*ஈமானியக்* *கோட்பாட்டின்* *எதார்த்தம்*!



*ஈமானியக்* *கோட்பாட்டின்* *எதார்த்தம்*! 

கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள்

ஈமான் என்பது அம்னு என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். பாதுகாப்பு என்பது இதன் அகராதிப் பொருள். ஷரீஅத்தில் நம்பிக்கை சார்ந்த குறிப்பிட்ட சில கோட்பாட்டு வி்டயங்களை விசுவாசிப்பதைக் குறிக்கின்றது. இக்கோட்பாட்டை ஏற்கும் ஒருவர் நரகத்தின் கொடிய தண்டனையிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்.

ஒரு தினம் வானவர் திருத்தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் விடைபகர்ந்தார்கள்.

அதில் ஈமான் என்றால் என்ன? என்ற கேள்விக்கு,

அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், றஸூல்மார்களையும், இறுதி நாளையும் நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் விதிப்படி நடக்கும் என்றும் நம்புவது என்று விடை பகர்ந்தார்கள்.

மேற்படி ஹதீஸி்ல் கூறப்பட்டுள்ள ஆறு விடயங்களையும் மனதால் ஏற்று நாவினால் விண்ணப்பிப்பதை ஈமான் என்று கூறப்படும். 

ஈமான் இரு வகைப்படும்.

 ஈமான் முஜ்மல், ஈமான் முபஸ்ஸல் மேற்கண்ட ஆறு விடயங்களையும் சுருக்கமாக விளங்கி நம்புவதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய அனைத்திலும் அன்னாரை உண்மைப்படுத்தி வைப்பதையும் குறிக்கும்.

ஈமான் முபஸ்ஸல் என்பது, மேற்கண்டவைகளை ஆதாரத்துடன் விளக்கமாக அறிந்து கொள்வதாகும்.

ஈமானி்ன் அடிப்படைகளைப் பற்றி அல்குர்ஆன் பி்ன்வருமாறு கூறுகின்றது,

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனுடைய தூதரைக் கொண்டும், அவன் தன்னுடைய (இத்) தூதர் மீது அருளிய இவ்வேதத்தைக் கொண்டும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களைக் கொண்டும், ஈமான் கொள்ளுங்கள். (அதில் நிலைத்து நில்லுங்கள்) அவன் அல்லாஹ்வைக் கொண்டும், அவனுடைய மலக்குகளைக் கொண்டும், அவனுடைய வேதங்களைக் கொண்டும், அவனுடைய தூதர்களைக் கொண்டும், இறுதி நாளைக் கொண்டும் நிராகரிக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் செல்கின்றான். 

(அல்குர்ஆன் - 4 : 136)

ஈமான் என்ற சொல் பின்வரும் முக்கிய விடயங்ளை உள்ளடக்கி இருக்கின்றது.

01. ஓர் அடியான் தனது அனைத்து விடயங்களிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நீதிபதியாகவும், தீர்ப்பாளராகவும், தலைவராகவும் ஏற்க வேண்டும்.

02. ஒரு முஃமின் தனது உயிர், உடமை, பிள்ளைகள் அனைத்தும் நபிகள் நாயகத்திற்கே சொந்தம் என்று நம்ப வேண்டும்.

03. படைப்புக்கள் யாவற்றிலும் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும், கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் என்றும் மனதால் ஏற்பதோடு செயலிலும் காட்ட வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விடயத்தைப்  பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விடயத்தில் (அதற்கு மாறாகவேறு) அபிப்பிராயங்கள் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.

(அல்குர்ஆன் -  33 : 36) 

ஆனால், உம் இறைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனத்தில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து, முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள்.

(அல்குர்ஆன் -  4 : 65)

விசுவாசிகளுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிகப் பிரதானமானவர். அவர்களுடைய மனைவிமார்கள் அவர்களுடைய தாய்மார்களாவார்கள்.

(அல்குர்ஆன் - 33 : 06)

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களில் அதிகமானவர்கள் யூதர்களாகவே இருந்தனர். இவர்கள் அல்லாஹ்வைப் பற்றியும், மலக்குகள், வேதங்கள், நபிமார்கள், மறுமை, விதி உள்ளிட்ட அனைத்தையும் நம்பியிருந்தனர். ஆயினும், ஈமானின் வேராகிய வேந்தர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றிய நல்லெண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. அதனால், அவர்களை அல்லாஹுத்தஆலா காபிர்கள் என்றே தீர்ப்புச் செய்கின்றான்.

(நபியே!) அல்லாஹ்வையும், இறுதி நாளையும், விசுவாசம் கொண்டிருக்கிறோம் எனக் கூறுவோறும் மனிதர்களில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் விசுவாசம் கொண்டவர்கள் அன்று. 

(திருக்குர்ஆன் - 02 : 08)

உங்களிடம் முனாபிகுகள் வந்தால், நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று (நய வஞ்சகத்தனமாக) கூறுகின்றனர். நீஙகள் அவனின் (அல்லாஹ்வின்) திருத்தூதர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் நிச்சயமாக முனாபிகுகள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். 

(அல்குர்ஆன் - 63 : 01)

மனதில் மரியாதையும், உண்மையான அன்பும் இல்லாமல் உதட்டளவில் மொழியும் விசுவாசம் உண்மையான ஈமானாகாது என்பதையும், ஈமானி்ன் உண்மையான அச்சானி நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தலைவராக ஏற்று விசுவாசிப்பதுதான் என்பதையும் மேற்படி திருவசனம் தெளிவாகக் கூறுகின்றது.

ஈமானின் பலத்தை தெரிந்திட மூன்று அடையாளங்கள் உள்ளன.

01. இறைவனையும் அவனது திருத்தூதரையும் எல்லாவற்றையும்விட அதிகம் நேசிப்பது.

02. ஏனைய முஸ்லிம்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே விரும்புவது, அன்பு செலுத்துவது.

03. ஒருவர் தான் தீயில் எடுத்து எறியப்பட்டால் எந்தளவுக்கு அதை எதிர்ப்பாரோ அந்தளவிற்கு, தான் இறை மறுப்பிற்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டால் எதிர்த்து நிற்பார்.

உண்மையான முஃமினைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு அடையாளப்படுத்திக் காட்டுகின்றது.

மெய்யான விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வுடைய திருநாமம் (அவர்கள் முன்னால்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அவனுடைய திருவசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய நம்பிக்கை இன்னும் வலுப்பெறும். அவர்கள், தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பி இருப்பார்கள்.

அவர்கள் தொழுகையையும் கடைப்பிடித்து தொழுவார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து செலவு செய்வார்கள்.

இத்தகையோர் தாம் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும், மன்னிப்பும் உண்டு அன்றி கண்ணியமான ஆகாரமும் உண்டு.

(அல்குர்ஆன் - 08 : 02 - 04)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் தாம் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்தும், ஸகாத் கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடப்பார்கள். இத்தகையோருக்கு அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடையோனுமாய் இருக்கி்ன்றான்.

(அல்குர்ஆன் - 07 : 71)

(உண்மையான) நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூதரையும் மெய்யாகவே விசுவாசங்கொண்டு பின்னர், எந்த விதமான சந்தேகமும் கொள்ளாது அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உயிர்களையும், பொருள்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிபவர்கள். இத்தகையோர் தாம் (விசுவாசத்தில்) உண்மையுள்ளவர்கள். 

(அல்குர்ஆன் - 49 : 15)

ஈமான் எழுபதுக்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது என்று கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவற்றில் மேலானது லா இலாஹ இல்லல்லாஹ் என்றும், அதில் தாழ்ந்தது மனிதனுக்குத் தீங்கு செய்யும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது என்றும் கூறினார்கள்.

நற்காரியங்கள் புரிவதால் ஈமான் அதிகரிக்கும். பாவமான காரியங்களால் ஈமான் குன்றிவிடும். ஆதலால், வெறும் நம்பிக்கை மட்டும் ஒருவனை அல்லாஹ்விடத்தில் உயர்த்திவிடாது.

நல்லமல்கள் ஈமானி்ன் அடிப்படையைச் சாராவிட்டாலும், ஈமானின் முழுமைக்கும், வளர்ச்சிக்கும். வெற்றிக்கும் நல்லமல்கள் புரிவது அவசியமாகும்.

ஈமான் என்பது நம்பி்க்கையோடு மட்டும் தொடர்பானது. ஆதலால் அமல் செய்யாமல் விடுவது ஈமானின் அடிப்படையை இழக்கச் செய்யாது. கடுகளவு ஈமான் உள்ளவர் தண்டனை பெற்றபின் சுவர்க்கம் செல்வார்.






 


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை