*மண்ணறையின் மர்மங்கள்.*
*மண்ணறையின் மர்மங்கள்.*
கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில் ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி
மெய்யாகவே எவர்கள் விசுவாசம் கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும் சரி, இம்மை வாழ்விலும் சரி (கலிமா தையிப் என்னும்) மெய்யான இந்த வாக்கியத்தின் பொருட்டால் அல்லாஹ் அவர்களை ஸ்திரப்படுத்துகின்றான்.
(அல்குர்ஆன் - 14 : 27)
மேற்கண்ட திருவசனம் கப்றின் வேதனை தொடர்பாக இறங்கியது. இங்கு முக்கியமாக சில விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
1. கப்று வேதனை யாருக்கு உண்டு. அதன் யதார்த்தம் யாது?
2. கப்றின் விசாரணை எவ்விதம் நடக்கும்?
3.இதிலிருந்து பெறப்படும் நன்மைகள் எவை?
1. கப்றின் விசாரணை வேறு, கப்றின் தண்டனை என்பது வேறு. விசாரணை யாவருக்குமில்லை. தண்டனையும் அனைவருக்கும் கிடையாது. கப்றின் விசாரணை எட்டு தரப்பாருக்கு இருப்பதில்லை.
1. நபிமார்கள்
2. ஷுஹதாக்கள்
3. யுத்தத்திற்கு தன்னைத் தயார் செய்பவர்
4.குழந்தைகள்
5.ஜும்ஆ தினத்தில் மரணிப்பவர்
6. ஜும்ஆ இரவில் மரணிப்பவர்
7. மரணத்தின் நினைவில் சதா இருப்பவர்
8. தினமும் சூறத்துல் முல்க் ஓதுபவர்
ஆதாரம் : றத்துல் முக்தா (கிதாபுத்தபன்)
கப்றின் தண்டனையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. முஷ்ரிக்கீன்கள், காபிர்கள் உள்ளிட்டோருக்கு கப்று விசாரணை கிடையாது. அவர்களுக்கான தண்டனை தனியானது. குற்றம் புரிந்த முஸ்லிம்களில் சிறுநீர் சுத்தம் சரியாக செய்யாதோர், கோள், புறம் பேசித் திரிந்தோர் போன்றோருக்கு ஒரு வகையான தண்டனை உண்டு. சிலவேளை பயபக்தியுள்ள தக்வாதாரிக்கும் கப்றின் நெருக்கம், தனிமையின் விரக்தி போன்றவைகள் ஏற்படுவதுண்டு. இவை கப்றின் தண்டனை இல்லை.
ஹதீது ஷரீபில் வந்துள்ளது,
ஒரு தினம் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வழியால் கழுதையில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். கழுதை இரு கால்களையும் உயர்த்தி நின்றது. இங்கு இரு கப்றுகள் உள்ளன. இவ்விரு கப்றுவாசிகளுக்கும் வேதனை செய்யப்படுகின்றன என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த வேதனையைக் கண்டே கழுதை வெருண்டது. இவர்களில் ஒருவர் கோள் கூறித் திரிந்தவர், மற்றவர் சிறுநீரை முறையாக சுத்தம் செய்யாதிருந்தவர். அருகிலிருந்த பேரீத்தம் மட்டையை இரண்டாகக் கிழித்து இரு கப்றிலும் நட்டார்கள். இவ்விரு மட்டையில் பச்சை இருக்கும்வரை அவை தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கும். அதன் பறக்கத்தால் இவர்களி்ன் கப்று வேதனை குறையும் என்று கோமான் நபியவர்கள் விளக்கம் பகர்ந்தார்கள்.
பசுமையான ஒவ்வொன்றும் தஸ்பீஹ் செய்கின்றன. அதன் பறக்கத்தால் கப்றின் வேதனை இலகுவாகின்றது என்ற காரணத்தினால்தான் கப்றில் பச்சைக் கொத்துக்கள் நாட்டப்படுகி்ன்றன. மலர்கள் தூவப்படுகி்ன்றன. மலர்களினால் கப்று வேதனையும் குறைகின்றது. அதன் மணத்தினால் மையித்தின் றூஹும், ஸியாரத் செய்வோரும் அங்கு பிரசன்னமாக இருக்கும் மலக்குகளும் நன்மை பெறுகின்றனர். இதனால்தான் மையித்தின் கபனில் மணம் பூசப்படுகின்றது.
இதிலிருந்து மரணத்தின் பின் சில உணர்வுகள் நிலைத்து நிற்கின்றன. மைய்யித், நறுமணம், துர்மணம் ஆகியவற்றை பிரித்துப் பார்க்கின்றது. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருக்கரம் பற்றிய பச்சை மட்டையை கப்றில் நட்டதனால்தான் கப்று வேதனை குறைந்தது என்று சிலர் கூறுவது பொருத்தமானது அல்ல. கப்றி்ல் தண்டனை குறைவது முஃமினுக்குத்தான் தவிர காபிருக்கு அல்ல. காபிரின் கப்றடியில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தாலும் எதுவித பயனும் கிட்டப்போவதில்லை.
கப்று நல்லவர்களையும் நெருக்கும், அணைக்கும். பூனை தன் குட்டியை கௌவிச் செல்கின்றது. எலியையும் கௌவிச் செல்கின்றது. இரண்டின் பிடியி்ன் தன்மை ஒன்றுபோல் அமைவதில்லை. ஹளரத் ஸஃது இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தானபோது அல்லாஹ்வின் அர்ஷ் ஆடியது. இப்படிப்பட்டவரின் கப்று அவரை நெருக்கியது. இதனால் கப்றின் நெருக்கம் வெருட்சி என்று மாதிரி இலலை. பலவிதமாக உள்ளது. நன்கு கவனித்தால் இதனை மூன்று விதத்தில் அடக்கலாம்.
1. காபிர்களின் நெருக்கம்
2. பாவிகளின் நெருக்கம்
3. நல்லடியார்களின் நெருக்கம்
கப்றின் வேதனை என்று குறிப்பிடும்போது கப்று என்பதற்கு புதைகுழி என்று பொருள் கொள்ளக்கூடாது. கப்று என்பது பர்ஸஹ் என்ற உலகத்தைக் குறிக்கும். அதாவது இவ்வுலகத்திற்கும், மறுமைக்கும் இடைப்பட்ட உலகம். மைய்யித் அடக்கப்பட்டாலும் சரி அல்லது, எரிந்து சாம்பலானாலும் சரி. விலங்குகள் புசித்தாலும் சரி, அவன் அசல் பாகம் எங்கிருக்கின்றதோ அங்கு அதில் றூஹு கொடுக்கப்படும். அது எவ்விடமாகவும் இருக்கலாம். அதுவே அதற்கு கப்றாகும். அங்கு விசாரணையும், வேதனையும் நடக்கும். இதில் எதுவித சிக்கலும் கிடையாது.
தாயின் கற்பத்தில் மலக்குகள் உட்சென்று அதன் விதியை எழுதுகி்ன்றனர். தாய் அதனைப் புரிகின்றாளா? வசதிப்படி தூங்குகின்றது அல்லது கெட்டதுகளை காண்கின்றது. தாய் அதனை உணர்வதில்லை. அது போன்றே இங்கும் உள்ளது.
ஆதாரம் - அஷிஃஅத்துல்லம் ஆத்
03. அடக்கம் செய்யப்பட்டதன் பின் மைய்யித் மனிதர்களின் காலடி ஓசையை செவியேற்கின்றது. ஆயின் மரணத்தின் பின் புலன்கள் அனைத்தும் பாரிய அபிவிருத்தியைப் பெறுகின்றன. கப்றின் ஆழ் குழியிலிருக்கும் மைய்யித்தின் செவிப்பறை மெல்லிய ஓசையையும் செவியேற்கின்றன என்றால் அதன் முன்னேற்றத்தை சிந்திக்க வேண்டும். ஸியாரத் செய்வோரையும் பார்க்கின்றது. அவர்களின் துஆக்களையும் எதிர்பார்க்கின்றது.
மைய்யித்தை கப்றில் வைத்து அடக்கப்பட்ட பின் முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அங்கே வருவார்கள். அவர்களின் முகம் கறுப்பாக இருக்கும். கண் நீலமாக இருக்கும். பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும். இவர்கள் முக்கியமாக மூன்று கேள்விகளைக் கேட்பார்கள்.
1. உமது தீன் - மார்க்கம் யாது?
2. உமது றப்பு யார்?
3. இதோ இங்கு நிற்பவர் பற்றி உமது நம்பிக்கை என்ன?
விடை சரியாக வழங்கப்பட்டால், நீர் இப்படிக் கூறுவீர் என்பதை ஏலவே நாம் அறிவோம் என்று கூறுவர். மைய்யித், காபிர் அல்லது முனாபிக்காக இருப்பின் ஏதும் அறியாதவர்கள் போல் திரு திருவென முழிப்பார்கள். அவர்களுக்கும் முன்கூறியது போன்றே கூறுவர். இது மிகவும் கடினமான சோதனையாகும். இதனைப் பற்றிய முழு விளக்கமும் உலகத்தில் வைத்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
04. இதில் சில பிரயோசனங்கள் உள்ளன. முதலில் தீன் பற்றிய கேள்வியிலேயே றிஸாலத்தும் அடங்கியுள்ளது. மார்க்க விடயம் அனைத்தையும் உள்ளடக்கியதற்குத்தான் தீன் என்று கூறப்படும். அப்படியிருக்க மிகத்தெளிவாகவே பெருமானாரைப் பற்றி கேட்கப்பட்டுள்ளது. துணைக் கேள்வியாக அல்ல முக்கியமான கேள்வியாகவே கேட்கப்பட்டுள்ளது. முடிவான கேள்வி பெருமானாரின் அறிமுகம் பற்றியதாக இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
02. பெருமானாரை நேரில் காணாதவர்களும் ஈமான் மூலம் அறிமுகமாகின்றனர். முன்பின் அறிமுகமில்லாத உறவினர் ஏதோ ஒரு இடத்தில் சந்திக்கும்போது இரத்த பந்த பாசத்தினால் மனம் ஏதோ ஒரு வகையில் பரீட்சயமாகி விடுவதுண்டு. அதுபோல் முஃமினின் மனம் ஈமான் மூலம் பெருமானாரின் பக்கம் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
03. உலகில் தினமும் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கின்றனர். அத்தனை பேருக்கும் கப்று விசாரணை உண்டு. அவர்கள் யாவரிடமும் பெருமானாரைப் பற்றி விசாரிக்கப்படுகின்றது.
பெருமானாரை முன் நிறுத்தி இவரைப் பற்றிய உமது நம்பிக்கை என்ன? என்றே கேட்கப்படுகின்றது என்றால் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் தரிசனம் வழங்குகின்றார்கள் என்பது உறுதியாகின்றது. சூரியனைப் போன்று எங்கும் நிறைந்திருப்பதால் எல்லாரும் சூரியனை பக்கத்திலிருப்பது போன்று பார்க்கி்ன்றனர்.
4. மைய்யித் மலக்குகளின் கேள்விக்கு பதில் கூறியதும், நீர் இவ்வாறு கூறுவீர் என்பதை ஏலவே நாம் அறிந்துள்ளோம் என்று மலக்குகள் கூறியதானது, கேள்வியும், விடையும் அல்லாஹ்வோ, மலக்குகளோ தெரிந்து கொள்வதற்காக அல்ல. அல்லாஹ் ஹகீம் - அலீம், அவன் நுண்ணறிவாளன், மலக்குகளும் இவர் பதில் கூறமுன்பே விடையை தெரிந்துள்ளார்கள்.ஆயின், காரணமின்றி தண்டிக்கப்படவில்லை என்பதை மைய்யித் விளங்க வேண்டும் என்பதற்காகவே விசாரணை நடக்கின்றது.
05. சீதேவித்தனமும், மூதேவித்தனமும், நல்ல முடிவும் தீய முடிவும் மறைவான ஐந்து விடயத்துள் அடங்குகின்றன. இவை பற்றிய அறிவு முன்கர், நகீர் ஆகிய இருவருக்கும் உண்டு. தாயின் கர்ப்பத்தில் விதி எழுதும் மலக்கு அனைத்தையும் அறிந்தவராக உள்ளார். நடந்தவைகள், நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் அவர் அறிவர்.
முஸ்லிமான கணவனுடன் மோதுகின்ற மனைவியைப் பார்த்து சொர்க்கத்திலிருக்கும் ஹுறுல்ஈன்கள். பெண்ணே! இவர் உங்களது விருந்தாளி. எங்களிடம் வர இருப்பவர். அவருக்கு எதுவித சங்கடத்தையும் வழங்க வேண்டாம் என்று கூறுவார்கள். இதிலிருந்து ஒருவரின் இறுதி முடிவு நல்லதாகவே முடியும் என்பதையும் ,அவர் சொர்க்கம் புகுவார். தன்னிடமே ஒப்படைக்கப்படுவார் என்பதையும் ஹுறுல்ஈன்கள் அறிகின்றனர். தவிர வீட்டுச் சண்டை சொர்க்கத்திலிருக்கும் ஹுறுல்ஈன்களுக்கும் எடுத்துக் காட்டப்படுகின்றன எனின், இம்மறைவான செய்தி நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கும் தெரிந்திருப்பதில் என்ன குற்றம் வந்து விடுகின்றது?
ஹளரத் ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு அன்ஹு அன்னை ஆயிஷா ஸித்தீகா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உங்களுடைய தாயார் கர்ப்பவதியாக உள்ளார். பெண் குழந்தையையே பெற்றெடுப்பார். எனது சொத்துக்களை முறையாக பங்கீடு செய்யவும் என்று வஸிய்யத் செய்தார்கள்.
ஆதாரம் : முஅத்தா
ஸஹாபாக்கள் தாரகை போன்றவர்கள் என்றால் நபியவர்கள் கதிரவன்தானே! அப்படியாயின் ஸித்தீக்குல் அக்பர் என்ற தாரகைக்கு வயிற்றிலிருப்பது ஆணா?பெண்ணா? என்று பார்க்கும் திறன் இருந்தால் கதிரவனின் சுடரின் விசாலம் எப்படி இருக்கும்?
06. கப்றில் அதான் சொல்லல், குர்ஆன் ஓதல், திக்று செய்தல், தல்கீன் கூறுதல் உள்ளிட்டவைகள் அமைதியிழந்த மனதை அமைதி பெறச் செய்யும் தனிமை விலகும், விரக்தி நீங்கும், ஷைத்தான் விரண்டோடுவான். கப்றில் ஷைத்தானின் தீங்கும் உண்டு. விசாரணைகள் கடுமையாக இருக்கும். இப்படியான கட்டத்தில் அதான் கூறுவது மிக்க பயன்தரும்.
புனித ஸம்ஸம் நீரால் கழுவிய துணியால் கபன் செய்யப்பட்டால் கப்று வேதனை குறையும், அமீர் ஹளரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் திருமுடி, புனித நகம் போன்றவைகளை தங்களது கபனில் சேர்க்குமாறு வேண்டினார்கள். நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருமகளார் சைய்யிதா ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வபாத்தானபோது தங்களின் சாரனை கபனாக அணிவித்தார்கள். அதனை உடல படும்படி கபனிடுமாறு குளிபாட்டியவர்களிடம் ஆலோசனை கூறினார்கள்.
இதன் மூலம் நல்லோர்,வலிமார்கள் போன்றோரின் தபர்ருகாத்துக்களை கபனாக அணிவிப்பது நல்லது என்பது இதன் மூலப்பெறும் கருத்தாகும். நல்லடக்கத்தின் பின் வரைவாக வீடு திரும்பாமல் சற்று நேரம் அங்கு நிற்பதும் நல்லோர் செய்திகளைப் பேசுவதும், மைய்யித்திற்காக இஸ்திஃபார் செய்வதும் மைய்யித்திற்கு ஆறுதல் தரும் விடயங்களாகும். இதனால், அவர்கள் உற்சாகம் பெற்று மலக்குகளின் விசாரணைகளுக்கு தயக்கமில்லாமல் பதில் கூறுவார்கள்.
ஆகவே, வழிகேடர்களின் விதண்டா வாதங்களை புறந்தள்ளிவிட்டு நற்காரியங்களைச் செய்வது மைய்யித்திற்கு நாம் செய்யும் சி்றந்த கைமாறாகும்.
Comments
Post a Comment