*திருக்குர்ஆனுக்கு* *அடுத்த* *மதிப்பு மிக்க* *நூல் ஸஹீஹுல்* *புகாரி ஷரீப் !* *ஒரு* *கண்ணோட்டம்!*
*திருக்குர்ஆனுக்கு* *அடுத்த* *மதிப்பு மிக்க* *நூல்*
ஸஹீஹுல்* புகாரி ஷரீப்!*
*ஒரு*கண்ணோட்டம்!*
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருபது நூற்கள் வரை எழுதியுள்ளார்கள். இவற்றுள் ஸஹீஹுல் புகாரி ஷரீப்மூலமே அவர்களுக்கு மங்காப் புகழ் கிடைத்தது. ஸஹிஹீல் புகாரி ஷரிபுக்கு இமாமவர்கள் இட்ட பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தார் மி்ன் உமூரி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஸுனனிஹி வஅய்யாமிஹி ஆகும்.
ஒரு ஹதீஸ் கிதாபிற்கு ஜாமிஉ என்று பெயர் வைப்பதாயின் பின்வரும் எட்டுத் தலைப்புக்குள் ஹதீதுகள் இடம்பெற வேண்டும். அவையாவன.
1. ஈமான்
2. அஹ்காம் (சட்டங்கள்)
3. ஸியர் யுத்தம்
4. தப்ஸீர்
5. ஆதாப்
6. மனாகிப்
7. பிதன், குளப்பம்
8. அஷ்றாத் ஸஆத் - இறுதி நாளின் அடையாளங்கள்.
புகாரி ஷரீபுக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்துள்ள கண்ணியத்தைப் போன்று வேறு எந்த ஒரு இஸ்லாமிய நூலுக்கும் இதுவரை அல்லாஹ் வழங்கவில்லை. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஏனைய நூற்களுக்கும் இந்தளவு கண்ணியம் கிடைக்கவில்லை.
புகாரி ஷரீப் எழுதியதன் நோக்கம்
தாபியீன்களின் இறுதிக் காலத்தில் ஹதீ்ஸ் தொகுப்பு நூற்கள் முறையாக கோர்வை செய்யப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபஉத் தாபியீன்களின் காலத்தில் இந்த முயற்சியில் மேலும் ஒரு முன்னேற்றம் காணப்பட்டது.
இமாமுல் அஃழம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் முஸ்னத், இமாம் மாலிகியின் முஅத்தா இமாம் ஸுப்யானுத் தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஜாமிஃ, முஸன்னப் இப்னு அபீஷைபா, முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் அவர்களின் ஹதீஸ் தொகுப்பு, இமாம் வகீஇன் ஹதீஸ் தொகுப்பு. இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஹதீஸ் தொகுப்பு முஸ்னத், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் உள்ளிட்ட அநேக ஹதீஸ் தொகுப்புக்கள் இக்காலத்தில் உருவாகின.
இக்காலத்தில் பெருந்தொகையாக ஹதீஸ் தொகுப்பு நூற்கள் வெளிவந்திருந்தாலும், எந்த ஒரு ஹதீஸ் நூலும் முற்றிலும் ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பு நூல் என்று கூறுவதற்குத் துணியவில்லை. ஹதீ்ஸ் தொகுப்பாளர்கள் பல்வேறு வகையான ஹதீஸ்களையும் தங்களின் தொகுப்பில் சேர்த்திருந்தனர்.
ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் கொண்ட ஒரு ஹதீஸ் தொகுப்பு நூலின் அவசியத் தேவை இக்காலத்தில் பலராலும் உணரப்பட்டது. இருப்பினும் இத்தொகுப்பின் அவசியத்தைப் பற்றிய ஒரு சிந்தனை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஆசிரியரான இஹ்ஸாக் இப்னு றாஹவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஏற்பட்டது.
ஒரு தினம் தங்களது மாணவர்களை நோக்கி உங்களால் முடியுமானால் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் கொண்ட ஒரு சிறு தொகுப்பு நூலை கோர்வை செய்யுங்கள் என்று வேண்டினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இச்சபையிலிருந்தார்கள். இமாமவர்களின் வேண்டுதல்தான் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இப்படியான ஒரு நூலை எழுதத் துணிந்தார்கள்.
இதற்கப்பால், இது தொடர்பான ஒரு கனவை இமாமவர்கள் கண்டார்கள். அதனை இமாமவர்களே இப்படிக் குறிப்பிடு கின்றார்கள்.
கனவில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைக் கண்டேன். நான் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் முன் நிற்கின்றேன். எனது கையில் ஒரு விசிறி இருந்தது. அதனால் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் மேனியில் கொசுக்கள் அணுகாமல் விரட்டிக் கொண்டிருந்தேன்.
இக்கனவின் விளக்கத்தை கனவிற்குப் பலன் கூறுபவரிடம் கூறி விளக்கம் கேட்டேன்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருமேனியில் பொய் அணுகாமல் நீங்கள் தடுக்கின்றவர்களாக உள்ளீர்கள் என்று விளக்கம் பகர்ந்தார்கள். இந்த கனவுதான் இந்த ஜாமிஉல் சஹி புகாரி உருவாவதற்கு பிரதானமான காரணமாகியது.
தொகுப்பின் குறிக்கோள்
ஸஹீஹான ஹதீதின் தொகுப்பாக அமைத்தல். அதில் அகீதா தொடர்பான அமல்களை முடிந்தவரை ஸஹீஹான ஹதீஸ் ஆதாரத்துடன் நிறுவுதல். எதிர் அகீதா கொண்டுள்ள மறுப்பாளர்களுக்கு மறுப்புக் கூறலுமாகும்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஆறு இலட்சம் ஹதீதுகள் பாடமாகியிருந்தன. அவற்றிலிருந்து மிகச் சிறந்த, மிக உன்னதமான, மிகச் ஸஹீஹான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்தே இம்மகத்தான நூலை கோர்வை செய்தார்கள். இத்தேர்வில் தங்களது முழு அறிவையும் மிக நுட்பமாக பயன்படுத்தி ஆழ்ந்த ஆராய்வுக்குப் பின்பும் ஹதீஸ்களை எழுதுவதற்கு அவர்களின் மனம் இடம் தரவில்லை. இறுதியாக அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்த பின்புதான் தாளில் எழுத ஆரம்பித்தார்கள்.
பொதுவாக எழுத்தாளர்கள் எழுதுவதற்கு தனிமையையே விருப்புவார்கள். ஆனால் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்கள் நிரம்பி வழியும் மஸ்ஜிதுல் ஹறாமையும், மஸ்ஜிதுன் நபவியையுமே தேர்ந்தெடுத்தார்கள். ஒரு விடுத்தம் எழுதிய பின் அவர்கள் திருப்தியடையாவிட்டால், மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதுவார்கள். எழுதும் ஒவ்வொரு ஹதீதும் தனக்குத் தெரிந்தவைகளில் மிக உயர்வானதும், மிகச் சரியானதையுமே எழுதுவார்கள். இதனை இமாமவர்களே இப்படிக் கூறுகின்றார்கள்.
எனக்கு ஆறு இலட்சம் ஹதீதுகள் நினைவில் உள்ளன. இந்த பெருந்தொகை ஹதீதுகளிலிருந்து பொறுக்கி எடுத்து இந்த நூலை கோர்வை செய்தேன். இதற்காக பதினாறு ஆண்டுகளைச் செலவு செய்தேன். இந்த நூலை எனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் ஆதாரமாக நான் ஆக்கிக் கொண்டேன். இத்தொகுப்பில் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டுமே நுழைத்துள்ளேன். இத்தொகுப்பு பெரிதாகி விடக் கூடாதென்பதற்காக நான் தவிர்த்த ஸஹீஹான ஹதீதுகள் இதை விட அதிகமாகும்.
சஹி புகாரி ஷரீபை எழுதிய இடத்தையும், முறையையும் பற்றி இமாமவர்கள் கூறும் போது,
மக்கத்துல் முகர்ரமாவில் மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்துகொண்டே இந்த நூலை எழுத ஆரம்பித்தேன். ஹதீதை எழுதுமுன் குளித்து இரண்டு றகாஅத் தொழுது அல்லாஹ்விடம் இஸ்திகாறாச் செய்த பின்பே எழுத ஆரம்பித்தேன். எப்பொழுதாவது ஒரு ஹதீஸ் ஸஹீஹாக இருப்பதில் சிறு ஐயம் துளிர்த்தாலும், அதனை தவிர்த்து விடுவேன்.
இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்காவில் பதினாறு ஆண்டுகள் தங்கியிருக்கவில்லை என்பது வெளிப்படையானது. இத்தொகுப்பை அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும்போதெல்லாம் இதற்கான முயற்சிகளை செய்துள்ளார்கள். இதன் காலம் பதினாறு ஆண்டுகளாகும்.
அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஸஹீஹுல் புகாரி ஷரீபை மஸ்ஜிதுல் ஹறாமில் வைத்தே துவக்கம் செய்தார்கள். பின் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி ஷரீபின் தலைப்புக்களை மஸ்ஜிதுன் நபவியில் மிம்பருக்கும், ரௌழாவுக்குமிடைப்பட்ட சொர்க்கத்தி்ன் பூங்காவில் வைத்தே எழுதினார்கள். இங்கு வைத்து ஹதீ்ஸ்கள் ஒவ்வொன்றையும் எழுதும்போது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களிடம் இது தாங்கள் கூறியதுதான் என்று கேட்டதாகவும், அதற்கு ஆம் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறிய பின்பே எழுதியதாகவும், ஒரு குறிப்பிருக்கின்றது.
ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி ஷரீபை இமாமவர்கள் தொகுத்த பின் அதனை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு முயீன் அலி இப்னு மதீனி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோரின் பரிசீலனைக்கு கொடுத்தார்கள். அவர்கள் அனைவரும் அதன் அழகை மெச்சினார்கள். இதன் பின்தான் இமாமவர்களுக்கு மனசாந்தி ஏற்பட்டது.
இமாம் முஹம்மத் இப்னு வர்ராக் றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
இந்த நூலில் நீங்கள் எழுதியுள்ள ஸஹீஹான ஹதீஸ்கள் யாவும் தங்கள் நினைவில் உள்ளனவா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். ஜாமிஉல் ஸஹியில் குறிக்கப்பட்ட எந்த ஹதீதும் என் நினைவிலிருந்து மறையவிலலை. காரணம், தான் ஒவ்வொரு ஹதீதையும் மூன்று முறை எழுதினேன்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களின் அன்பைப் பெற்றது போன்றே, அவர்களின் ஜாமிஉ சஹீஹுல் புகாரி ஷரீபும் அன்னாரின் அன்பையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டுள்ளது.
ஹளரத் அபூஸைத் மறூஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,
நான் ஒரு தினம் மக்காவில் தவாபு செய்யும் மதாபில் இரண்டு றுக்னுக்குமிடையில் சைனித்துக் கொண்டிருந்தேன். கனவில் காருண்யக் கடலான காத்தமுன் நபியைக் கண்டேன். அபூ ஸைதே! ஷாபியின் நூலை எதுவரை படித்துக் கொண்டிருப்பீர்கள்! எனது நூலைப் படிக்கக் கூடாதா? என்று என்னிடம் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! தாங்களின் நூல் எதுவாகும்? என்று கேட்டேன். முஹம்மது இப்னு இஸ்மாயீலின் ஜாமிஉ என்று விடை பகர்ந்தார்கள்.
ஆதாரம் : முகத்தமாபத்ஹுல்பாரி பக்கம் - 49
சஹீஹுல் புகாரி ஷரீபின் அடிப்படை நோக்கம் மர்பூஆன ஹதீதுகளை மட்டும் பதிவதாகும். இமாம் புகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹியின் நிபந்தனைக்குட்பட்டவைகளில் உயர் தரத்தையுடைய ஸஹீஹான ஹதீதுகளை மாத்திரம் பொறுக்கி புகாரி ஷரீபில் தொகுத்துள்ளார்கள். இருப்பினும், புகாரி ஷரீபின் அநேக இடங்களில் தலைப்புக்கள், துணை ஆதாரங்கள், ஸஹாபாக்களின் ஆதாரங்கள், தாபியீன்களின் கூற்றுக்கள், இமாமவர்களின் தீர்ப்புக்கள், சட்டங்கள் உள்ளிட்டவைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இவையனைத்தும் மேலதிகமானவைகளாகும். புகாரி ஷரீபின் விதிக்கோ அதன் அடிப்படை நோக்கத்திற்குள்ளோ இவைகள் வர மாட்டாது.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி ஷரீபில் ஹதீதுகளை மாத்திரம் தொகுப்பது அவர்கள் நோக்கமன்று. தலைப்புக்கு ஏற்ற ஆதாரங்களை கூறுவதுடன், அவ்வாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்வு செய்து கூறுவதும் அவர்களின் முக்கிய நோக்கமாகும். அதற்காக முதலில் தலைப்புக்குப் பொருத்தமான திருவசனங்களையும், இமாம்களின் கூற்றுக்களையும், தீர்ப்புக்களையும் கூறுவார்கள். இதன் பின்பு தனது முழுமையான ஸனதுடன் ஹதீதுகளை எழுதுவார்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஒரு தலைப்புக்குக் கீழ் அநேக ஹதீதுகளை குறிப்பார்கள். சில இடங்களில் ஒரு ஹதீதை மட்டும் குறிப்பார்கள். சில இடங்களில் தலைப்புக்குக் கீழ் எந்த ஒரு ஹதீதையும் குறிக்க மாட்டார்கள். சில இடங்களில் ஹதீதில் வரும் அதே வசனங்களைத் தலைப்பாக்குவார்கள். இதுவெல்லாம் அவர்களின் நிபந்தனைக்குட்பட்ட ஹதீதுகளின் கூடுதல் குறைவையே குறிக்கும். சில இடங்களில் ஒரு ஹதீதைப் பல்வேறு இடங்களில் பல்வேறு தலைப்புக்களில் குறிப்பார்கள். ஒரு ஹதீதில் பல்வேறு சட்டங்கள் எடுக்க முடியும் என்பதை குறிப்பதே இதன் நோக்கமாகும்.
நிபந்தனைகள்
புகாரி ஷரீபில் இடம்பெறும் ஹதீதுக்கு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். யாரிடமிருந்து ஹதீதைப் பெற்றார்களோ அவரிடமிருந்து, நபியவர்களிடமிருந்து ஹதீதைச் செவியேற்ற ஸஹாபி வரையிலான அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கையானவர்களாகவும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து ஹதீதுகளை நேரடியாக பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கருதினார்கள். நம்பிக்கை என்பது
1. முஸ்லிமாக இருத்தல் வேண்டும்.
2. நீதமான தலைவராக இருக்க வேண்டும்.
3. பதிவும், நினைவாற்றலும் பூரணமாக இருக்க வேண்டும்.
4. தனது சைகுடனான உறவு அதிகமாக இருக்க வேண்டும்.
5. அறிவிப்பாளர் அவரை விட நம்பிக்கை யானவருக்கு முரண்படாமலிருக்க வேண்டும்.
6. அறிவிப்பாளர் எவரிடத்திலும் மறைமுகமான எக்குறையும் காணப்படக்கூடாது.
7. அறிவிப்பாளர் தனது ஷெய்கி்டமிருந்து கேட்டேன் (சமிஃது) அல்லது எமக்கு அறிவித்தார் (ஹத்ததனா) என்ற வார்த்தை மூலம்தான் ஷெய்கிடம் செவியேற்றதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
8. ஷெய்கிடமிருந்து ஹதீதை செவியேற்றதை வெளிப்படுத்தக் கூடிய இன்னாரிடமிருந்து அல்லது இன்னார் கூறினார் என்ற வார்த்தைகளையும் இமாமவர்கள் ஏற்றுள்ளார்கள்.ஆயினும் இன்னார் என்பவர் முதல்லஸாக குளறுபடியானவராக இருக்கக் கூடாது.
அறிவிப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு அவசியம் என்ற நிபந்தனையை முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சமகாலத்தில் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தினால் போதும் என்பது இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் கருத்தாகும்.
ஸஹீஹுல் புகாரி ஷரீபில் முஅல்லக் ஹதீதுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அறிவிப்பாளர்கள் முழுமையாகவோ அதிகமாகவோ அல்லது பகுதியாகவோ கூறப்படாத ஹதீதுகளை முஅல்லக் எனப்படும். ஸஹீஹுல் புகாரி ஷரீபில் ஹதீது முஅல்லக் இடம்பெற்றதற்கு பின்வரும் காரணங்களை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
1. ஸனதுடன் ஏற்கனவே கூறப்படாததாக இருக்கலாம்.
2. ஹதீதைப் பெற்றவர் சந்தேகத்திற்குரியவராக இருக்கலாம்
3. தனது ஷெய்கிடமிருந்து அவர் நிபந்தனைக்குரிய விதத்தில் நேர்முகமாகக் கேட்காததாக இருக்கலாம்.
4. ஷெய்குடன் உரையாடும்போது கேட்டவையாக இருக்கலாம்
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அதிகமான ஹதீதுகளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். சில ஹதீதுகள் பதினாறு இடங்களில் கூட வருகின்றன. இவ்வாறு பல இடங்களில் வரும் ஹதீதுகளை வார்த்தைகளின், வித்தியாசத்தால் வந்ததே தவிர கருத்தினடிப்படையில் அல்ல. இவற்றை இரு விதத்தில் நோக்கலாம்.
1. ஸனதில் மேலதிகம்
2. மதனில் - மேலதிகம்
ஒரு ஹதீது பல இடங்களில் கூறப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒரு அறிவிப்பாளரின் ஒரு ஹதீதை ஒரு இடத்தில் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஸஹி புகாரி ஷரீபில் குறிப்பிடவேயில்லை.
1. ஒரு ஹதீது இரு ஸஹாபாக்கள், அல்லது இதை விடக் கூடுதலானோர் அறிவி்க்கும் பட்சம் பல முறை இடம்பெறும்.
2. இரு தாபிஈன்கள் அல்லது இதை விடக் கூடுதலான தாபிஈன்கள் அறிவிக்கும்போது மேலதிகமாகக் கூறப்படும்.
3. தபஉத் தாபிஈன்களில் இருவர் அல்லது அதை விடக் கூடுதலானோர் அறிவிக்கும்போது பல இடங்களில் வரும்.
4. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு ஹதீதை பல ஆசான்களிடமிருந்து கேட்டிருந்தால் அதைப் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.
5. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியர்களின் ஆசிரியர்கள் பலராக இருந்தால் அதனைப் பல இடங்களில் பதித்துள்ளார்கள்.
ஒரு ஹதீது பலர் வழிகளில் அறிவிக்கப்படும்போது ஹதீது தரம் வலுவாகின்றது. அறிவிப்பாளர் பட்டியல் ஒருவர் மூலம் வருமாயின் அதனை ஙரீப் என்று முஹத்திதீன்கள் குறிப்பிடுவர். அதனால் அறிவிப்பாளர்களின் பட்டியல் பலதாக இருந்தால் இக்குறையிலிருந்து ஹதீது விடுபட்டுவிடும். ஹதீதின் வார்த்தைகளில் மாற்றம் காணப்படுமாயின் மாற்றத்திற்கு தக்க விதத்தில் பல இடங்களில் குறிப்பார்கள். இதனால் ஹதீதின் முழுமையான கருத்துக்களைப் பெற முடியும். அறிவிப்பாளர்களின் வார்த்தையில் வேறுபாடும் கருத்தில் ஒற்றுமையும் காணப்படும் ஹதீதுகளையும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். சில நேரம் ஒரு ஹதீது மற்ற ஹதீதுக்கு விளக்கமாக தப்ஸீராக ஆகிவிடும்.
புகாரி ஷரீபில் ஒரு ஹதீது பல்வேறு இடங்களில் மாறுபட்ட வார்த்தைகளுடன் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். இவ்வாறு வருவதில் பின்வரும் பயன்களைப் பெற முடியும்.
1. மாறுபட்ட தலைப்புக்கள் மூலம் ஆதாரங்களைப் பெற முடியும்.
2. ஒரு அறிவிப்பாளர் சிலவேளை ஹதீதை சுருக்கமாகவும் மற்றவர் விபரமாகவும் கூறி இருக்கலாம். இதனால் ஹதீதின் வார்த்தைகள் முழுமையாகக் கிடைக்கும் வாய்ப்பைப் பெறுகின்றது.
3. ஒரு அறிவிப்பாளர் கூறும் வார்த்தைக்கு மாறுபாடான வேறு வார்த்தைகளை மற்றுமொரு அறிவிப்பாளர் கூறி இருப்பார். இவ்விருவரின் வார்த்தைகளை கூர்ந்து ஆராய்வோருக்கு தெளிவான, அதேநேரம் நோக்கத்திற்கு ஏற்ற பொருள் விரியக் கூடும்.
4. ஒரு ஹதீஸ் மற்ற ஹதீதுக்கு விளக்கமாக ஆகும்.
5. ஒரு ஹதீதை ஒரு அறிவிப்பாளர் முர்ஸலாகவும், இன்னுமொரு அறிவிப்பாளர் முத்தஸிலாகவும் கூறி இருப்பார். இதன் மூலம் குறித்த ஹதீஸ் முர்ஸல் அல்ல முத்தஸில்தான் என்பது உறுதியாகிவிடும்.
6. ஓர் அறிவிப்பாளர் மௌகூபான அதாவது ஸஹாபிவரை மட்டும் அறிவிப்பாளர் தொடரைக் கூறியிருப்பார். மற்றுமொரு அறிவிப்பாளர் தொடரை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்வரை மர்பூஆக கூறியிருப்பார். ஒரு ஹதீது பல இடங்களில் மாறிமாறி வருவதால் இதன் பயனை அடைய முடிகின்றது.
7. ஒரு அறிவிப்பாளர் ஒரு ஹதீதை இன்னாரைத் தொட்டு என்று முஅன்அன் ஆக அறிவித்திருப்பார். மற்றவர் ஹத்ததனா, அக்பர்னா, ஸமிஃத்து என்று கூறியிருப்பார். ஆதலால் முஅன்ஆக அறிவித்தவரின் அறிவிப்பில் தத்லீஸ் இருப்பதற்கான ஆபத்தை மேற்கண்ட இதர அறிவிப்புக்கள் நீக்கிவிடுகின்றன.
ஒரு ஹதீஸ் பல இடங்களில் மடங்கி மடங்கி வருவதால் மேற்கண்ட பன்னிரெண்டு பயன்கள் இருப்பதை அவதானிக்கலாம். இவற்றுள் ஐந்து ஸனதுடனும், ஏழு மதனிலும் பெறப்படுகின்றன. ஹதீதுகளை வாசிப்பவர் ஆழ்ந்து ஆராய்ந்தால் இதைவிடவும் அநேக பயன்களைக் கண்டுகொள்ள முடியும். புகாரி ஷரீபில் உள்ள ஹதீதுகளின் எண்ணிக்கையில் இமாம்கள் மத்தியில் ஒத்த கருத்துக் காணப்படவில்லை. ஹாபிழ் இப்னு ஸலாஹ் அவர்களின் கணிப்பின்படி மொத்தம் 7275 ஹதீதுகள் உள்ளன. மீண்டும் மீண்டும் வருபவைகளை நீக்கினால் 4000 ஹதீதுகள் உள்ளன.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கணிப்பின்படி மொத்தம் 7397 ஹதீதுகளாகும். இதில் முஅல்லகாத் 1321, முதாபிஅத் 344, மர்பூஆன ஹதீதுகள் 2633.
புகாரி ஷரீபில் வரும் ஹதீதுகளில் மிகவும் உயர்வானதற்கு துலாதிய்யத் என்று கூறப்படும். இவ்வகையினது, ஹதீதுகளி்ல் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களுக்குமிடையில் மூன்று அறிவிப்பாளர்கள் மட்டுமே காணப்படுவர். இவ்வகையான ஹதீதுகளின் மொத்தம் 22 மட்டுமே! மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்தால் 01 மட்டுமே!
புகாரி ஷரீப் ஓதி முடிக்கும்போது கேட்கப்படும் துஆ கபூலாகும். கஷ்டங்கள் அகலும். தேவைகள் நிறைவேறும். இதனை இமாம் கஸ்தலானி புகாரி ஷரீபிற்கு அன்னார் எழுதிய விரிவுரையின் முன்னுரையிலும், இமாம் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அஷிஃஅத்துல் லம்ஆத்திலும், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மிர்காதிலும் குறிப்பிட்டுள்ளனர். மழை இல்லாது பஞ்சம் நிலவும் காலத்தில் புகாரி ஷரீப் ஓதப்படுமாயின் பஞ்சம் அகலும் என்று ஹாபிழ் இப்னு கதீர் குறிப்பிடுகின்றார். இமாம் புகாரி அவர்கள் துஆ அங்கீகரிக்கப்படும் நபரைச் சேர்ந்தவராக இருந்தார். புகாரி ஷரீப் ஓதுவோரின் தேவைகள் நிறைவேற வேண்டும் என ஏலவே துஆச் செய்துள்ளார்கள்.
புகாரி ஷரீபுக்கு கணக்கற்ற விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன. கஷ்புல் ழுனூன் என்ற நூலில் ஐம்பது விரிவுரைகளின் நாமங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அறபி அல்லாமல் உருது, பாரசீகம் போன்ற மொழிகளிலும் புகழ்பூத்த விரிவுரைகள் காணப்படுகின்றன. ஷெய்குல் ஹதீஸ் அல்லாமா ஷரீபுல் ஹக் அம்றுத் அவர்களின் கணிப்பின்படி உருது பாரசீகத்தில் மட்டும் 100க்கும் அதிகமான விரிவுரைகள் காணப்படுகின்றன.
அறபு மொழியில் பத்ஹுல் பாரி, உம்தத்துல் காரி, இர்ஷாத்துஸ்ஸாரி ஆகிய மூன்று விரிவுரைகள் மிகப் பிரபல்யமானவைகளாகும். இவற்றின் சிறப்பம்சங்களை சுருக்கமாக தருகின்றேன்.
01. பத்ஹுல் பாரி
இதன் ஆசிரியர் ஹாபிழ் அல்லாமா ஷிஹாபுத்தீன் அபுல் பழ்லு அஹ்மத் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (வபாத் ஹிஜ்ரி 852) அவர்களாகும். இவர் கெய்ரோவில் ஹிஜ்ரி 773 ஷஃபானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 852 துல்ஹஜ் மாதத்தில் வபாத்தானார்கள். மாபெரும் முஹத்திஸ் இமாம் தைலமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பக்கத்தி்ல் நல்லடக்கம் செய்யப் பட்டார்கள்.
ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பலரிடம் கல்வி கற்றுள்ளார்கள். ஆயினும் ஹாபிழ் ஸைனுதீன் இறாக்கி, ஹாபிழ் ஸிறாஜுத்தீன் புல்கீனி ரஹிமஹுமுல்லா ஆகிய இருவரிடமும் விஷேடமாகக் கற்றார்கள். இமாமவர்கள் பல்துறை சார்ந்த 250இற்கு மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள்.
இமாமவர்கள் இருபது ஆண்டுகள் கெய்ரோவில் காழிகுழாத் நீதியரசர் பதவி வகித்துள்ளார்கள். புகாரி ஷரீபுக்கான மேற்படி நூலை ஹிஜ்ரி 817 இல் ஆரம்பித்து 842இல் நிறைவு செய்தார்கள். இந்நூல் மொத்தமாக 17 பாகங்களாக கொண்டிருந்தது. தற்போது குறைந்த எண்ணிக்கையில் சுருக்கப்பட்டுள்ளது.
இமாமவர்களின் இந்நூல் அறிவிப்பாளர் பற்றிய ஆய்வாளர்களுக்கு அரிய பொக்கிஷமாகும். புகாரி ஷரீபுக்கு சிறந்த விளக்கத்தினை இமாமவர்கள் கொடுத்திருப்பதாக அறிஞர்கள் திருப்தி வெளியிட்டுள்ளார்கள். கடினமான சொற்களுக்கு இலகுவான விளக்கம், முரண்பாடாகத் தோன்றும் ஹதீதுகளுக்கு பொருத்தம் காணும் விளக்கம், பாடங்களின் தலைப்பிற்கு நுட்பமான விளக்கம், இமாம் புகாரியின் அறிவிப்பாளர்களின் குறை நிறை விளக்கம், இமாம் புகாரி அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு, ஹதீதுக்கும் பாடத் தலைப்புக்குமிடையில் கருத்துப் பொருத்தம் காணல், சட்ட ஆய்வுகள், சுருக்கமாக வந்துள்ள ஹதீதுகளை இதர அறிவிப்புக்கள் மூலம் நிறைவாக்கல், தெளிவில்லாத அறிவிப்பாளர்களின் பெயர்களைத் தெளிவுபடுத்தல், வார்த்தைகளி்ன் சிக்கலை நீக்கல், அறிவிப்பாளர்கள் பற்றிய திறனாய்வுடன் கூறும் பாங்கு இந்நூலில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது.
02. உம்தத்துல் காரி
இந்நூலின் ஆசிரியர் அல்லாமா பத்றுத்தீன் அபூ முஹம்மத் மஹ்மூத் இப்னு மூஸா ஐனி ஆகும். இவரின் தந்தை காழி ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு காழி ஷறபுத்தீன் மூஸாபின் அஹ்மத் ஆவார். இவர் ஹலபை பிறப்பிடமாகக் கொண்டவராகும். ஹலபைத் துறந்து ஐன்நாப் என்ற இடத்தை வாழுமிடமாக்கிக் கொண்டனர். இது ஹலபிலிருந்து 3 மன்ஸில் தூரமாகும். இங்கு வந்தபின் அவ்வூர் காழிப் பதவி இவர் மீது சுமத்தப்பட்டது.
இங்குதான் அல்லாமா ஐனி அவர்கள் ஹிஜ்ரி 762 ரமழான் 17இல் பிறந்தார்கள். இந்த ஊரைத் தொடர்பாக்கி இவர்களை ஐனி என்று அழைக்கலாயினர். இவர்களும் ஹாபிழ் ஸைனுத்தீன் இறாக்கி, ஹாபிழ் ஸிறாஜுத்தீன் புல்கீனி ஆகியோரின் மாணவராவார்.
புகழ் பூத்த அறிஞர்கள் பலரிடம் கல்வி கற்ற இவர்கள் வாழ்நாள் பூராகவும் கெய்ரோவிலேயே காலம் கழித்தார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்களின் சமகாலத்தவரான இவர்கள், அன்னார் வபாத்தாகி மூன்று ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரி 855 துல்ஹஜ் பிறை 4இல் வபாத்தானார்கள்.
ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்களும், அல்லாமா ஐனி அவர்களும் இரண்டு மூன்று ஆண்டுகள் கால வித்தியாசத்தில் புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுத ஆரம்பித்தனர். அல்லாமா ஐனி அவர்கள் ஹிஜ்ரி 821இல் தனது விரிவுரையை எழுத துவக்கி 26 ஆண்டுகளுக்குப் பி்ன் நிறைவு செய்தார்கள்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அதாவது சனிக்கிழமை தனது அனைத்து மாணவர்களையும் அழைத்து வாரம் பூராகவும் தான் எழுதி வைத்த விளக்கத்தை புர்ஹான் இப்னு அஹ்ழர் என்பவரிடம் கொடுத்து மாணவர்களிடம் வாசிக்கும்படி கூறுவார்கள். அனைவரும் செவிமடுத்துக் கேட்டபின் விவாதிப்பர். விவாதித்தபி்ன் யாவரும் பிரதிகள் எடுத்துக் கொள்வர். இதனால் இமாமவர்களின் நூல் முழுமைபெற்று வெளிவர முன்பே மக்களின் புழக்கத்திற்கு வந்து விட்டது.
அல்லாமா ஐனி அவர்கள் புர்ஹான் பின் அஹ்ழர் என்பவரிடம் அப்பிரதிகளை இரவலாகப் பெற்று பார்வையிட்டதன் பின் தனது நூலில் அதன் கருத்துக்களையும் சேர்த்திருப்பதுடன் தான் உடன்படாத இடங்களில் மறுப்பையும் நியாய உரையையும் தீட்டியுள்ளார்கள். ஐனியில், பத்ஹுல் பாரியில் வரும் அதே சொற்கள் அடங்கிய வசனங்கள் பரவலாக இடம்பெற்றிருப்பதினால் ஐனி பத்ஹுல் பாரியின் கொப்பி என்று சிலர் குறை கூறுவதுண்டு. ஆனால்,
உண்மையில் இமாம் ஐனி அவர்கள் பத்ஹுல் பாரியில் உடன்பாடான கருத்துக்களை வரைந்திருப்பதுடன் உடன்படாதவைகளில் மறுப்பையும் எழுதியுள்ளார்கள். சில இடங்களில் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் கருத்துக்களை விமர்சித்தும் எழுதியுள்ளார்கள்.
முதலில் பாடத்தை தெளிவுபடுத்துவார்கள். முன்பாடத்தின் தொடர்பை விளக்குவார்கள். பின் பாடத்தின்தலைப்பி்ன் நோக்கத்தை விளக்குவார்கள். பாடம் தொடர்பாக ஏதும் திருமறை வசனங்கள் அல்லது ஹதீதின்பகுதிகளை விளக்குவார்கள். ஹதீதின் மதன் (மூல வாக்கியப்) பகுதிகளை ஸனதுடன் விளக்குவார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர்கள் பற்றிய முக்கிய குறிப்புக்களை விளக்கமாகக் கூறுவார்கள். றாவிகளின்பரம்பரை பற்றி தெளிவின்மை காணப்பட்டால் அதை தெளிவுபடுத்துவார்கள். பின்,
அறிவிப்பாளர் பட்டியலின் உள்ளே ஏதும் நுட்பங்கள், விஷேடங்கள் காணப்பட்டால் அது பற்றி விளக்குவார்கள். மேலும் குறித்த ஹதீஸ் புகாரி ஷரீபில் எங்கு எத்தனை இடங்களில் வந்துள்ளது என்ற விபரத்தைத் தருவார்கள். அத்துடன் குறித்த ஹதீஸ் ஸிஹாஹுஸ்ஸித்தாவில் எங்கு எந்த எந்த இடத்தில் இடம் பெற்றுள்ளது என்ற முழு விபரத்தையும் கூறுவார்கள்.
வார்த்தைகளிலுள்ள சிக்கலை அவிழ்ப்பார்கள். முக்கிய இடங்களில் இலக்கண விளக்கம் கூறுவார்கள். தொடர்ந்து அணி இலக்கிய பஸாஹத், பலாஹத் விளக்கம் பகர்வார்கள். இதன் பின்பு ஹதீதின் முழு விளக்கத்தையும் பூரணமாகக் கூறுவார்கள். தான் சரிகாணும் கருத்தை சுருக்கி யுக்தி ஆதாரங்களால் நிறுவுவார்கள். பின் ஹதீதிலிருந்து பெறப்படும் சட்டங்களைப் பட்டியலிடுவார்கள்.
மேற்கண்ட இரு விரிவுரைகளும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றில் காணப்படும் விளக்கங்கள் புகாரி ஷரீபை பூரணமாக விளக்குவதற்கு சிறந்த ஆதாரங்கள் என்று அறிஞர்கள் இரண்டாம் கருத்தில்லாமல் கூறியுள்ளனர்.
நீ்ண்ட காலமாக புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதப்படாத குறையை இவ்விருவரும் நிறைவேற்றியுள்ளதாக அல்லாமா இப்னு கல்தூன் கூறியிருப்பது நோக்கத்தக்கதாகும்.
இர்ஸாதுஸ்ஸாரி (கஸ்தலானி)
அல்லாமா ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு முஹம்மது கதீப் கஸ்தலானி மிஸ்ரி அவர்கள் இதன் ஆசிரியராவார். ஹதீதின் பொருளைக் கூறும் சுருக்கமான விரிவுரை நூலாகும். சிக்கலான வார்த்தைகள் வருமிடமெங்கும் தெளிவு கொடுக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் உள்ளடக்கம் அதிகமாக பத்ஹுல் பாரி, உம்தத்துல் காரி ஆகிய இரு நூற்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
மத்ரஸாவி்ல் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் மிக்க பயன் தருபவையாகும். மத்ரஸாக்களில் அதிகம் வாசிக்கப்படும் இந்நூல் படிப்பதற்கும் விளங்குவதற்கும் மிக இலகுவாக அமைந்துள்ளது. கெய்ரோவில் வாழ்ந்த ஹாபிழ் ஜலாலுத்தீன் ஸுயூத்தி றஹ்மத்துல்லாஹி அலைஹியின் சமகாலத்தவரான இவர்கள் ஹிஜ்ரி 923இல் வபாத்தானார்கள். வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்குப் பின் ஜாமிஉல் அஸ்கரில் ஜனாஸா தொழுகை நடந்த பின் அல்லாமா ஐனி அவர்களி்ன் மத்ரஸாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
Comments
Post a Comment