ஐயமும் தெளிவும் (விளக்கவுரை)
ஐயமும் தெளிவும் விளக்கவுரை
ஷெய்கு ஏ.எல். பதுறுத்தீன் ஸுபி ஹள்ரத் அவர்களால் இந்தியா (கோட்டாறு) இல் வெளியாக்கிய வஸீலா மாதமிரு பத்திரிகையின் பத்வாக்கள் (1987 - 1989 ஆண்டு வரை).
ஐயம் : ஒரு ஷெய்கை வழிகாட்டியாக எடுத்துக் கொள்வது அவசிமா? ஒரு காமிலான ஷெய்க் எப்படி இருக்க வேண்டும், ஆதாரத்துடன் விளக்கம் தருக?
தெளிவு : இறை சமூகத்தை அண்மிப்பதைத் தடுகின்ற தீய பண்புகளை நீக்கிடத் தன்னை வழி நடத்தும் ஒரு ஷெய்கை தேர்ந்தெடுப்பது வாஜிப் என மெஞ்ஞானிகள் கருத்தொருமித்துக் கூறுவதாக இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது அன்வாருள் குத்ஸீ எனும் நூலில் சொல்கின்றனர்.
ஆதாரம் : ஜாமிஉல் உஸுல், பக்கம் - 126
ஒரு ஷெய்குக்கு தம்மிடம் பைஅத் பெறுவோருக்கு தக்வா - இறையச்சம், இஸ்திகாமத் - மார்க்கத்தில் ஸ்திரத் தன்மை போன்றவற்றை எடுத்துக் கூறுவதும், வெறுக்கத் தக்கவை, மனோ இச்சைகளை தவிர்த்துக் கொள்ள உபதேசிப்பதும் அவசியம். மறு உலக விமோசனத்தின் பக்கமும், இறை நல்லுதவி ஆகியவற்றின் பக்கமும் அழைத்தலும் வேண்டும்.
மார்க்க சட்டங்களை கற்றுக் கொடுத்தலும், மற்றவர்களுடன் அன்புடன் நடந்து கொள்ளுதலும், சிறியோர் மீது இரக்கம் காட்டுவதும், பெரியோருக்கு கண்ணியம் கொடுத்தலும் நிபந்தனைகளாகும்.
ஆதாரம் : ஜாமிஉல் உஸுல், பக்கம் - 24
முரிது வழங்கும் ஷெய்க் கீழ்க்காணும் 05 நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
01. தெளிந்த அனுபவம்
02. சரியான தெளிவான மெஞ்ஞானம்
03. உயர்ந்த நோக்கம். உன்னதமான மன உறுதி
04. விதியை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை
05. கூர்மையான அகப் பார்வை
கீழ்க்காணும் 05 தன்மைகள் ஷெய்கிடம் இருத்தல் கூடாது.
01 மார்க்கத்தில் அறியாமை
02. முஸ்லிம்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பது
03. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுதல்
04. பேராசை
05. தீய குணம்
ஆதாரம் : ஜாமிஉல் உஸுல், பக்கம் - 11
நன்றி : வஸீலா, 15.06.1987
ஐயம் : ஜின்கள் வாழ்ந்த காலம் எது?
தெளிவு : ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைக்க முன்னர் பூமியில் தீஹ் என்ற பகுதியில் ஜின் வர்க்கம் வாழ்ந்து வந்தது.
நூல் : மஹாழிரத்துல் அவாயில், பக்கம் - 17
அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்து வானில் மலக்குகளையும், பூமியில் ஜின்களையும் குடியிருக்கச் செய்தான். ஜின்களின் நீண்ட கால வணக்கங்களுக்குப் பின்னர் அவற்றுக்கிடையே பொறாமையும் உட்பூசலும் மூண்டு கொலை பாதகச் செயல்களில் முடிந்து பஞ்சமா பாதகங்கள் தலை விரித்தாடியபோது இறைவன் அமரர்களை அனுப்பி ஜின்களை கடற் பகுதியிலுள்ள தீவுகள், மலைப் பொதும்புகளில் ஒதுங்கச் செய்தான்.
நூல் : தப்ஸீர் லுபாபுத் தஃவீல், பாகம் - 01, பக்கம் - 97
நன்றி : வஸீலா, 01.06.1987
ஐயம் : ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம் எவ்வயதில் அல்லாஹ்வின் ரூஹைக் கொண்டு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கருத்தரித்தார்கள்?
தெளிவு : ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கருத்தரித்து குழந்தை பிறக்கும்போது மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது பத்து. கருத்தரித்து உருக்கொண்டு பிரசவமானது அனைத்தும் ஒரு நேரத்திற்குள்தான் என்பதுவே ஸஹீஹான சொல்லாகும்.
நூல் : தப்ஸீர் ஸாவி, பாகம் - 03, பக்கம் - 30
13ஆவது வயதில் எனவும், 20ஆவது வயதில் எனவும் வேறு இரு கூற்றுக்களும் உண்டு.
நூல் : தப்ஸீர் கபீர், பாகம் - 05, பக்கம் - 531
நன்றி : வஸீலா 15.04.1987
ஐயம் : நான் அறிவின் பட்டணம், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதன் நுழைவாயில் என்பது நபி மொழியல்ல. அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களது புகழை மிகைப்படுத்த இட்டுக் கட்டப்பட்டது என குள்ள நரிக் கூட்டமொன்று கூறுகின்றது. தெளிவை வேண்டுகின்றேன்?
தெளிவு : நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் ஸஹீஹானதுதான். இந்நபி மொழியை ஒரு பெருங் குழுவினர் அறிவித்துள்ளனர். ஹாகிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த நபிமொழியை ஸஹீஹாக்கி வைத்துள்ளனர். அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்நபிமொழியை ஹஸன் அழகானது என்கின்றனர்.
நூல் : பதாவா ஹதீதிய்யா, பக்கம் - 126
நன்றி : வஸீலா, 01.11.1987
Comments
Post a Comment