*ஜின்களின் தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!*

*ஜின்களின் தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!* 

கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில்      ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி

ஜின்கள் பற்றி அல்குர்ஆன் அல்ஹதீஸில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளன. அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் ஒரு ஹதீஸில், மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு வர்ணித்துக் கூறப்பட்டதிலிருந்து ஆதம் படைக்கப்பட்டார்.

ஆதாரம்  :  சஹி முஸ்லிம் ஹதீஸ் எண் 2994

மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலக்குகள், மனிதர்கள் போன்றில்லாமல் தீய சுபாவம் மிகைத்தவர்களாக உள்ளனர். மனிதனின் பார்வையில் படாமல் மறைந்திருப்பதால் இவர்களை ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இக்கருத்தினை இப்னு அகீல் பின்வருமாறு கூறுகின்றார்.

ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஜனீன் என்று கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்.

ஆதாரம்  : உகாமுல் மர்ஜான் பக்கம் - 07

இமாம் இப்னு அப்துல் பர்ரு என்பவர் பின்வருமாறு கூறுகி்ன்றார். ஜின்களில் பல தரத்தினர் இருப்பதாக மொழி் வல்லுனர்கள் கூறுகின்றனர். மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவைக்கு ஆமிர் என்றும், சிறு பிள்ளைகளுடன் சேட்டை செய்பவைகளை அர்வாஹ் ஆவிகள் என்றும் அவற்றில் கீழ்த்தரமான அசிங்கமானவைகளை ஷைத்தான் என்றும், அதி ஆற்றல் கொண்டவைகளை இப்ரீத் என்றும் கூறப்படும்.

ஆதாரம்  : உகாமுல் மர்ஜான் பக்கம் 08

அபூ தஃலபா அல் குஷ்னி என்பவர் கூறுகின்றார்,

ஜின்கள் மூன்று பிரிவினராக இருப்தாக றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள்  கூறியுள்ளார்கள்.

முதல் வகையினர் காற்றில் சஞ்சரிப்பவர்கள். இரண்டாவது வகையினர், பாம்பு, நாய் போன்றவற்றின் உருவில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் ஷரீஅத்தைப் பேணி நடப்பவர்கள். 

ஆதாரம்  : தப்றானி, ஹாகீம்

ஜின், ஷைத்தானின் இருப்பை ஸஹாபாக்கள், தாபியீன்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் ஏற்கின்றனர். ஆயினும், முஃதஸிலா இயக்கத்தில் சில பிரிவினர் இதனை ஏற்க மறுக்கின்றனர். இவர்களின் தவறான வாதம் குர்ஆன், ஹதீது, இஜ்மாஃ ஆகியவற்றிற்கு எதிர் என்று இப்னு தைமிய்யா கூறுகின்றார்.

ஆதாரம்  : மஜ்முஉல் பதாவா பாகம் - 19, பக்கம் - 9,10

மனிதர்களைப் போன்றே ஜின்களும் சாப்பிடுகின்றனர், குடிக்கி்ன்றனர், திருமணம் முடிக்கின்றனர், சந்ததிகளை உற்பத்தி செய்கின்றனர். மனிதர்களிடமிருக்கும் சமூக கட்டமைப்பைப் போன்ற ஒன்று அவர்களிடமும் உள்ளது. சமய, சமூக பிரிவினைகள் கூட மனிதர்களைப் போன்று அவர்களிடமும் உள்ளது. ஆனால் அவர்களின் உணவு இருப்பிடம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. ஹஜரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.

நீங்கள் விட்டை (சாணங்)களிலும், எலும்புகளிலும் சிறுநீர் கழிக்க வேண்டாம். அவை உங்கள் சகோதரர்களான ஜின்களின் உணவாகும் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்கள்  கூறினார்கள்.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்கள்  கூறினார்கள். ஒரு தினம் ஒரு ஜின் என்னை அழைத்துச் சென்றது. திருக்குர்ஆனை அவற்றிடம் ஓதிக் காண்பித்ததை அது காது தாழ்த்திக் கேட்டது. அவை நெருப்பின் விசித்திரங்களை எனக்குக் காட்டின. பின் எங்களுக்கான உணவு முறை யாது? என்று என்னிடம் கேட்டன. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட மிருகங்களின் மாமிசமுள்ள எலும்பும், சாணங்களும் ஆகும் என்று கூறிய பின், இவை இரண்டையும் (எலும்பு, சாணம்) அசுத்தமாக்காதீர்கள் அவை இரண்டும் உங்கள் சகோதரர்களான ஜின்களின் உணவாகும் என்றுரைத்தார்கள். 

இவை தவிர உண்ணும்போது சிந்துகின்ற உணவும் ஜின் ஷைத்தான்களின் உணவாகும் என்றும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் சாப்பிடும்போது சிந்துகின்ற உணவில் பட்டுள்ள மண் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்தபின் அதனை சாப்பிடுங்கள். அவற்றை ஷைத்தான்களுக்கு விட்டுவிடாதீர்கள்

அறிவிப்பவர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு 

நூல்  : முஸ்லிம், அஹ்மது, அபூதாவூத்

உண்ணும்போதும், பருகும்போதும் வலது கையால் உண்ண வேண்டும், பருக வேண்டும். இடது கையால் உண்ணும் பருகும் நபருடன் ஷைத்தானும் சேர்ந்து உண்கின்றான், பருகுகின்றான். வீட்டுக்குள் நுழையும்போதும் உணவு அல்லது பாணம் உட்கொள்ளும்போதும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும். அவ்வாறு செய்தால் இன்று நமக்கு இருப்பிடமில்லை. ஆகாரமுமில்லை  என்று ஜின், ஷைத்தான்கள் கூறும்.

இவ்வாறு அல்லாஹ்வி்ன் பெயர் கூறாது வீட்டில் நுழைந்தால் அல்லது உண்டு, பருகினால் ஆனந்தத்துடன் இன்று இருப்பிடமும், ஆகாரமும் கிடைத்து விட்டன என்று பேருவகை கொள்ளும். ஸுப்ஹு தொழாமல் தூங்கும் நபரைப் பற்றி றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்களிடம் கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் கூறினார்கள்,

அந்த மனிதனின் இரு காதிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்திருக்கக் கூடும் 

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

நூல்  : புகாரி, திர்மிதி

தீய செயல்களைக் கண்டு அவை ஆரவாரம் செய்கின்றன. அதான் சப்தங்கள் திர்குர்ஆன் ஓதும் சப்தங்கள் திக்று முழக்கம் போன்றவற்றால் சகிக்காமல் வெருண்டோடுகின்றனர். அதான் சப்தத்தைக் கேட்டால் காற்றுப் பறக்கப் பறக்க விரண்டோடுகின்றன என்று பல ஹதீதுகளில் வந்துள்ளன.

மனிதர்களைப் போன்றே ஜின்களும் பூமியில்தான் வாழுகின்றனர். ஆனாலும் இவர்களி்ன் வாழ்க்கை முறை மாற்றமானதாகும். அனேகமாக ஜி்ன்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். 

இருட்டான இடங்கள், பாழடைந்த இடங்கள், கட்டிடங்கள், பராமரிப்பில்லாத மைதானங்கள், பாலை வனங்கள், அடர்ந்த காடுகள், மலைகள், ஓடைகள், மையவாடிகள், பாழடைந்த பள்ளிவாசல்கள், கிணறுகள், சமுத்திரங்கள், வயல் வெளிகள், சுரங்கங்கள், பொந்துகள், வீட்டின் முகடுகள், மரங்கள், குகைகள், ஒட்டகை போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள், அசுத்தமான (நஜீஸ்) இடங்கள், குறிப்பாக குளியலறை, மலசல கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இவை தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுகின்றார்.

ஆதாரம்  : மஜ்முஉல் பதாவா பாகம் 19, பக்கம் 40 - 41

சூரியன் மறைந்த பின் இருள் பரவம் வேளை அதிகளவில் ஷைத்தான்கள் வெளியேறுகின்றன. அதனால் இப்படியான நேரங்களில் உங்கள் சிறு பிள்ளைகளை வெளியில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்கள்  கூறினார்கள்.

வெயிலும், நிழலும் சங்கமிக்கும் இடங்களில் இருப்பதை ஷைத்தான்கள் அதிகமாக விரும்புகின்றன. ஆதலால் அப்படியான இடத்தில் நீங்கள் உட்கார வேண்டாம் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்  எச்சரித்தார்கள்.

ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்

அதிகமாக சண்டை வாய்த் தர்க்கம் ஏற்படும் சந்தை, கடைத் தெருக்கள் போன்ற இடங்களை ஜின்களும்  ஷைத்தான்களும் அதிகமாக விரும்புகின்றன. அதனால் ஹஜரத் ஸல்மானுல் பாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு தங்களின் நண்பர்களுக்கு 

சந்தைக்கு முதல் ஆளாகச் செல்ல வேண்டாம். இறுதி நபராக வெளியேறவும் வேண்டாம்.அந்த நேரம், அந்த இடங்கள் ஷைத்தானி்ன் களமாகும் என்று வஸிய்யத் செய்தார்கள்

ஜின்களில் ஆண், பெண் இருபாலாரும் உள்ளனர். இவர்கள் திருமணம் முடித்து, சந்ததிகளை உருவாக்குகின்றனர். ஜின்கள் மனிதர்களை திருமணம் முடித்த வரலாறுகள் இருக்கின்றன. ஜின்கள் அழகான பெண்களைக் கடத்திச் சென்று வாழ்க்கை நடத்திய வரலாறுகள் ஆதி காலம் தொட்டு இருந்து வருவதாக ஹதீதுகளில் காணப்படுகின்றன. இது தொடர்பாக அதிகமான எடுத்துக் காட்டுகளை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி லுக்துல்மர்ஜான் பக்கம் 53இல் குறிப்பிட்டுள்ளார்கள். ஜின்கள் மனிதர்களைத் திருமணம் செய்து இருவருக்கும் பிள்ளைகள் பிறந்த செய்திகள் பிரசித்தி பெற்றவை என்று இப்னு தைமிய்யா மஜ்முஉல் பதாவா பாகம் 19 பக்கம் 39இல் குறிப்பிடுகின்றார். ஹஜரத் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பு மனைவி பல்கீஸ் அம்மையாரின் தந்தை ஒரு ஜின் என்று கௌதுல் அஃழம் முஹையத்தீன் ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு தங்களது q{ ன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜின்களும் ஷைத்தான்களும் விரும்பிய கோலம் எடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். பத்று யுத்த களத்தி்ல் ஒரு ஷைத்தான் சுறாக்கா பின் மாலிக் அவர்களின் உருவில் முஷ்ரிகீன்களிடம் சென்று உதவி செய்வதாக வாக்களித்தது. ஹஜரத் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸதகாப் பொருளை காவல் செய்து கொண்டிருக்கும்போது ஷைத்தான் மனித உருவில் வந்து திருடியதும் அவனை அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கைது செய்தபோது ஆயத்துல் குர்ஷியை ஓதினால் மட்டும் தன்னால் அந்த இடத்தை நெருங்க முடியாது என்று கூறிவிட்டுத் தப்பிச் சென்ற வரலாறு மிகப் பிரபலமானதாகும். 

இப்னு தைமிய்யா கூறுகின்றார்கள்,

ஜின்கள் மனித உருவிலும் மிருகங்களின் உருவிலும் தோன்றும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள், ஒட்டகம், மாடு, ஆடு, கழுதை, குதிரை, குருவிகள் (பூனை, நாய்) உள்ளிட்ட உருவில் தோன்றுகின்றனர்.

ஆதாரம்  : மஜ்முஉல் பதாவா பாகம் -19, பக்கம் - 44

மனிதனின் குருதி ஓடும் இடமெங்கும் ஷைத்தான் ஓடுகின்றான் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். அதனால், ஷைத்தான் மனிதனில் ஊடுருவி அவனது மனதில் தீய எண்ணங்களையும், சந்தேகங்களையும் தோற்றுவிக்கின்றான். மேலும், மனிதனின் அறிவைப் பேதலிக்கவைப்பதற்கும், அவனின் அன்றாட செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கும் ஆற்றல் பெற்றுள்ளான்.

ஷைத்தான் பலவீனமானவர்களையும், தனிமையிலிருப்பவர்களையும் குறிவைக்கின்றான். அல்லாஹ்வை அதிகமாக திக்று செய்கின்ற நல்லடியார்களிடம் ஷைத்தானால் ஆதிக்கம் செய்ய முடியாது, அதனை ஷைத்தான் ஒப்புக் கொண்டுள்ளான். உனது இக்லாஸான நல்லடியார்களை என்னால் வழிகெடுக்க முடியாது என்று ஷைத்தான் கூறியதும் எனது நல்லடியார்களை உன்னால் வழிகெடுக்க இயலாது என்று அல்லாஹுத்தஆலா கூறுவதும் திருக்குர்ஆனில் பல இடங்களில் வந்துள்ளன.


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை