*இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி*!



*இமாம்*திர்மிதி*ரஹ்மத்துல்லாஹி அலைஹி*!

கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்


இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சிறந்த ஆபிதாகவும், துறவியாகவும், நிகரற்ற ஹதீஸ் துறையில் ஹாபிழாகவும் விளங்கினார்கள். மிகச்சிறந்த ஆலிமான இவர்கள் அபார நினைவாற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்களின் கடினமான வணக்க வழிபாட்டினால் அவர்களின் இறுதிக் காலத்தில் கண்பார்வையை இழந்துள்ளார்கள் என்று ஹளரத் யூஸுப் பின் அஹ்மத் பக்தாதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் திர்மிதி அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். ஒரு தினம் இஇமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிமாம் புகாரி அவர்கள் இமாம் திர்மிதியைப் பார்த்து, என்னிடமிருந்து நீங்கள் பெற்ற பயனைவிட, உங்களிடமிருந்து யான் பெற்ற பயன் அதிகம் என்று குறிப்பிட்டார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வபாத்தான பின் குறாசான் வாசிகள் அறிவு, அமல் இரண்டிலும் இவர்களையே பின்பற்றினர் என்று இம்ரான் பின் அலான் என்பவர் கூறுகின்றார்.

ஆதாரம் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் - 01, பக்கம் - 388

இமாம் திர்மிதி அவர்களின் இயற்பெயர் முஹம்மது. புனைப்பெயர் அபூ ஈஸா, ஜாமிஉத் திர்மிதியில் தனது பெயரைத் தவிர்த்து புனைப்பெயரையே பாவித்துள்ளார்கள். திர்மிதி என்ற பெயரில் மூன்று அறிஞர்கள் பிரபலமாக உள்ளனர்.

01. இமாம் அபூ ஈஸா திர்மிதி ஜாமிஉஸ்ஸஹீஹ் திர்மிதியை எழுதியவர்கள் (வபாத் ஹிஜ்ரி 279)

02. அபுல் ஹஸன் அஹ்மத் இப்னு ஹஸன் பின் ஜுனைத் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 245) இவர்கள் திர்மிதி கபீர் என்று பிரபலமாயிருந்தார்கள்.

03. அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அலி இப்னு ஹஸன் அல் ஹகீம் திர்மிதி (வபாத் ஹிஜ்ரி 255) இவர்கள் எழுதிய நவாதிறுல் உஸுல் பிமஃரிபத்தி அக்பாரிர்ரஸுல் என்ற நூல் மிகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் 1288 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. 

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவைத்தேடி குறாஸான், ஈராக், ஹிஜாஸ் உள்ளிட்ட அநேகமான நகரங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களைத் தேடிச்சென்று அறிவைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இவர்கள் அறிவைப் பெற்ற ஆசான்களின் சிலரின் பெயர்கள் வருமாறு,

01. குதைமா பின் சஹீது, அபூ முஸ்அப், இப்றாஹீம் இப்னு அப்துல்லாஹ் ஹர்தி, இஸ்மாயில் இப்னு மூஸா அஸ்தி, ஸுவைத் இப்னு நஸ்று, அலி இப்னு ஹுஜ்று, முஹம்மது இப்னு அப்துல் மாலிக் இப்னு அபீஷவாரிப், அப்துல்லாஹ் இப்னு முஆவியா, முஹம்மது இப்னு இஸ்மாயில் புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜுல் குஸைரி, இமாம் அபூதாவுத்.

ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பாத், பாகம் - 02, பக்கம் - 634

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் கல்வி கற்றோரின் எண்ணிக்ககை மிக அதிகமானதாகும். அன்னாரிடமிருந்து ஹதீதைக் கேட்டோரின் நீண்ட பட்டியலிலிருந்து முக்கியமானவர்களை ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூ ஹாமிது அஹ்மத் இப்னு அப்துல்லாஹ்,

இப்னு தாவூத் மறூஸா,

ஹைதம் இப்னு குலைப் ஷாமி, 

முஹம்மது இப்னு மஹ்பூப், 

அபுல் அப்பாஸ் மஹ்ழபி மறூஸி, 

அஹ்மத் இப்னு யூஸுப் நஸபி, 

அபுல் ஹாரிது உஸ்துப்னு ஹம்தவிய்யா, 

தாவூத் இப்னு நஸ்றுப்னு ஸஹீல், 

முஹம்மத் இப்னு முன்திர் இப்னு ஈஸா ஹர்வீ, 

முஹம்மத் இப்னு நுமைர்,

இமாம் புகாரி.

இமாம் திர்மிதி அவர்கள் கற்றல், கற்பித்தலில் அதிக ஈடுபாடு காட்டியதோடு பின்வரும் நூற்களையும் எழுதினார்கள்.

ஜாமிஉத் திர்மிதி, 

கிதாபுல் இல்லத், 

கிதாபுத் தாரீக், 

கிதாபுஸ் ஸுஹ்து, 

கிதாபுல் அஸ்மாஈ வல்குனா, 

கிதாபு ஷமாயிலுன் நபவியா

வாழ்நாள் பூராகவும் ஹதீதுத்துறை அளப்பரிய சேவை புரிந்த இமாமவர்கள் ஹிஜ்ரி 279 றஜப் 13இல் திர்மிதி என்ற இடத்தில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆக்கங்களுள் அவர்களுக்கு மங்காப் புகழை ஏற்படுத்திக் கொடுத்த நூல் ஜாமிஉத் திர்மிதி ஆகும். ஜாமிஉத் திர்மிதியின் சிறப்பைப் பற்றி ஹாபிழ் இப்னு அதிர் உஸூல் என்ற நூலில் பின்வருமாறு வரைகின்றார்கள். 

சஹீஹான ஹதீதுக் கிரந்தங்களில் ஜாமிஉத் திர்மிதி மிக அழகான அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் பயன்பாடும், ஒழுங்கமைப்பும் சிறப்பாக உள்ளது. மடங்கிவரும் ஹதீதுகள் மிகக்குறைவு. மத்ஹபுகளின் கருத்திலிருந்தும் அதற்கான காரணங்களும் ஹதீதின் வகைகளும் அறிவிப்பாளர்களின் நிலைகளும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

இமாம் திர்மிதி அவர்கள் ஜாமிஉத் திர்மிதியை எழுதி முடித்தபின் ஹிஜாஸிலுள்ள அறிஞர்களின் பார்வைக்குட்படுத்தினார்கள். பார்வையிட்ட பின் இவர்கள் இதன் அழகைக்கண்டு வியந்து பாராட்டினார்கள். இதன்பின் குறாஸான் உலமாக்களிடம் காட்டினார்கள். அவர்களும் பாராட்டினார்கள். ஜாமிஉத் திர்மிதி எவர் வீட்டில் இருக்கின்றதோ அங்கு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுடன் உரையாடிக்  கொண்டிருப்பது போன்று இருக்கும் என்று இமாம் அபூ ஈஸா திர்மிதி அவர்கள் கூறியதாக ஹாபிழ் தகபி கூறுகின்றார்.  

ஆதாரம் : தத்கிறத்துல் ஹுப்பால், பாகம் - 2, பக்கம் - 634

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஜாமிஉத் திர்மிதியில் ஒரு தனித்துவமான ஒழுங்கமைப்பைக் கையாண்டுள்ளார்கள். இந்த ஒழுங்கு வேறு எந்த ஹதீது நூலிலும் காணப்படவில்லை.  இதனால் ஏனைய ஹதீது நூற்களைவிட ஜாமிஉத் திர்மிதிக்கு தனித்துவமான சிறப்பு உள்ளது. ஜாமிஉத் திர்மிதியில் பின்வரும் சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. 

01. இமாம் திர்மிதி அவர்கள் ஹதீதைக் கூறியபின் இமாமவர்களின் கருத்துக்களையும், அதில் ஏனைய அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் குறிப்பிடுவார்கள். உதாரணமாக குலைஸத் இப்னு ஹுலப் என்பவர் அவர் தந்தை மூலம் அறிவிக்கின்றார்கள்.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று எம்மைத் தொழுவிப்பார்கள். அப்போது அவர்களின் இடது கையை வலது கையால் பிடித்துக் கொள்வார்கள்.

இந்த பாடத்தில் வாயில் இப்னு ஹுஜ்ரு, உதைப் இப்னு ஹாரிது, இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத், ஸஹ்லுப்னு ஸஹ்லு ஸஃது ஆகியோரும் அறிவித்துள்ளனர் என்று கூறிய பின் அபூஈஸா கூறுகிறார்.

ஹுலுபின் ஹதீது ஹஸன் ஆகும். நபிகள் நாயகத்தின் அஸ்ஹாபிகளும், தாபியீன்களும் அவர்களுக்குப் பின் வந்தோரும் இந்த ஹதீதின்படியே அமல் செய்துள்ளனர். 

தொழுகையில் (தக்பீர் கட்டும்போது) இடது கைக்கு மேல் வலது கையை வைப்பதையே இவர்கள் (சரியாகக்) கண்டனர். இவர்களில் சிலர் அவ்விரு கைகளையும் தொப்புளுக்கு மேலாலும், அவர்களுள் மற்றும் சிலர் தொப்புளுக்கு கீழாலும் வைப்பதையே சரியாகக் கண்டனர். இது பற்றிய விளக்கம் அவர்கள் மத்தியில் தெளிவாகவே இருந்தது. (ஸஹாபாக்கள். தாபியீன்களில் உள்ள அறிஞர்கள் மத்தியில் நெஞ்சில் தக்பீர் கட்ட வேண்டும் என்று எவருமே கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது)

02. ஜாமிஉத் திர்மிதியில் இரண்டே இரண்டு ஹதீதுகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து ஹதீதுகளும் ஏதோ ஒரு இமாமிடத்தில் அமலுக்கு அங்கீகாரம் பெற்றதாகும். எந்த இமாமிடத்திலும் அமலில்லாத ஹதீதுகள் வருமாறு .

1. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கின்றார்கள்,

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவிலிருக்கும்போது மழையோ, அச்சமோ இல்லாத நிலையிலும் ளுஹரையும், அஸரையும் இன்னும் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.

2. ஹளரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

யாராவது மது அருந்தினால் அவனை சாட்டையால் அடியுங்கள். நான்காவது தடவையும் அவன் மது அருந்தினால் அவனைக் கொன்றுவிடுங்கள்.

இவ்விரு ஹதீதுகளில் உள்ளபடி எவரும் அமல் செய்யவில்லை. தவிர, ஏனைய அனைத்து ஹதீதுகளும் அமலுக்குரியவைதான் என இமாம் திர்மிதி அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு ஹதீது பல ஸஹாபாக்களின் அறிவிப்புக்களில் வரும் பட்சத்தில், அவர்களில் மிகப்பிரபலமானவரின் அறிவிப்பையே பதிவு செய்வார்கள். பின் ஏனைய ஸஹாபாக்களின் பெயர்களையும் கூறுவார்கள். உதாரணமாக, 

அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மல, சல கூடத்திற்குச் சென்றால், யா அல்லாஹ் ஆண், பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்று கூறுவார்கள்.

இந்த ஹதீதைக் குறித்த பின் இமாம் திர்மிதி அவர்கள் இதே ஹதீதை அறிவித்த ஸஹாபாக்களி்ன் பெயர்களை இப்பாடத்தில் அலி, ஸைத்துப்னு அர்கம், ஜாபிர், இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹும் உள்ளிட்டோரும் அறிவித்துள்ளனர். பின் இவர்களின் அறிவிப்பின் தரத்தை இமாம் திர்மிதி குறிப்பிடுவார்கள். இதன்படி மேற்படி ஸஹாபாக்களின் அறிவிப்புக்களின் தரத்தைப் காணும்போது,

அபூ ஈஸா கூறுகின்றார்கள், இப்பாடத்தில் வந்துள்ள அனைத்து ஹதீதுகளிலும் ஹளரத் அனஸ் அவர்களின் ஹதீதுதான் மிகச்சரியானதும் (ஸஹீஹ்) மிக ஆழமானதுமாகும்.

இமாம் திர்மிதி அவர்களின் மேற்கண்ட விளக்கத்தினால் மூன்று பயன்களைப் பெறுகின்றோம்.

01. குறித்த ஒரு பாடத்தில் உள்ள பிரபலமில்லாத ஹதீதுகளையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிட்டுகின்றது.

02. சில நேரம் பிரபல்யமில்லாத ஹதீதுகளைக் குறித்தபின், அதில் உள்ள குறைகளையும் குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக, மேற்கண்ட ஹளரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவின் ஹதீதை குறிப்பிட்ட பின் இப்பாடத்தில், அலி, ஸைதுப்னு அர்கம், ஜாமி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரும் அறிவித்துள்ளனர் என்று குறித்த பின், ஹளரத் ஸைதுப்னு அர்கம் அவர்களின் அறிவிப்பில் இழ்திறாப் குழறுபடி உண்டு என்று குறிப்பிட்டபின் குளறுபடி எப்படி ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

03. பிரபல்யமில்லாத ஹதீதுகளின் கருத்தில் (மதனில்) கூடுதல், குறைவு வருமாயின் அதனையும் குறிப்பிடுவார்கள்.

04. இமாம் திர்மிதி அவர்கள் அறிவிப்பாளர் பட்டியலை முழுமையாகக் குறிப்பிட்ட பின், ஹதீதின் வகைகளில் குறித்த இந்த ஹதீதின் வகையை அதாவது ஸஹீஹ், ஹஸன், ழயீப் என்பவற்றில் எது? என்பதை குறிப்பிடுவார்கள்.

05. ஏதாவது ஒரு ஹதீஸில் இழ்திறாப் குளறுபடி காணப்படின், அக்குளறுபடி கருத்திலா, அல்லது அறிவிப்பாளரிலா என்பதைத் தெளிவுபடுத்துவார்கள். பின் குளறுபடிக்கான காரணத்தையும் கூறுவார்கள். 

06. ஏதாவது ஒரு ஹதீதில் குறைகள் காணப்படின், அதனைத் தெளிவுபடுத்துவார்கள். சிலவேளைகளில் குறைக்கான காரணத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுவார்கள்.

ஒரு ஹதீதின் அறிவிப்பாளர் பட்டியல் (முன்கதிஃ) இடையில் விடுபட்டிருந்தால் அதனைக் குறிப்பிட்டு, விடுபட்டது எப்படி என்பதைத் தெளிவுபடுத்துவார்கள்.

உதாரணமாக, எமக்கு அலி இப்னு ஹுஜ்ஜும் அவர்கள் இஸ்மாயில் இப்னு இப்றாஹீமைத் தொட்டும் லைதைத் தொட்டும், அப்துல்லாஹ் இப்னு ஹுஸைனைத் தொட்டும், அவர் தாயாகிய பாத்திமாவினது ஹுஸைனைத் தொட்டும் இவர் அவ்விருவரின் பாட்டியாகிய பாத்திமத்துல் குப்றாவைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். பாத்திமா நாயகி கூறுகின்றார்கள்.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தால் முஹம்மத் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெயரில் ஸலவாத்துக் கூறுவார்கள். பின், இறைவா! எனது குற்றத்தை மன்னிப்பாயாக! உனது றஹ்மத்தின் வாசல்களை எனக்குத் திறப்பாயாக! என்று கூறுவார்கள்.

இந்த ஹதீதை கூறிய பின், இமாம் திர்மிதி கூறுகின்றார்கள். பாத்திமாவின் ஹதீது ஹஸன் ஆகும். ஆனால், முத்தஸில் அன்று (இதன் அறிவிப்பாளர் தொடர் நபியவர்கள் வரை சேரவில்லை) காரணம் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹுவி்ன் மகள் பாத்திமா என்பவர் பாத்திமத்துல் குப்றா என்ற நபிகள் திலகத்தின் மகள் பாத்திமாவை காணவில்லை. பாத்திமா நாயகி அவர்கள் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின் குறுகிய காலம் உயிர் வாழ்ந்தார்கள். அவர்கள் வபாத்தாகும்போது ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் சிறுவர்களாக இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை