*குப்றை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்*!
*குப்றை ஏற்படுத்தும் பிரதான காரணிகள்*!
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்
குப்று என்றால் மறைத்தல், அழித்தல் என்பது பொருளாகும். இதனால்தான் ஷரீஅத்தின் தண்டனைக்குரிய பரிகாரத்திற்கு கப்பாறா என்று கூறப்படுகின்றது. கப்பாறா என்றால் குற்றத்தை அழிப்பதாகும். கற்பூரத்திற்கு அறபியில் காபூர என்று சொல்லப்படும். கற்பூரம் அதன் வேகமான மணத்தால் ஏனையவற்றின் மணங்களை மழுங்க வைப்பதனால் கற்பூ ரத்திற்கு காபூர என்று கூறப்படுகின்றது.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
விலக்கப்பட்ட பெரிய குற்றங்களிலிருந்து நீங்கள் தவிர்ந்திருந்தால், உங்களின் (சிறிய) குற்றங்களை அழித்திடுவோம். மேலும் சங்கையான இடத்தில் உங்களை நுழைத்திடுவோம்.
(அல்குர்ஆன் - 04 : 31)
திருக்குர்ஆனில் இச்சொல் நன்றி மறத்தல், நிராகரித்தல், இஸ்லாத்திலிருந்து வெளியேறல், உள்ளிட்ட பல கருத்துக்களில் வந்துள்ளன. பின்வரும் திருவசனங்களைப் படியுங்கள்.
01. நீங்கள் நன்றி பாராட்டினால் உங்களுக்கு (நிஃமத்துக்களை) அதிகரிப்போம். மேலும், நீங்கள் நன்றி மறந்தால் நிச்சயமாக எனது தண்டனை கடுமையானதாக இருக்கும்
(அல்குர்ஆன் - 14 : 8)
02. எனக்கு நன்றி பாராட்டுங்கள், நன்றி மறக்க வேண்டாம்
(அல்குர்ஆன் - 02 : 152)
03. (பிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாமிடம் கூறினான்)
நீங்கள் செய்ய வேண்டியதை செய்து விட்டீர். நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்
(அல்குர்ஆன் - 26 : 19)
மேற்கண்ட திருவசனங்களிலெல்லாம் குப்று என்பது நன்றி மறத்தல் என்ற பொருளில் வந்துள்ளது.
மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
01. எவர் ஷைத்தானை நிராகரித்து அல்லாஹ்வை ஈமான் கொண்டாரோ அவர் நிச்சயமாக உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்தவராவார்
(அல்குர்ஆன் - 02 : 256)
02. (மறுமை நாளில்) உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பர். மேலும் உங்களில் சிலர் சிலரை சபிப்பர்.
(அல்குர்ஆன் - 29 : 25)
03. அவை (விக்கிரகங்கள்) மறுமையில் அவர்களின் வணக்கத்தை நிராகரித்துவிடும்.
(அல்குர்ஆன் - 46 : 06)
மேற்கண்ட திருவசனங்களில் குப்று என்ற பதம் நிராகரித்தல் என்ற கருத்தி்ல் வந்துள்ளது. இஸ்லாத்தை விட்டும் வெளியேறல் என்ற பொருளிலல்ல.
மேலும் அல்லாஹீத்தஆலா கூறுகின்றான்,
01. கூறுவீராக! காபீர்களே! நீங்கள் வணங்குவதை நாங்கள் வணங்க மாட்டோம்.
(அல்குர்ஆன் - 109 : 01)
02. காபீர்கள் அநியாயக் காரர்களாகும்
(அல்குர்ஆன் - 02 : 254)
ஈமான் கொள்வதற்கு எதுவெல்லாம் கடமையோ, எதுவெல்லாம் ஈமான் என்பதற்குள் அடங்குமோ அவை அனைத்தையும் அல்லது அவற்றில் ஒன்றையேனும் நிராகரிப்பதை குப்று என்ற சொல் குறிக்கும்.
குப்றுக்கு பல வழிகள் உள. அவற்றில் அல்லாஹ்வை நிராகரிப்பது குப்று எனப்படும். அல்லாஹ்வின் தவ்ஹீதை நிராகரிப்பதை ஷிர்க் என்று அடையாளப்படுத்தப்படும். ஷிர்க்கும் குப்றின் வகையைச் சார்ந்ததே.
இவ்வாறு மலக்குகள், நபிமார்கள், சொர்க்கம், நரகம், கப்றிலிருந்து எழுப்பப்படுதல், மறுமை, தொழுகை, நோன்பு, ஸகாத், மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட கடமைகளை நிராகரித்தல், திருக்குர்ஆனின் ஒரு ஆயத்தையேனும் நிராகரித்தல் உள்ளிட்டவைகளெல்லாம் குப்றைச் சார்ந்தவைகளாகும்.
குப்றின் யதார்த்தம்
குப்றின் விடயங்கள் பலதாயினும் அவையனைத்தும் ஒரு அடிப்படைக்குள்தான் அடங்குகிறது. அதுதான் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை நிராகரிப்பது, அவர்களின் மகத்துவத்திற்குரியவற்றில் ஏதாவதொன்றில் குறை காண்பது, அவர்களின் கண்ணியத்திற்குரிய விடயங்களில் குந்தகமான வார்த்தைகளை மொழிவது போன்றவைகளாகும்.
அதுபோல், தொழுகை, நோன்பு போன்றவைகளின் மறுப்பும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் மறுப்பாகவேதான் கருதப்படும். காரணம், கடமை பர்ளு என்று கூறியவர்கள் நபியவர்கள்தானே! கடமையை மறுப்பது கடமை என்று கட்டளையிட்டவரை உதாசீனப்படுத்துவதாகவே கருதப்படும்.நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை உதாசீனப்படுத்துவது அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதுதான் குப்றின் வேராகும்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
01. அவர்(காபிர்)கள் கூறுகின்றார்கள், நாங்கள் சில (நபிமார்களை) விசுவாசிப்போம். இன்னும் சிலரை நிராகரிப்போம் என்று அவர்கள் (குப்று, ஈமான் ஆகிய) இரண்டுக்குமிடையில் ஒரு வழியை ஏற்படுத்துகின்றனர். நிச்சயமாக இவர்கள்தான் உண்மையான காபிர்களாகும்.
(அல்குர்ஆன் - 40 : 150)
02. காபிர்களுக்கு கொடிய தண்டனை உண்டு.
(அல்குர்ஆன் - 02 : 104)
03. எவர் அல்லாஹ்வின் திருத்தூதருக்கு வேதனை கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு கொடிய தண்டனை உண்டு.
(அல்குர்ஆன் - 09 : 61)
எவர் அல்லாஹ்வின் திருத்தூதருக்கு வேதனை கொடுக்கின்றாரோ அவருக்கு கொடிய தண்டனை உண்டு என்று அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் பிரகடனப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் திருத்தூதரை மதிக்காமல் அவர்களை அவமானப்படுத்துவோரே உண்மையான காபிர் என்பதை உறுதி செய்கின்றான். மேலும்,
எவர் அல்லாஹ்வின் திருத்தூதரை மனதால் விசுவாசித்து அவர்களின் மகத்துவத்தை மதித்து மரியாதை செய்கின்றாரோ அவர்தான் உண்மையான முஃமினாகும்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
எவர் ஈமான் கொண்டு, ஹிஜ்ரத்தும் செய்து அல்லாஹ்வின் பாதையில், போர் புரிந்தார்களோ அவர்களும், இன்னும் எவர் (அல்லாஹ்வின் திருத்தூதருக்கு) அடைக்கலம் கொடுத்து உதவியும் புரி்ந்தார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்களாகும். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான இரணமும் உண்டு
(அல்குர்ஆன் - 08 : 74)
மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
என்னை! அவர்கள் அறியவில்லையா? எவர் அல்லாஹ்வுக்கும். அவனது திருத்தூதருக்கும் மாறு செய்தார்களோ அவர்களுக்கு நரகம் உண்டு. அதில் சதா இருப்பர். இது மிகவும் மோசமான இழிவாகும்.
(அல்குர்ஆன் - 09 : 63)
நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கு வழிப்படாமல் செய்யப்படுகின்ற நல்ல செயலும் சிலவேளை குப்றாக ஆகிவிடும். ஒரு தீய செயலில் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழிப்படுதல் இருக்குமாயின், அத்தீய செயல் ஈமானாக மாறிவிடும். உதாரணத்திற்கு,
பள்ளிவாசல் கட்டுவது நன்மையான காரியம். ஆனால், முனாபிக்கீன்கள் அல்லாஹ்வின் திருத்தூதருக்கு மாறு செய்யும் கெட்ட எண்ணத்தில் மஸ்ஜிதுல் ழிறாறை கட்டினார்கள். இச்செயலை திருக்குர்ஆன் குப்று என்று தீர்ப்பளித்துள்ளது.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
எவர் சங்கடம் விளைவித்தலுக்காகவும் குப்றுக்காகவும் முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்து வதற்காகவும் அல்லாஹ்வுக்கும், அவனது திருத்தூதருக்கும் மாறு செய்வதற்காக ஏலவே திட்டமிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்காகவும் எவர் பள்ளிவாசலை கட்டினார்களோ.. (அல்குர்ஆன் - 09 : 107) என்ற திருவசனம் இதனை உறுதிப்படுத்துகின்றது.
தொழுகையை முறிப்பது குற்றம். றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் கட்டளையோடு அச்செயல் செய்யப்படும்போது அது குற்றமாகாது. அது இபாதத் ஆகும்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
முஃமின்களே அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் உங்களை அழைத்தால் அவ்வழைப்பிற்கு பதிலளியுங்கள். அது உங்கள் (நித்திய) வாழ்வுக்குரிய (அருளான)தாகும்.
(அல்குர்ஆன் - 08 - 24)
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் சத்தத்திற்கு மேலால் உங்களின் சத்தத்தை உயர்த்துவதையும், அவர்களின் மகத்துவத்திற்கு அற்பளவாவது குந்தகம் செய்வதும் திருக்குர்ஆனின் தீர்ப்புப்படி குப்றாகும்.
ஷைத்தானிடம் போதியளவு இபாதத் இருந்தது. இருந்தும் அவன் ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களின் வி்டயத்தில் இப்படிக் கூறினான்.
நான் அவரை (ஆதத்தை)விட மேலானவன். என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களி மண்ணால் படைத்தாய் என்று. அதற்கு அல்லாஹ் கூறினான், இங்கிருந்து வெளியேறிவிடு. நீர் விரட்டப்பட்டவனாக ஆகிவி்ட்டீர்
(அலகுர்ஆன் - 15 : 34)
ஷைத்தான் இந்த வார்த்தையை கூறிய மறு விநாடியே காபிராகி விட்டான்.
நபீ கலீமுல்லா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களுக்கு மரியாதை செய்து, போட்டியை ஆரம்பிக்கமுன், மூஸா அலைஹிஸ்ஸலாம வர்களிடத்தில் இப்படிக் கேட்டார்கள்.
அவர்கள் கேட்டார்கள். மூஸாவே! முதலில் நீங்கள் (தடியை) போடுகின்றீர்களா, அல்லது நாம் (கயிற்றை) போடட்டுமா? (அல்குர்ஆன் - 07 : 115) என்று,
போட்டியை துவக்க முன் கலீமுல்லா மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களிடத்தில் ஒழுக்கத்துடன் அவர்கள் அனுமதி வேண்டியதின் பலன் ஒரே தினத்தி்ல் மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களை ஈமான் கொண்டு, அவர்களின் தோழமையையும், தக்வா, பொறுமை, ஷஹாதத் போன்ற பண்புகளையும், பதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதனை அல்லாஹுத்தஆலா இப்படிக் கூறுகின்றான்.
சூனியக்காரர்கள் சஜதாவில் விழுந்தார்கள்
(அல்குர்ஆன் - 07 : 120)
சூனியக்காரர்கள் சுயமாக ஸுஜூது செய்யவில்லை. எப்போது கலீமுல்லாவுக்கு மரியாதை செய்தார்களோ அதே நிமிடம் அல்லாஹுத்தஆலா அவர்களின் உள்ளத்தி்ல் ஈமான் கொள்வதற்கான நஸீபையும் போட்டுவிட்டான்.
ஒரு முஃமினின் உள்ளத்தில் மரியாதைக் குறைச்சல் என்ற கொடிய நோய் பிடித்து விடுமாயின், அவனின் ஈமான் அற்றுப் போவதற்குரிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.
நபி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர்கள் விபரமற்றவர்களாக இருந்தனர். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் மரியாதைக் குறைவு செய்யவில்லை. அதனால் முடிவில் மீட்சி கிட்டியது.
ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களின் மகன் காபில் கொலை செய்த குற்றத்தோடு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மரியாதைக் குறைவும் செய்தான். அதனால், அவன் முடிவு பாழாகிப்போனது.
குப்றும் அதன் வகைகளும்
01. குப்று இன்கார் - மனதாலும் நாவாலும் அல்லாஹ் ஒருவன் என்பதை மறுப்பது.
02. குப்றுல் ஜஹுத் - மனதால் இறைவன் ஒருவன்தான் என்பதை ஏற்று, நாவால் விண்ணப்பம் செய்யாமலிருப்பது. இப்லீஸ், உமைய்யா பின் அபீ ஸஃது ஆகியோரைப் போல்,
03. குப்று முஆனிதா - உள்ளத்தால் அல்லாஹ் ஒருவன் என்பதை ஏற்பதுடன், நாவாலும் அதனை வெளிப்படுத்துவது. ஆனால், இதன்படி வழிப்பட்டு அதனை மார்க்கமாகக் கொள்ளாமல் பிடிவாதம் செய்வது அபூஜஹ்ல் போன்றோரைப் போல,
04. குப்றுன் நிபாக் - மனதால் நிர்ணயம் கொள்ளாமல் வாயால் மாத்திரம் விண்ணப்பிப்பது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் காலத்தில் வாழந்த முனாபிக்கீன்கள் போல.
மேற்கண்ட நான்கு வகை குப்றை கொண்டோரின் பாவங்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
குப்று என்பது ஈமானுக்கு எதிரானது இவை இரண்டும் நம்பிக்கை சார்ந்த வி்டயங்களோடு மட்டுமே தொடர்புபடும். உறுப்பின் செயற்பாடுகள் மனதில் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருப்பின் உறுப்பின் செயலிலும் குப்று வரும்.
நம்பிக்கை சார்ந்த விடயங்களில் ஏதாவது ஒன்றை மறுப்பதாலும், அதனை ஏளனமாக நோக்குவதாலும் குப்று ஏற்படும். தவிர, ஒரு கடமையானதை விடுவதாலோ, ஒரு ஹறாமானதைச் செய்வதாலோ ஒருபோதும் குப்று ஏற்படாது. ஆனால், கடமையை மறுப்பதாலும், ஒரு ஹராத்தை ஆகுமாக்கி வைப்பதாலும் நிச்சயம் குப்று வரும். பாவமான காரியங்களால் ஈமான் அற்றுப்போகும் என்பது வழிதவறிய கவாரிஜ்களின் கொள்கை என்பது கவனிக்கத்தக்கது.
கொலை, சூனியம், சகுனம் பார்த்தல், குறிகேட்டல், சோதிடம் கேட்டல் உள்ளிட்டவைகள் ஹறாம். தவிர, ஒரு போதும் குப்றாகாது. இது போன்றே நபிமார்கள், வலிமார்கள் பொருட்டைக் கொண்டு வஸீலாத் தேடல், இவர்களுக்காக நேர்ச்சை செய்தல், இவர்கள் பெயரில் ஆடு, மாடு போன்ற பிராணிகளை அறுத்து ஏழைகளுக்கு வழங்குதல் யாவும் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட நல்ல செயல்களாகும்.
ஷரீஅத் அனுமதித்தவைகளை குப்று பட்டியலில் சிலர் சேர்த்துள்ளனர். இது அவர்களின் அறியாமை அல்லது மனதைப் பீடித்துள்ள நயவஞ்சகத்தின் வெளிப்பாடாகும். இஸ்லாம் பாடநூல் எழுத்தாளர் குழுவிலுள்ள சில வஹாபிகள் இப்படியான மோசடியைச் செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
Comments
Post a Comment