தமாகும். இதனை வேதத்தை ஓதிக்காண்பித்தல், வேதத்தையும் ஞானத்தையும் போதித்தல் மூலமே கிடைக்கும். அதனால்தான் மனப் பரிசுத்தம் என்ற உட்கிடை முதன்மைப் படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய திருவசனங்களை ஓதிக்காண்பித்து, உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதங்களையும், (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்களறியாதவற்றையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கவும் கூடிய ஒரு திருத்தூதரை உங்களி லிருந்தே உங்களுக்கிடையி்ல் நாம் அனுப்பிவைத்தோம். 

(அல்குர்ஆன் - 2 : 151)

மேற்படி திருவசனத்தில் யுஅல்லிமு கற்றுக் கொடுப்பார் என்ற சொல் இருமுறை வந்துள்து. முதல் வசனத்தில் வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பார் என்றும் அதன் பின் நீங்களறியா தவற்றையும் உங்களுக்கு கற்பிப்பார். என்றும் இடம்பெற்றுள்ளது. இதில் கற்றுக் கொடுப்பார் என்று இருமுறை வந்திருப்பதில் நுட்பமான ஒரு தத்துவம் மறைந்திருக்கின்றது. காழிபானிபத்தி றஹ்மத் துல்லாஹ் அலைஹி அவர்கள் தங்களது பிரபலமான தப்ஸீர் மழ்ஹரியில் பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.

கற்றுக் கொடுத்தல் என்று இரு முறை வந்திருக்கும் வினைச்சொல் ஒரே ஒரு கருத்தைக் கொண்டதாக இல்லை. முதன்முறை கூறிய கற்றுக்கொடுத்தல் என்பது ஒரு பொருள் இறுதியாக வந்துள்ள கற்றுக் கொடுத்தல் என்பது வேறு பொருள்.

பிந்தியுள்ள கற்பித்தல் என்பது இறையருள் ஞானமாகிய லதுன்னிய்யத்தான அறிவு பற்றியதாகும். திருமறையின் உள்ளார்ந்த பொருட்கள், ஆழிய விளக்கங்கள் என்பவை ஜோதி நபியின் பிரகாசமிக்க உள்ளத்திலிருந்து பிரதிபலிப்பவைகளாகும். இதன் மூலமே இந்த ஞானத்தை அடைய முடியும்.

தப்ஸீர் மழ்ஹரியில் இது பற்றி வரிவாகவும் ஆழமாகவும் ஆசிரியர் அவர்கள் ஆராய்துள்ளார். தாகமும், தேட்டமுமுள்ளவர்கள் தப்ஸீர் மழ்ஹரியை பார்வையிடுவர்.

அல்லாஹ்வின் வலிமார்கள்தான் நபிமார்களின் உண்மையான வாரிசுகளாகும். அவர்களும் தங்களின் முரீதீன்களுக்கு இதையொத்த ஞானத்தை அவர்களின் இதயத்தில் போடுகின்றனர். ஏழைகளாகிய எங்களின் உள்ளங்களிலும் கருணை நபியின் பொருட்டால் இதயத்தை பரிசுத்தமாக்கி ஞானத்தால் நிரப்பி வெளிச்சமாக்கி வைப்பானாக! ஆமீன்! ஆமீன்!

நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் இன்னும் றஸூலுக்கும் வழிப்படுங்கள். நீங்கள் (வழிப்படாமல்) புறக்கணித்தால் (நிச்சயமாக) அல்லாஹ் நிராகரிப்பார் (காபிர்)களை நேசிப்பதில்லை 

(அல்குர்ஆன் - 3 : 32)

எவர் றஸூலுக்கு வழிப்பட்டாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கும் வழிப்பட்டார். யார் (வழிப்படாமல்) புறக்கணிக்கின்றாரோ அவரை பாதுகா(கண்கானி)க்கின்றவராக உம்மை நாம் அனுப்பவில்லை.

(அல்குர்ஆன் - 4 : 80)

மேற்படி திருவசனங்களின் மூலம் மனித சமுதாயம், தன்னையும் தனது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளான். அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் பின்பற்ற மறுப்போரை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளான்.

இந்த திருவசனத்தில் நபிகள் நாதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவம் பறை சாட்டப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தனக்கு மாத்திரம் வழிப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லை. கூடவே தனது ஹபிப் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் பின்பற்றுமாறு வேண்டியுள்ளான். ஒரு அடியான் இவ் விரண்டையும் செய்தால்தான் முஃமினாக முடியும். படைத்தவனின் அனைத்து சட்டங்களையும் மதித்து பணிந்து நடக்கும் ஓர் அடியான் அல்லாஹ்வின் நேசனாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனையிலும் வழி காட்டுதலிலும் அசட்டை காட்ட முடியாது.

அவனது திருத்தூதராகிய கண்மணி நாயகத்திற்கு வழப்படுவதில் என்று கூறியதில் கண்மணி நாயகத்தின் மகத்துவம் எந்தளவு உயர்ந்திருக்கின்றது என்பதை எண்ணிப்பாருங்கள்! யாராவது ஏதாவது காரணம் கற்பித்து அல்லாஹ்வின் திருத்தூதருக்கு வழிப்படுவதை மறுதலிப்பாராயின் அவர் அல்லாஹ்விற்கு வழிப்படுதலை மறுதலிப்பதாக அமையும் என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. நபியே கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், நிகரற்ற இரக்கமுள்ளவனுமாவான்.

யஹூதிகளுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கப்பட்டதும் அவர்கள் இவ்வாறு கூறி மறுதலித்தனர். நாங்கள் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் அவனது பிள்ளைகள். அதனால் புதிய நபியை பின்பற்ற வேண்டிய கடப்பாடு எமக்கில்லை என்று 

இதற்கு முன்னுள்ள திருவசனங்களில் யூதர், நஸாறாக்களின் கீழ்த்தரமான பண்புகளையும் வழக்கங்களையும் செயல்களையும் அம்பலப்படுத்தியபின் இப்படிப்பட்ட இழி குணம் நிறைந்த நீங்களா? அல்லாஹ்வை நேசிப்பதாக வாதாடுகிறீர்கள் என்று இடித்துக் கேட்டுவிட்டு ஓர் எச்சரிக்கையும் விடுகின்றான்.

இறைகாதல் என்பது நபியவர்களை பின்பற்றுவதில்தான் தங்கியுள்ளது. அல்லாஹ்வின் திருத்தூதரை உண்மையாக உள்ளும், புறமும் பின்பற்றுவதன் மூலம்தான் இறையருளும் பாவங்களிலிருந்தும் பாவமன்னிப்பும் மனப்பரிசுத்தமும் கிட்டும்.

அல்லாஹ்வின் திருத்தூதரை உண்மையாக பின்பற்றுவோருக்கே பாவமன்னிப்பும் அல்லாஹ்வின் அன்பும், அடைக்கலமும், இருக்கின்றது என்றால் கண்மணி நாயகத்தின் உச்சபுகழ் எந்தளவு உயர்ந்திருக்கின்றது என்பதை சிந்தித்துப்பாருங்கள்! உதட்டில் நேசமும், நடத்தையில் மாறுபாடும் காட்டுபவர்கள் நிச்சயம் புறக்கணிக்கப்படுவர். உள்ளத்தில் உள்ள நேசம் நடத்தையில் வெளிவர வேண்டும். ஒரு கவிஞர் கூறினார்.

உமது நேசம் உண்மையாயின் அவருக்கு நீ வழிபடல் வேண்டும். நிச்சயம் ஒரு நேசன் தனது விருப்பத்திற்குரியவரை வழிப்படுவான். மேற்படி திருவசனத்தில் தெளிவாக ஒரு விடயத்தை கூறுகின்றான். நீங்கள் தனது நேசரான றஸூலின் அடிமைப்பட்டியை கழுத்தில் இறுகக் கட்டிக் கொள்வீர்களாயின் நான் எனது அருட்கரத்தால் உங்கள் சிரசில் கிறீடத்தை அணிவிப்பேன்.

யாருக்கு முற்றிலும் வழிப்பட்டு நடப்பதால் தங்களது பாவக் கறைகள் நீங்கி தாழ்ந்த தங்களது நிலை உயர்ந்து கண்ணியமும், கௌரவமும் இறை நெருக்கமும் கிட்டுகி்ன்றதோ அவரின் மகோன்ன நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவரும் நாமும் சமமாக முடியுமா?

அல்லாஹ் வானங்கள், பூமி (ஆகியவை)களின் ஒளியாக இருக்கின்றான். அவனது ஒளிக்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்திலிருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப் போல் (ஜொலித்துக் கொண்டு) இருக்கின்றது. பாக்கியம் பெற்ற ஸைத்தூன் மரத்தின் எண்ணெய் (அதில்) எரிக்கப்படுகின்றது. அது கிழக்கிலுள்ளதுமன்று, மேற்கிலுள்ளதுமன்று. நெருப்புத் தொடாமலேயே அது பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. ஒளிக்கு மேல் ஒளியாக இருக்கின்றது. அல்லாஹ் நாடியவர்களை தன் ஒளியின் பால் நல்வழி காட்டுகின்றான். மனிதர்களுக்கு (நேர்வழி பெறுவதற்காக) பல்வேறு உதாரணங்களைக் கூறுகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிகின்றவனாக உள்ளான்.

(அல்குர்ஆன்  - 24 : 35)

அல்லாமா அபுல் பழ்ல் ஜமாலுத்தீன் இப்னு மன்ளுர் என்பவர் தனது புகழ் பூத்த அகராதி நூலான லிஸானுல் அறபில் நூர் என்பதை விளக்கும் போது இப்படி வரைகின்றார்.

நூர் என்பது அல்லாஹ்வின் திருநாமத்தில் ஒன்றாகும். காரணம், அந்தகன் அல்லாஹ்வின் ஒளியின் மூலம் தான் பிரகாசம் பெறுகின்றான். வழி தவறியவன் அவனது வழிகாட்டுதல் - ஹிதாயத் மூலம்தான் நேரிய வழியைத் தெரிந்து கொள்கின்றான். இதனால் தான் அல்லாஹ்வை நூர் ஒளி என்று சொல்லப் படுகின்றது.

நூர் என்பதன் அகராதிப் பொருளை விளக்கும் போது, அல்லாமா அபுல் பழ்ல் கூறுகின்றார்கள்.

எது தன்னிலும் வெளியாகி, பிறவற்றையும் வெளியாக்குமோ அதற்குத்தான் நூர் ஒளி என்று பெயர் கூறப்படும்.

ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் கல்விக் கடல் இமாம் ஙஸ்ஸாலி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல் மக்ஸதுல் அஸ்னா என்ற நூலில் அல்லாஹ்வின் திருநாமங்களுக்கு விளக்கம் கூறும் போது நூர் என்பதற்கு பின்வருமாறு பொருள் கூறுகின்றார்கள்.

நூர் ஒளி என்பது தன்னிலும் வெளியாகி பிறவற்றையும் வெளியாக்கக் கூடியதாகும். எந்த ஒரு பொருளும் வெளிப்பட வேண்டுமாயின் அப்பொருள் உள்ளதாக இருத்தல் அவசியமாகும். இருப்பில்லாத எப்பொருளும் வெளிப்படுதல் என்பது சாத்தியமில்லை. அல்லாஹ்வின் தாத் எப்பொழுதும் இருப்புள்ளதாக இருப்பது - வாஜிபு - அவசியமாகும். அது அநாதி தொட்டு இருக்கின்றது. அது எப்போதும் இருக்கும்.

அது இருப்புள்ளதாக இருப்பதற்கு ஒரு காரணமோ, அதாவது ஒருவரின் செயற்பாடோ தேவைப்படவில்லை. அதனால் அது (தாத்)தான் - நூர் - ஒளி என்ற பண்பு வெளிப்படுவதற்கு முழுத் தகுதி பெற்றதாக உள்ளது. அது (தாத்) அதுவாக தன்னில் இருப்புள்ளதாக உள்ளது. அதன் குன் என்ற கட்டளையின் மூலம் ஒவ்வொன்றும் இருப்பதைப் பெற்று வெளிப்படுகின்றன. இதனால் அது (தாத்) ஒவ்வொன்றுக்கும் ஒளியாக அதாவது வெளிப்படுத்துவதாக உள்ளது. 

ஆதாரம் :அல் மக்ஸதுல் அஸ்னா

இதனால்தான் அதிகமான தப்ஸீருடைய உலமாக்கள் மேற்கண்ட திருவசனத்தில் வரும் நூர் என்பதற்கு உண்டாக்குபவன், உருவாக்குபவன் என்று பொருள் கூறியுள்ளனர். அதாவது, இம்மையி லிருந்து உள்ளமைக்கு கொண்டு வருபவன். இது தவிர நிருவகிப்பவன். என்ற பொருளும் கொடுக்கப் படுகின்றது.

ஒரு சமுகத்தின் தலைவன் அனைத்து காரியங்களையும் நன்கு திட்டமிட்டு சிந்தித்து சரியான வழியில் சமுதாயத்தை வழி நடாத்துவதால் அவரை நூறுல் கௌம் - சமுதாயப் பேரொளி என்று கூறப்பட்டிருக்கின்றது. அதாவது அனைத்து விடயங்களும் அவரது தனித்துவமான சிந்தனையின் வெளிச்சத்தில் வழி நடத்தப்படுகின்றது. என்ற காரணத்தினால் இப்பெயர் கொண்டு அவர் அழைக்கப் படுகின்றார்.

ஹளரத் இப்னு அப்பாஸ், ஹளரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் நூர் என்பதற்கு ஹாதி நல்வழி காட்டுபவர் என்று பொருள் கூறியுள்ளனர். இதன்படி வானம், பூமியில் உள்ளவர்களுக்கு அவனே நல்வழி காட்டுபவன். அவர்கள் அவனது ஒளியினால் நல்வழி காட்டுதல் பெற்றுக் ஹக் (சத்தியத்)தின்பால் ஹிதாயத் பெறுகின்றனர். இன்னும் அவனது வழிகாட்டுதலால் வழிகேட்டின் தடுமாற்றத்திலிருந்து வெற்றியும் பெறுகின்றனர்.

மேற்கண்ட விளக்கங்கள் அனைத்தும் தலைசிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியவைகளாகும். அவை அனைத்துமே சரியான விளக்கங்களாகும். இமாம் இப்னு ஜரீர் அவர்கள் ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் கருத்தை வரவேற்றுள்ளார்கள். ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்கண்ட விளக்கத்தை அதிகம் விரும்பியிருக்கின்றார்கள்.

ஹளரத் இப்னு அப்பாஸ் அவர்கள் ஹளரத் கஃபுல் அக்பார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அவனது ஒளிக்கு உதாரணம் ஒரு மாடத்தைப் போன்றது. என்ற திருவசனத்தின் பொருளை தெரிவிக்குமாறு வேண்டினார்கள். அதற்கு, ஹளரத் கஃபுல் அக்பார் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். 

இந்த உதாரணம் அல்லாஹுதஆலா தனது நபியவர்கள் பற்றிக் கூறியதாகும். மிஷ்காத் என்பது அன்னாரின் நெஞ்சைக் குறிக்கும் ஸுஜாஜ் - கண்ணாடி என்பது அவர்களது கல்பைக் குறிக்கும் மிஸ்பாஹ் - விளக்கு என்பது நுபுவ்வத் ஆகும். நபியவர்களின் தகுதி மக்களுக்கு தெளிவான விளக்கமாகவே இருக்கின்றது. நபியவர்கள் தான் நபி என்று பகிரங்கப்படுத்தாவிட்டாலும் சரி, சைத்தூன்  நெருப்புப்படாமலேயே அது தானாகவே ஒளிர்விட்டுப் பிரகாசிப்பது போல்.

ஆதாரம் : தப்ஸீர் மழ்ஹரி

அல் ஆரிபு பில்லாஹ் அல்லாமா பானிபத்தி அவர்கள் மேற்கண்ட விளக்கத்தை எழுதிய பின் கூறுகின்றார்கள். ஹளரத் கஃபுல் அக்பார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகச் சிறந்த ஒரு விளக்கத்தைக் கூறியுள்ளார்கள். நான் இந்த இடத்தில் தனியாக ஒரு பாடமே எழுத இருக்கின்றேன். அதில் நபியவர்கள் தான் நபி என்று பகிரங்கமாகக் கூற முன்னே அவர்களின் நுபுவத்தும், மகத்துவமும் மிகத் தெளிவாகி விட்டது இதன் பின் நீண்ட ஒரு விளக்கம் எழுதியுள்ளார்கள். அதில்,

நபியவர்கள் நபியாக தன்னை பகிரங்கப்படுத்த முன் அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். அவையனைத்தையும் இங்கு எழுதுவதற்கு இடம் கொடுக்காது. ஆயினும், ஒரு நிகழ்வை மாத்திரம் எழுதுகின்றேன்.

நபியவர்கள் சிறுவராக இருக்கும் போது எல்லா இடங்களிலும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மழை வேண்டி பிரார்த்திப்பதற்காக அபூத்தாலிப் ஹறம் ஷரீப் வந்தார். கூடவே நபியவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தார். நபியவர்களை சுட்டு விரலால் சாடை காட்டிப் பிரார்த்தித்தார். அப்போது மழை மேகத்திற்கான எந்த ஒரு அடையாளமும் காணப்படவில்லை. பிரார்த்தனை அதிக நேரம் நீடிக்கவில்லை. பல திசைகளிலிருந்தும் மேகங்கள் திரண்டன. முகில் சூல் கொண்டது. மழை கொட்டாகக் கொட்டியது. ஓடைகள் எங்கும் வெள்ளம் கரை புரண்டோடியது.

இச்சந்தர்ப்பத்தில் அபூதாலிப் ஒரு நீண்ட கவிபாடினார். அதில், வெண்முகத்தார் பொருட்டால் மேகம் மழையாகக் கொட்டியது. அது அநாதைகளுக்கு, விதவைகளுக்கு பாதுகாப்பாகவும் ஆகிவிட்டது என்று,

கிழக்கைச் சார்ந்ததுமில்லை. மேற்கைச் சார்ந்ததுமில்லை. என்ற சொற்றொடர் நபியவர்கள் பேரருள் பொதுமையானது. அது காலத்தையோ, இடத்தையோ கட்டுப்படுத்தாது. கிழக்கு, மேற்கு எங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் அன்னாரின் பேரருள் வியாபித்து நிற்கின்றது. என்பதை குறித்துக் காட்டுகின்றது. 


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை