*கெட்ட உறவு* *நட்டத்தில் போய் முடியும்!*

*கெட்ட உறவு* *நட்டத்தில் போய் முடியும்!*

கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில்                          ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

அநியாயக்காரர்களுடன் உறவாடி உட்கார வேண்டாம்.

சிறு வார்த்தைக்குள் விரிந்த, ஆழ்ந்த விளக்கத்தைக் கொடுப்பது திருக்குர்ஆனின் அற்புதத்தில் ஒன்று. மேற்படி  திருவசனமும் இந்த வகையைச் சேர்ந்ததாகும். இதன் ஒவ்வொரு வார்த்தையும் விரிந்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை இத்திருவசனம் தன்னுள் பொதிந்து நிற்கின்றது. ஈமான் கிரிகை (அமல்)கள் போன்று குப்று, பயங்கரவாதம் உள்ளிட்ட விடயங்களையும் இத்திருவசனத்தின் மூலம் நோக்கப்பட வேண்டியவைகளாகும்.

குப்றும், பயங்கரவாதமும் தீய செயல்களின் அச்சாணிகளாகும். அநியாயக்காரர்களுடன் உறவாடி உட்கார வேண்டாம் என்பதில் உறவாடல் ஏனைய தொழுகை, நோன்பு உள்ளிட்ட கிரிகைகளினால் கிட்டும் தாக்கத்தை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல்மிக்கவை என்பது புலனாகின்றது. இதனை பின்வருமாறு ஆராயலாம்.

நோன்பு ஒருவனை நோன்பாளியாக்கும், தொழுகை தொழுகையாளியாக்கும், ஹஜ் - ஹாஜியாக்கும், ஜிஹாத் - போராளியாக்கும். இவற்றுள் எந்த ஒரு அமலும் ஒருவரை ஸஹாபியாக்காது.

ஆத்மீகத்தீன் உச்சியைத்தொட்ட குத்பு, கௌது வலி போன்ற எவரும் ஒரு ஸஹாபி ஆக முடியாது. ஒருவர் ஸஹாபி ஆவதற்கு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை ஈமானுடன் நேர்முகம் கண்டிருத்தல் வேண்டும். ஒரு ஸஹாபியின் உறவில் இருந்தவர் தாபிஈ ஆவார். தாபியின் உறவில் இருந்தவர் தபஉத்தாபிஈ ஆவார். இதுபோன்று ஸுபி, ஆலிம் உள்ளிட்டோரும் உறவின் மூலமே இந்நிலையை அடைந்து கொள்கின்றனர். அதனால் உறவின் உயர்வை இபாதத்தால் பெறமுடியாது.

இவ்வாறு குப்று, நிபாக், நயவஞ்சகம், முர்தத் உள்ளிட்டவைகளிலும் உறவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தீய செயல்கள் குப்றியத்தாக இல்லாவிட்டாலும், அதன் உறவாடல்கள் குப்ரியத்தை தோற்றுவிக்கும் அச்சாணியாக விளங்குகின்றன.

நல்லமல்கள் செய்பவர்கள் மனிதனும், ஜின்னும் ஆகும். இதன் பயனை அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். தாவரம், மிருகம், மலைகள் தொழுவதில்லை, ஹஜ் செய்வதில்லை, ஸகாத் கொடுப்பதில்லை. அவைகள் செய்யும் தஸ்பீஹ்கள் அலாதியானவை. இவற்றிற்கெல்லாம் கூலிகள் வழங்கப்படுவதில்லை. செய்யும் வணக்கத்திற்கு கூலியைப் பெறுபவன் மனிதன் மட்டும்தான். அதனால் அவனுக்குத்தான் சொர்க்கம் உரிமையாகின்றது.

ஆனால், உறவின் பலனும், பாதிப்பும் படைப்புக்கள் அனைத்தையும் சாருகின்றன. அதனால், உறவின் பாதிப்பு பொதுமையாக இருப்பதை உணர முடிகின்றது.

இறை தண்டனை இறங்கிய இடங்களில் தங்குவது, தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொருட்களை பாவிப்பதும் கூட தடுக்கப்பட்டுள்ளது. ஒரு தினம் இறை சீற்றத்தால் தண்டிக்கப்பட்ட தமூது கூட்டத்தினர் வாழ்ந்த பகுதியிலிருந்த ஒரு கிணற்று நீரால் ஸஹாபாக்கள் மாவை பிசைந்தனர். அந்த நீரால் குழைத்த மாவை தூர வீசிவிடுமாறு நபியவர்கள் ஆணையிட்டார்கள். தீயவர்கள் தொடர்பால் அப்பகுதி மண்ணும் மாசடைந்து விட்டதையே இது குறிக்கின்றது.

மினாவின் எல்லையில் உள்ள வெளியில்தான் ஆப்ரஹாவின் யானைப் படை அழிக்கப்பட்டது. இந்த இடத்தை அடைந்தால் வேகமாக அதனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

சிலைகள் உள்ள ஆலயங்கள், மல, சல கூடங்கள், மதுபானத் தவறனைகள், கடைத்தெருக்கள், கால் நடைகள் கட்டப்படும் தொழுவங்கள் உள்ளிட்ட இடங்களில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. காரணம் தகாதவர்களின் உறவுடன் ஒட்டிய பூமி தொழுவதற்கு பொருத்தமற்றது. தீயோர் உறவின் பாதிப்பின் பலன்தான் இவை!

புனித மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா ஆகிய புண்ணிய தலங்கள் ஏனைய இடங்களை விட பாக்கியமிக்க வைகளாகும். பூமான் நபியின் சந்தன மேனியைத் தொட்டு நிற்கும் புனித மண் அல்லாஹ்வின் அர்ஷை விடவும் உயர்ந்தது. கோமான் நபியின் திருமேனிபட்டதன் உயர்வு இது.

மாபெரும் தவ ஞானியான துன்னூன் மிஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹஜ்ஜுக்குச் செல்லும் வழியில் காதிஸியா பெருவெளியைக் கடந்து சென்றார்கள். இஸ்லாமிய வரலாற்றில் காதிஸியா என்ற இடம் முக்கியமான ஓர் இடமாகும். இங்கு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையில் உக்கிர மோதல் நடந்தது. இதில் பல்லாயிரக் கணக்கான ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள். இச்சமரை காதிஸியா யுத்தம் என்று அழைப்பர்.

ஹளரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் திடீரென ஒட்டகத்திலிருந்து குதித்து மண்ணில் புரண்டார்கள். வெயிலின் அகோரத்தினால்தான், ஹளரத்தவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று நினைத்த ஏனையவர்கள், ஓடோடி வந்து முகத்திலும், மேனியிலும் நீரைத் தெளித்தனர். 

பயணத் தோழர்களைப் பார்த்து, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்க, தாங்கள் வெயிலின் கடுமையால் சுருண்டுவிட்டீர்கள், நீராடி குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றோம் என்றனர்.

ஹளரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள்.

சூட்டின் கடுமையால் மணலில் நான் சுருண்டு விடவில்லை. இந்த இடத்தில் ஹளரத் தளபதி காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு தலைமையில் ஒரு பாரிய யுத்தம் நடந்தது. அவர்களின் குதிரை இந்த மண்ணில் குதித்து பாய்ந்து சமர் செய்தது. அப்போது அந்த குதிரையின் காலின் குரையிலிருந்து ஒருவிதமான பிரகாசம் வெளியானது. அது இதுவரை பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.

இந்த மண்ணில் மின்னும் அந்த பிரகாசம் தன்னிலும் படட்டும் என்று என் சிரசை, வதனத்தை, நயனத்தை, மேனியை மண்ணில் புரட்டுகின்றேன் என்றார்கள். நல்லவர், தீயவர் உறவின் பாதிப்பு என்றும் நீங்காமல் நிற்கும் என்பதற்கு மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் சான்றாகின்றன.

நல்ல உறவினால் தீயதும் நல்லதாகலாம். அதுபோன்று, தீய உறவால் நல்லதும் தீயதாகலாம். கன்ஆன் நூஹ் நபியின் மகன், நபியின் குடும்பத்தில் ஒருவன். தீயோர் உறவில் ஊடாடி காபிரானான். அவனிடம் நல்ல செயல் இல்லை. அதனால் அவன் உமது குடும்பத்தினன் இல்லை. என்று அல்லாஹ் அவன் விடயமாகக் கூறியுள்ளான்.

குகைவாசிகளாகிய நல்லவர்களின் உறவில் தங்கியிருந்த கித்மீர் என்ற நாய் கண்ணியம் பெற்றது. சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றது. தொழுகையிலும் அதன் பெயர் உச்சரிக்கும் பாக்கியத்தை திருக்குர்ஆனில் அதன் பெயர் இடம் பெற்றதனால் பெற்றுக்கொண்டது.

சில மிருகங்கள் மனித கோலத்தில் சொர்க்கம் செல்லும், அவை பின்வருமாறு, குகைவாசிகளின் நாய், ஹளரத் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒட்டகம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (சுவைத்த) மாமிசம், ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் கஸ்வா என்ற ஒட்டகம்.

உறவுகள் பல விதங்களில் உள்ளன.

1. உடலின் உறவு

2. றூஹின் உறவு

3. ஈமானின் உறவு

4. இர்பானின் உறவு

5. கல்பின் உறவு

மேற்கண்ட திருவசனம் மேற்படி அனைத்து வகையான உறவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஒருவர் ஈமானுடன் உடல்ரீதியாக ரஸுலுல்லாஹ்வைக் கண்டால் அவர் ஸஹாபி ஆகின்றார். இதுபோன்றே தாபிஈ, தபஉத் தாபிஈ, இது உடல் ரீதியாக ஏற்பட்ட உறவுக்கான உதாரணமாகும். இந்த உறவு றூஹின் மூலம் ஏற்பட மாட்டாது. முடியுமாகியிருந்திருந்தால் முஃமின்கள் அனைவரும் ஸஹாபியாக, தாபிஈயாக ஆகியிருப்பர்.

றூஹானி நெருக்கம் எல்லா விதமான நெருக்கத்தாலும், அனைத்து வகையான உறவாலும் ஏற்படும். நபி லூத் அலைஹிஸ்ஸலாமின் மனைவி இறை தண்டனை இறங்கும்போது பிரளயம் ஏற்பட்ட ஸதூம் என்ற கிராமத்திலிருந்து நபி லூத் அலைஹிஸ்ஸலாமுடன் வெளியேறி விட்டாள். ஆயினும் அவள் மனம் பாவிகளின் பக்கமே நெருக்கமாக இருந்தது. அதனால் வழியில் அழிக்கப்பட்டாள். இது றூஹானி உறவாலும் கல்பின் நெருக்கத்தாலும் விளைந்த வினையாகும்.

ஹளரத் உவைஸுல் கர்னி ரழியல்லாஹு அன்ஹு உடலால் தூரத்திலும், இதயத்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கு நெருக்கமாகவும் இருந்தார்கள். அதனால், யமனில் உள்ள கர்னு என்ற இடத்திலிருந்து கொண்டே மதீனா தைய்யிபாவிலிருந்து பைழை அருளைப் பெற்றுக் கொண்டேயிருந்தார்கள்.

கதிரவன், பல மில்லியன் மைல்களுக்கப்பாலிருந்து கொண்டு புவியில் உள்ள அழுக்குகளை சுட்டெரித்து சுத்தப்படுத்துகின்றது. அதுபோன்று மதீனத்து மகா சூரியன் பிரபஞ்சத்தின் பாவக் கறைகளை சுட்டெரிக்கின்றது. இதுவும் உறவின் பலன்தான்.

அபூஜஹ்ல் யமனில் உள்ள தனது ஆத்ம நண்பர் ஹபீப் என்பவரைத் தொடர்புகொண்டு மக்கத்து நிலைமையை விளக்கி தூது அனுப்பினான்.

மக்காவில் ஒரு புது மதம் அறிமுகமாகியுள்ளது. அது வேகமாக பரவிக் கொண்டேயிருக்கின்றது. தன்னை நபி என்று கூறும் ஒருவர் மூலமாகவேதான் இம்மதம் பரவுகின்றது. நிறுத்துவதற்கு எம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். முடியவில்லை. நீங்கள் அவசியம் அவசரமாக மக்கா வந்து, அப்புதிய மார்க்கத்தை நிறுத்த உதவ வேண்டும்! தவறினால், நமது பாரம்பரியமான மார்க்கம் அழிந்துவிடும் ஆபத்துள்ளது! மக்காவாசிகள் உங்கள் மீது நல்ல அபிமானம் வைத்துள்ளனர். உங்கள் முடிவை ஏற்பர். அதனால் தாமதியாது உடன் வருகை தரவும் என்று அபூஜஹ்ல் தனது தூதுச் செய்தியில் குறிப்பிட்டிருந்தான்.

அபூஜஹ்லின் செய்தியை அறிந்து கொண்ட ஹபீப், உடன் புறப்பட்டு மக்கா வந்து சேர்ந்தார். அபூஜஹ்ல் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். மக்கத்து நிலைமைகளை அவருக்கு விளக்கினான். அபூஜஹ்லின் செய்தியைக் கேட்ட ஹபீப், நண்பரே! உங்கள் தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு முடிவு செய்ய இயலாது. எதிர்தரப்பு வாதத்தின் நியாயங்களையும் கேட்ட பின்புதான் முடிவு கூற இயலும் என்று கூறினார். இவரின் முடிவு அபூஜஹ்லுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. முடிவு எதிராக வந்துவிடுமோ என்று அஞ்சினான். ஆனால், ஏதும் செய்ய இயலாது தவித்தான்.

நான் யமனிலிருந்து வந்துள்ளேன். தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன் என்று ஹபீப் நபியவர்களுக்கு செய்தி அனுப்பினார்.

ஹளரத் ஸித்தீக்குல் அக்பர் செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு சகிதம் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஹபீபின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள். நபியவர்களைக் கண்டதும் சபை நிசப்தமானது. ஒருவிதமான அச்ச நிலை அங்கு காணப்பட்டது. எவரும் வாய்திறக்கவில்லை. சற்று நேர இடைவெளிக்குப் பின் நபியவர்கள் பேசினார்கள்.

ஹபீப் அவர்களே! எங்களை நீங்கள் அழைத்த நோக்கம்தான் என்ன? அவர் எதுவும் பேசத்திராணியற்றவர் போலானார். நீங்கள் நபி என்று வாதிப்பதாகக் கேள்விப்பட்டேன். நபி என்பவர் முஃஜிஸாத் அற்புதத்தைக் காட்ட வேண்டும் என்றார்.

நீங்கள் எப்படியான அற்புதத்தை எதிர்பார்க்கின்றீர்கள் என்று திருநபியவர்கள் கேட்க, நான் கேட்கும் அற்புதம் எதுவாயினும் சம்மதமா? என்று ஹபீப் கேட்டார். தாராளமாக! என்று தாஹா நபியவர்கள் கூறினார்கள். ஹபீப் பேசினார், நான் இரண்டு அற்புதத்தை எதிர்பார்க்கின்றேன். ஒன்று, இன்று முழு நிலா! தனது ஒளியை பிரகாசமாக பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது. அதனை இரண்டாகப் பிளக்க வேண்டும் என்றார்.

ஸபா என்ற மலைக்குன்றின் பக்கம் வாருங்கள் என்று நபியவர்கள் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் திரண்டு ஸபா பக்கம் சென்றனர். சந்திரனை நோக்கி சுந்தர நபி விரலசைத்தார்கள். சந்திரன் இரண்டாகப் பிளந்தது. ஒரு பாதி மலையின் ஒரு பக்கமாகவும், மறு பாதி மலையின் மறு பக்கமாகவும் வலம் வந்தன. பின் இரண்டும் இணைந்து ஒன்று சேர்ந்தன.

நீங்கள் விரும்பும் அடுத்த அற்புதம் யாது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதனை நீங்களே கூறவேண்டும் என்றார் ஹபீப்! சொல்கின்றேன் கேளுங்கள்!

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றாள். அது ஒரு முண்டம், கையில்லை, கால் இல்லை, கண் இல்லை, செவியும் கிடையாது. அக்குழந்தை நலம் பெற வேண்டும் என்று விரும்புகின்றீர்! நீங்கள் இல்லம் செல்லுங்கள். அவள் நலம் பெற்று விடுவாள் என்றார்கள் நபியவர்கள். இதைக் கேட்டதும் ஹபீப் நிலை குலைந்து போய்விட்டார்.

உடலெல்லாம் புல்லரித்துப் போன ஹபீப் புகன்றார். அபூஜஹ்லே நன்கு கேள்! உமையாவே நன்கு கேள்! மக்கத்து வாசிகளே! மக்கத்து வீட்டின் சுவருக்குப் பின் ஒளிந்திருப்பவர்களே! நன்கு காது தாழ்த்திக் கேளுங்கள்! நான் மனதாரக் கூறுவதைக் கேளுங்கள்!

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராகும் என்று சாட்சியம் பகர்கின்றேன்.

நான் உள மகிழ்வுடன் இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். யமனில் இஸ்லாத்தைப் போதிக்கும் சத்திய போதகராகவே யமன் செல்வேன் என்று செப்பிவிட்டு ஆனந்தத்தோடு இல்லம் விரைந்தார். வீடு வந்து சேரும் வேளை இருட்டாகிவிட்டது.

கதவைத் தட்டினார் ஹபீப்! முண்டமாக முடங்கிக் கிடந்த மகளே எழுந்து வந்து, அஷ்ஹது அல்லாயிலாக இல்லல்லாஹு வஅஷ்அதுஅன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ்! என்ற திருக்கலிமாவை மொழிந்த வண்ணம் கதவைத் திறந்தாள். மகளே! இக்கலிமாவை உனக்குச் சொல்லித்தந்தது யார்? நீ எப்படி நலம் பெற்றாய்? என்று வியப்புடன் கேட்டார் ஹபீப்.

மகள் மொழிந்தாள்.

நான் உறங்கிக் கொண்டிருந்தேன். மதியைப் பழிக்கும் ஒருவரைக் கனவில் கண்டேன். உமது தந்தை மக்காவில் கலிமாவை மொழிந்து இஸ்லாமாகிவிட்டார். நீயும் கலிமா மொழிந்து இஸ்லாமாகிவிடு! என்று கூறினார். நான் கலிமாவை மொழிந்தேன்! குணமாகி விட்டேன்! கனவில் மொழிந்த கலிமா நாவில் தவழ்ந்துகொண்டே இருக்கின்றது என்றாள்.

இது றூஹானி, ஈமானி உறவாகும், கல்பும், உறவும் அருள்பெறும் வழிகள். அதனால் நல்லோர் உறவில் இருக்க வேண்டும். தீயோரின் உறவை தவிர்க்க வேண்டும். உடலாலும், உள்ளத்தாலும் விலகியிருக்க வேண்டும். அவர்கள் அவைக்குச் செல்வதோ, அவர்கள் பேச்சைக் கேட்பதோ, அவர்கள் நூற்களைப் படிப்பதோ கூடாது. இவையெல்லாம் தீமையைத் தடுக்கும் வழிகளாகும்.

கன்ஆன் நபியின் மகன், காபிர்கள் உறவு அவனையும் காபிராக்கி விட்டது. ஹளரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு தௌராத் வேதத்தின் ஒரு பிரதியை படித்துக் கொண்டிருந்ததை நபியவர்கள் வெறுப்புடன் நோக்கினார்கள். அதனால் வழிதவறியவர்களின் உறவிலிருந்து விலகியிருப்பதனால் மாத்திரமே ஈமானுடன் இருபதியிலும் நலமாக வாழ முடியும்!


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை