*ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பார்வை*!
*ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பார்வை*!
கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்
சஹிஹான ஆறு கிரந்தங்களுள் இரண்டாவது இடத்திலிருப்பது சஹி முஸ்லிம் என்ற கிரந்தமாகும். இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆழ்ந்த முயற்சிக்குப் பின் இத்தொகுப்பை செய்து முடித்தார்கள். நூலின் தொகுப்பு, ஒழுங்கின் அழகு என்ற அடிப்படையில் நோக்கி்னால் சஹி முஸ்லிம் கிரந்தம் சஹீஹுல் புகாரியைவிட உயர்ந்து காணப்படுகின்றது. ஆரம்ப காலம்தொட்டு இது நாள்வரை இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதே இந்நூலின் சிறப்புக்குரிய அங்கீகாரமாகும்.
ஹதீதுத் துறையில் ஆழ்ந்த புலமைபெற்ற பலர் சஹி முஸ்லிம் தொகுப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். புகாரி ஷரீபைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்துமிருக்கின்றார்கள். இமாம் அபூஅலி ஹாகிம் நைஸாபூரி, ஹாபிழ் இமாம் அப்துர் ரஹ்மான் நஸாஈ அவர்கள் புகாரி ஷரீபை விட சஹி முஸ்லிம் உயர்ந்தது என்று கூறுகின்றார்கள்.
இமாம் தாரகுத்னியின் சமகாலத்தவரான இமாம் முஸ்லிம் பின் காஸிம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகையில், இமாம் முஸ்லிமின் சஹி முஸ்லிமை ஒத்த ஒரு தொகுப்பை எவராலும் ஆக்க முடியாது என்கின்றார்கள்.
சஹி முஸ்லிம் தொகுப்பை கோர்வை செய்வதற்கான காரணத்தை இமாமவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மீண்டும், மீண்டும் மடங்கிவரும் ஹதீதுகள் இல்லாத சஹீஹான ஹதீதுகளின் தொகுப்பு ஒன்றைக் கோர்வை செய்யுமாறு தனது மாணவர்களில் சிலர் எம்மிடம் வேண்டினர். அவர்கள் வேண்டுதலை நான் ஏற்று மூன்று இலட்சம் ஹதீதுகளில் இருந்து பொறுக்கி எடுத்து எனது சஹீஹில் பதிவு செய்தேன்.
ஹதீதுகளை அறிவிப்புச் செய்தவர்களிடம் நேரில் கேட்ட ஹதீதுகளைத்தான் சஹீ முஸ்லிமில் இடம்பெறச் செய்தார்கள். ஆழ்ந்த ஆய்வுடன் செய்த தொகுப்பை மேலும் உறுதி செய்துகொள்வதற்காக அக்காலத்தில் அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை நன்கு அறிந்தவரான ஹாபிழ் அபூ ஸுர்ஆ ரழியல்லாஹு அன்ஹுவின் பார்வைக்குட்படுத்தினார்கள்.
இமாமவர்கள் குறைகண்ட அறிவிப்புக்களை அப்புறப்படுத்தினார்கள், இந்த கடின முயற்சி பதினைந்து வருட காலம்வரை நீடித்தது. 15 வருடத்தின் கடின முயற்சியின்பின் மலர்ந்ததுதான் சஹீ முஸ்லிமாகும்.
ஹாஜி கலீபா உள்ளிட்ட வரலாற்று ஆசிரியர்களில் சிலர் சஹீ முஸ்லிம் தொகுப்பிற்கு அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் என்று நாமம் சூட்டியதை ஆட்சேபிக்கி்ன்றனர். முஸ்லிம் தொகுப்பில் தப்ஸீர் பகுதி சொற்பமான ஹதீதுகளைக் கொண்டிருப்பதே ஆட்சேபனைக்கான காரணமாகும்.
ஜாமிஉ என்று கூறப்படுவதற்கு தப்ஸீர் பகுதியும் நிறைவாய் இருக்க வேண்டும். ஆயினும், இமாம் ஸுப்யானுத் தௌரி, இமாம் ஸுப்யான் இப்னு உயைய்னா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் தொகுப்புக்களிலும் தப்ஸீர் பகுதியில் சொற்பளவு ஹதீதுகளே இடம்பெற்றுள்ளபோதும் அத்தொகுப்புக்களுக்கு ஜாமிஉஸ் சஹீஹ் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனால், சஹீ முஸ்லிமுக்கு அல்ஜாமிஉஸ் சஹீஹ் என்பதில் எதுவித குற்றமும் கிடையாது.
தப்ஸீர் பகுதியில் இடம்பெறக் கூடிய அதிகமான ஹதீதுகள் சஹீ முஸ்லிமின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ளன. தப்ஸீர் பகுதியில் ஹதீதுகள் குறைவாக இடம்பெற்றிருப்பதற்கு இதுவே பிரதான காரணமாகும். முடிந்தளவு முன் கூறிய ஹதீதுகளை மீண்டும் கொண்டு வருவதில்லை என்ற இமாம் முஸ்லிமின் நிபந்தனையே இதற்குக் காரணமாகும்.
இமாம் முஸ்லிம் தனது தொகுப்பை ஒழுங்குபடுத்துவதில் அதி உச்ச பேணுதலைக் கடைப்பிடித்துள்ளார்கள். இமாம் இப்னு ஷிஹாபுத்தின் ஸுஹ்ரி, இமாம் மாலிக், இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் போன்றோர், ஹத்ததனா, அக்பர்னா, என்ற சொற்களுக்கிடையில் பெரியவேறுபாட்டைக் காண்பதில்லை. ஆனால், இப்னு ஜுறைஜ், இமாம் அவ்ஸாஈ, இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு யஹ்யா, அப்துல்லாஹ் இப்னு முபாறக், உள்ளிட்ட முஹத்திதுகள் இச்சொற்களுக்கிடையில் வேற்றுமை காணுகின்றனர்.
ஆசிரியர் ஹதீதை வாசிக்க, மாணவர் செவியேற்றால் ஹத்ததனா என்றும், மாணவர் ஹதீதை வாசிக்க ஆசிரியர் செவியேற்றால் அக்பர்னா என்றும் கூறுவர். அதிகமான முஹத்திதுகள் அக்பர்னா, ஹத்ததனா என்ற சொற்களுக்கு மத்தியில் வேறுபாடு காண்பதில்லை. இதனால், பேணுதலின் அடிப்படையில் இமாம் முஸ்லிம் இச்சொற்களை வேறுபடுத்தியே கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்களி்ன் பெயர்களைப் பதிவதிலும் இமாம் முஸ்லிம் அவர்கள் அதிக பேணுதலை வெளிப்படுத்தியுள்ளார்கள். அறிவிப்பாளர்களின் மூலப் பிரதிகளில் வமிசம் குறிப்பிடாமலும் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் யார் அவர் என்று குழப்பம் வர வாய்ப்புண்டு. அதனை நீக்கும் வகையில் பெயரைக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக,
ஆசிரியர் சுலைமான் என்பவர் யஹ்யா என்பவர் மூலம் எமக்கு அறிவித்தார் என்று கூறியதில் சுலைமான் என்பவரும், யஹ்யா என்பவரும் யார்? என்று புரிவதில் குழப்பம் உண்டு. இதனைத் தவிர்க்கும் வகையில் சுலைமான் அதாவது பிலாலி்ன் மகன், யஹ்யா அதாவது அவர் சஙீதீன் மகன் என்று குறிப்பிடுவார்கள். இதனால், அறிவிப்பாளர் பட்டியலை வாசிப்போர் குழப்பம் அடைய வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது
இதுபோன்று அறிவிப்பாளரின் பண்புகள், புனைப் பெயர்கள், பட்டப் பெயர், வமிசம் உள்ளிட்டவைகளில் குழப்பம் ஏற்படாதிருக்கவும் அதனையும் தேவைக்கேற்ற வகையில் விளக்கி கூறுவார்கள். ஏதாவது ஒரு அறிவிப்பாளர் பட்டியலில் மறைமுகமான சிறு குறை இருப்பினும் அதனையும் வெளிப்படுத்துவார்கள்.
அறிவிப்பாளர் பட்டியல் நபியவர்கள்வரை சேர்ந்திருந்தால் அதனையும் அல்லது நேராக ஒரு தாபியீ அறிவித்தால் அதனையும் விளக்குவார்கள். அத்துடன் மதனில் கூடுதல் குறைவு காணப்படின் அதனையும் குறிப்பிடுவார்கள்.
ஹதீதின் வார்த்தைகளில் ஏதும் முரண்பாடுகள் காணப்படின், அப்படியான அனைத்து ஹதீதுகளையும் குறிப்பிடுவார்கள். இவையனைத்தும் சஹீ முஸ்லிமின் சிறப்பம்சங்களாகும். சஹீ முஸ்லிமின் இத்தனிச் சிறப்புக்கள் சஹீஹுல் புகாரியில் காணப்படவில்லை.
ஒரு ஹதீஸ் பல அறிவிப்பாளர் பட்டியலுடன் வருமாயின் அவை அனைத்தையும் ஒரே பார்வையில் ஒரே இடத்தில் குறிப்பிடுவார்கள். பாடத்திற்கேற்றவாறு பல்வேறு இடங்களில் பிரித்து எழுத மாட்டார்கள். ஹதீதின் கருத்தையோ, சுருக்கியோ கூற மாட்டார்கள். ஹதீதுகளுடன் ஸஹாபாக்கள், தாபியீன்களின் கூற்றுக்களை கலக்க மாட்டார்கள்.
இமாம் முஸ்லிம் தனது ஜாமிஉ சஹீஹில் இடம்பெறும் ஹதீதுகளுக்கான அறிவிப்பாளர்கள் பின்வரும் தகைமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்கள்.
1. அறிவிப்பாளர் - முஸ்லிமாக இருக்க வேண்டும்
2. உறுதிமிக்க நம்பிக்கையாளராக இருக்க வேண்டும்.
3. அறிவிப்பாளர் விடுபடாமல் நபியவர்கள் வரை சேர்ந்திருக்க வேண்டும்.
4. குறைகள் இருக்கக் கூடாது.
இமாம் முஸ்லிம் அவர்களிடத்தில் அறிவிப்பாளரின் உறுதித் தன்மை என்பது முதற்படித் தரத்தில் அல்லது இரண்டாவது படித்தரத்தில் இருக்க வேண்டும். முதற் படித் தரம் என்பது, ஹதீதின் பதிவும், நம்பிக்கையின் உறுதித் தன்மையும், பூரணமாக இருக்க வேண்டும். அத்துடன் ஷெய்குடன் அதிக உறவும் இருக்க வேண்டும்.
பதிவு பூரணமாகவும் ஷெய்கின் உறவு குறைவாகவுமிருப்பின் அவர் இரண்டாம் நிலையில் இருப்பார். பதிவில் குறைபாடும், ஷெய்கின் உறவு அதிகமிருப்பின் அவர் மூன்றாம் நிலையிலிருப்பார்.
வளரும்

Comments
Post a Comment